You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ஆர்ஆர் பாலிவுட் படமா? ஆஸ்கர் தொகுப்பாளருக்கு எதிராக இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல், ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் திரைப்படம் என்று குறிப்பிட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
95-ஆவது அகாடெமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இன்று நடைபெற்றது. இதில், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் அசல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய திரைப்பட பாடல் என்ற சாதனையை நாட்டு நாட்டு பாடல் படைத்துள்ளது.
ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டுக் கூத்து' பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் தங்கள் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு வேகம் சேர்த்துள்ளனர்.நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பில் தேஜாவின் மெட்டுகளால் பாடலை வேறு லெவலுக்கு கொண்டு சென்றனர்.
சிறந்த அசல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது, சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருது, ஆன்லைன் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது, ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த அசல் பாடல், ஹூஸ்டன் திரைப்பட விமர்சகர்கள் விருது உட்பட ஏராளமான விருதுகளை இப்பாடல் ஏற்கனவே வென்றுள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற அகாடெமி விருது விழாவில் பாடகர்கள் காலபைரவா, ராஹுல் சிப்லிகுஞ்ச் ஆகியோர் நாட்டு நாட்டுப் பாடலை நேரடியாக பாடினர். நடன கலைஞர்கள் இதற்கு நடனமாடினார்.
ஆர்ஆர்ஆர் குறித்து ஜிம்மி கிம்மல் கூறியது என்ன?
அகாடெமி விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் தொடக்க உரையை ஆற்றிக்கொண்டிருந்தபோது, இந்த ஆண்டு யாராவது நீண்ட நேரம் உரையாற்றினால் நாங்கள் அவர்களை வெளியேற்ற மாட்டோம். அதற்கு பதிலாக, ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடனமாடிய நடனக்கலைஞர்கள் உள்ளனர்.
அவர்கள் உங்களை வெளியேற்றுவார்கள் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். அப்போது, ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. நடனமாடிகொண்டே வந்த சிலர் ஜிம்மி கிம்மலை சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர்களை ‘பாலிவுட் டான்ஸர்ஸ்’ என்று ஜிம்மி கிம்மல் குறிப்பிட்டார். இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தை அவர் பாலிவுட் படம் என்று கூறியதாக சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட தொடங்கினர்.
ஒரு தெலுங்கு திரைப்படம். பாலிவுட் அல்ல என்பதை ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு நட்பு ரீதியாக நினைவூட்டுகிறேன். இந்தியாவில் இருந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் பாலிவுட் அல்ல. பிராந்திர திரைப்படங்களுக்கும் அதற்கான அங்கீகாரம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், இந்தியாவில் வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு திரைப்பட துறைகள் உள்ளன. இந்தியாவில் இந்தி அதிகம் பேசப்படுவதால் பாலிவுட் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆர்ஆர்ஆர் தென்னிந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிம்மி கிம்மல் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்கவில்லை என்பதும் அப்படத்தை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதும் தெளிவாகிறது என்று பயனர் ஒருவர் தனது பதிவிலில் கூறியுள்ளார்.
ஆர்ஆர்ஆர் தெலுங்கு படமாக இருக்கும்போது ஏன் அதனை பாலிவுட் திரைப்படம் என்று கூறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மேற்கு உலகில் போதிய அங்கீகாரம் இல்லை என்று மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
பயனர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஆர்ஆர்ஆர் தென்னிந்திய திரைப்படம், தெலுங்கு திரைப்படம், டோலிவுட். சிலர் கூறுவது போன்று பாலிவுட் படம் அல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம்- ராஜமௌலி
கடந்த ஜனவரி மாதம் டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் உரையாடிய எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘இந்திய திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் பாடல்கள், சண்டைக்காட்சிகள் இதிலும் இருக்கும். ஆனால், வித்தியாசம் என்னவென்றால் இது பாலிவுட் திரைப்படம் அல்ல. தென் இந்தியாவைச் சேர்ந்த தெலுங்கு திரைப்படம். படத்தை மேலும் முன்னோக்கி எடுத்து செல்வதற்காக நான் பாடல்களை பயன்படுத்தியுள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்