EWS இடஒதுக்கீடு வரலாறு: எம்ஜிஆர் பொருளாதார வரையறையை நீக்கியது ஏன்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இடஒதுக்கீட்டில் பொருளாதாரம் என்ற அம்சத்தை புகுத்துவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 1970களின் இறுதியிலேயே பொருளாதார அளவுகோல் முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவாக இருந்தது?

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை முன்னேற்ற சிறப்புச் சலுகைகளை அளிப்பதை இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 15(4), 16(4) அனுமதிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தன.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு, மத்திய அரசும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை இந்த பிரிவு அளிக்கும் அனுமதியின் பேரிலேயே அளிக்கிறது.

இந்தப் பிரிவு பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை ஏற்கவில்லை. ஆகவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு இதற்காகத் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் அனுமதிக்கும் வகையில் மாற்றப்பட்டது. அதன்படியே இப்போது மத்திய அரசின் பணிகளிலும் சில மாநிலங்களிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்குவதோ, அதற்கென ஒரு பொருளாதார அளவுகோலை நிர்ணயிப்பதோ எப்போதுமே பிரச்னைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.

மத்திய அரசு வழங்கும் 27 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டைப் பெற வருவாய் வரம்பு ஏதுமில்லை.

ஆனால், 70களின் இறுதியில் தமிழ்நாடு அரசு இதுபோல வருவாய் வரம்பை நிர்ணயிக்க முயற்சி செய்தது.

தமிழ்நாடும் இடஒதுக்கீடு வரலாறும்

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கென ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்றங்கள் இயங்க ஆரம்பித்ததில் இருந்தே இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அதன்படி 1921 செப்டம்பரில் இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

1927இல் இருந்து இடஒதுக்கீடு அமலில் வந்தது. ஆகவே, தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 95 ஆண்டுகளாக இடஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. சம்பகம் துரைராஜன் வழக்கின் தீர்ப்பு காரணமாக, கம்யூனல் ஜி.ஓ. ரத்து செய்யப்பட்டு, இடஒதுக்கீடு தடைபட்ட நிலையில், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பையும் ஒரு காரணமாக வைத்து இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

இந்த முதலாவது சட்டத் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடும் பட்டியலினத்தருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. சம்பகம் துரைராஜன் வழக்கிற்கு முன்பாக பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்த நிலையில், புதிய இட ஒதுக்கீடு முறையில் அவை நீக்கப்பட்டன.

1971இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாகவும் பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு அறிமுகம்

இந்திய அரசியலமைப்பில் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டபோது, "சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியோருக்கு" என்பதோடு, 'பொருளாதார ரீதியாகவும்' என்பதைச் சேர்க்க வேண்டுமென பலரும் வலியுறுத்தினர்.

ஆனால், இது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்வுக் குழு இதனை ஏற்க மறுத்துவிட்டது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கரும் பிரதமர் ஜவாஹர் லால் நேருவும் கூட சலுகைகள் வழங்க ஜாதியே அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை முன்வைத்தனர்.

ஆகவே, 'பொருளாதார ரீதியாக' என்ற வார்த்தை முதலாவது திருத்தத்தில் இல்லை. அந்தத் தருணத்தில் இருந்தே, பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்துவது என்பது பல்வேறு வகைகளில் முயற்சிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், 1979ல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார்.

1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இதற்கான ஆணை (M.S. no. 1156) வெளியிடப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே, தி.மு.கவும் தி.கவும் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்தன. ஆனால், சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படியே இதனைச் செயல்படுத்துவதாகச் சொன்னார்.

மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970ல் அளித்தது.

ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள முன்னேறிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினருடன் போட்டியிடாதவகையில் செய்யப்படாவிட்டால், சமூக நீதி என்பதை அடைய முடியாது" எனக் குறிப்பிட்டது.

இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்களை எப்படி அடையாளம் காண்பதை என்பதை வரையறுக்கும்படி இந்த ஆணையத்திடம் கேட்கப்படவில்லை என்றாலும்கூட, தனது வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இந்தப் பரிந்துரையை ஆணையம் முன்வைத்தது.

அந்த ஆணையத்தை அமைத்த மு. கருணாநிதி தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை. ஆனால், பொருளாதார வரம்பை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். அரசு, ஏ.என். சட்டநாதன் கமிஷன் பரிந்துரையை மேற்கோள் காட்டியதோடு, கேரள அரசின் ஆணை ஒன்றையும் சுட்டிக்காட்டியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற கேரள அரசு 10,000 ரூபாயை வருவாய் வரம்பாக நிர்ணயித்திருந்தது. இதைச் சுட்டிக்காட்டினார் எம்.ஜி.ஆர்.

எரிக்கப்பட்ட அரசாணை

எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை ஆரம்பித்து சில மாதங்களில், 1973லேயே இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்துவது குறித்தும், அதில் பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தனது MGR: A Life நூலில் குறிப்பிடுகிறார் ஆர். கண்ணன். எம்.ஜி.ஆரின் பொருளாதார அளவுகோல் முறைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திராவிடர் கழகம், சமூக ரீதியிலான ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாண, பொருளாதார ரீதியிலான ஒரு அளவுகோலை வைப்பது சரியல்ல என்றது.

தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும் நடத்தியது. அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் அந்த அரசாணை எரிக்கப்பட்டு, சாம்பல் அரசுக்கு அனுப்பப்பட்டது.

சென்னையில் மிகப் பெரிய மாநாடு ஒன்றையும் நடத்தியது திராவிடர் கழகம். ஜூலை 14ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டிய தி.மு.க. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பொருளாதார வரையறை செல்லுமென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில் இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைக்க, அ.இ.அ.தி.மு.க. ஜனதா மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றிபெற முடிந்தது.

எம்ஜிஆர் பிறப்பித்த உத்தரவு

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவும் இதற்கு ஒரு காரணம் எனக் கருதிய எம்.ஜி.ஆர்., 1980 ஜனவரி 19ஆம் தேதி இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள், பொருளாதார அளவுகோலை நீக்கும்படி வலியுறுத்தின.

இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை நீக்கி அரசாணை (G.O. M.S. 72) பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆர். அதோடு நிற்கவில்லை. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இன்னொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீடு, 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த எந்த அடிப்படையும் இல்லை என வழக்குத் தொடர்ந்தோர் வாதிட்டனர்.

ஆகவே, இதுபோல இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்துவதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என்பதை ஆராய ஒரு சுயேச்சையான அமைப்பை உருவாக்குபடி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இடஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதமாக உயர்த்தியது சரி எனக் கூறியது. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: