இட ஒதுக்கீடு உச்ச வரம்பை அதிகரிக்க முயலும் மகாராஷ்டிரா, பிகார், ராஜஸ்தான் - தமிழ்நாட்டை பின்பற்றுகின்றனவா?

    • எழுதியவர், பிராச்சி குல்கர்னி
    • பதவி, பிபிசி மராத்திக்காக

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓபிசி இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதாக ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார்.

தற்போது, ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு விகிதம் 64 சதவீதமாக உள்ளது. அதை மேலும் 6 சதவீதம் உயர்த்துவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். எனவே இந்த இடஒதுக்கீடு 70 சதவீதமாக உயரும்.

இதைத் தவிர, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒரு சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு 50 சதவீத உச்சவரம்பு பிரச்னையில் சிக்கியிருக்கும்போது, ராஜஸ்தான் எப்படி தமிழ்நாட்டைவிட அதிக இடஒதுக்கீடு கொடுக்கிறது?

இதில், தமிழ்நாடு எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கிறது? மகாராஷ்டிரா, பிகார் மற்றம் ராஜஸ்தான் மாநில அரசுகள் தமிழ்நாட்டை பின்பற்றுகின்றனவா?

ராஜஸ்தான் மற்றும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு விவகாரம் ராஜஸ்தானில் புதிதல்ல. 2008இல் குஜ்ஜார் மக்களின் இட ஒதுக்கீடு இயக்கம் இட ஒதுக்கீட்டிற்காக கடுமையாகப் போராடியது. இந்த இயக்கத்தின் போராட்டம் வன்முறையாகவும் மாறியது.

அப்போதிருந்து, ராஜஸ்தானில் சாதி சமன்பாடு மாறிக்கொண்டே இருந்தது.

தற்போது குஜ்ஜார்களுக்கு ராஜஸ்தானில் ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு உள்ளது. குஜ்ஜார் சமூகத்தினர் தங்களை எஸ்டியில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர்.

மீனா சமூகத்தினர், எஸ்டி பிரிவில் இருந்து இட ஒதுக்கீடு பெறுகின்றனர். 2017ஆம் ஆண்டில், ராஜஸ்தான் 1 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்காக ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது, ராஜஸ்தானில் உள்ள 64 சதவீத இட ஒதுக்கீட்டில், 21 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கும், 16 சதவீதம் எஸ்சி பிரிவினருக்கும், 12 சதவீதம் எஸ்டிகளுக்கும், 10 சதவீதம் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள முனனேறிய வகுப்பினருக்கும், 5 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 64 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, கெலாட் தலைமையிலான அரசு ஓபிசி பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது.

மேலும், பிகார் மாநிலத்தைப் போல, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போவதாகவும் கெலாட் அறிவித்தார். அக்டோபர் மாதத்தில், ராஜஸ்தான் அரசும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் என்ன நிலைமை?

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடுதான் இதுவரை நாட்டிலேயே அதிகபட்ச இட ஒதுக்கீடாகக் கருதப்படுகிறது. இந்த 69 சதவீத இடஒதுக்கீடு, இந்திய அரசமைப்பில் 9வது அட்டவணையின் கீழ் வழங்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு சதவீதத்தையும் தாண்டி, 70 சதவீதமாக இருக்கும். 1992இல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, பல மாநில அரசுகள், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த முயன்றன.

ஹரியானா, தெலக்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், அவ்வப்போது, இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டன.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு தற்போது வரை அவ்வபோது சிக்கல்கள் வருகின்றன. அவை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன. சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

கடந்த 2000ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேசத்தில், எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவித்து, அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மத்திய பிரதேசம் அரசு வேலைகளில் 73 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முயன்றது. ஆனால், இந்த முடிவை அம்மாநில உயர்நீதிமன்றமே ரத்து செய்தது.

மகாராஷ்டிராவில் தற்போது 52 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கிட்டையும் சேர்த்தால், மொத்த இட ஒதுக்கீடு சதவீதம் 62 ஆக உயரும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு வரம்பை 75 சதவீதமாக உயர்த்துவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

ராஜஸ்தானை போலவே, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற புதிய பிரிவை உருவாக்கி, அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முயன்றது. ஆனால், இந்த முடிவையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.

ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு வரம்பு எப்படி அதிகரிக்கும்?

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஒருபுறம் குஜ்ஜார் மக்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். மறுபுறும், பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் தங்கள் சமூகத்தினருக்கான இட ஒதுக்கிட்டை அதிகரிக்கக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது.

இட ஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருந்தபோதிலும், இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், இடஒதுக்கீடு உச்சவரம்பை அதிகரிக்க முடியும் என நம்பிக்கையுடன் உள்ளர்.

ஓபிசி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருபவர்களில் ஒருவரான சுனில் சௌத்ரி பிபிசியிடம் பேசினார்.

அப்போது அவர், “ராஜஸ்தானில் ஏற்கெனவே 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வரம்பு கடந்துவிட்டது. இப்போது இட ஒதுக்கீடு 64 சதவீதமாக உள்ளது. எனவே, இதை மேலும் அதிகரிப்பதில் சிக்கல் இருக்காது என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இந்த இடஒதுக்கீடு பூர்வீக ஓபிசியினருக்கே இருக்கும் என்று கெலாட் கூறுகிறார். எனவே, புதிய சர்ச்சை உருவாகலாம்,” என்றார்.

குஜ்ஜார் இயக்கத் தலைவர் ஹிம்மத் சிங் குஜ்ஜார், பிபிசியிடம் பேசுகையில், "பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக 50 சதவீத உச்ச வரம்பு மீறப்பட்டுள்ளது. எனவே, இந்திரா சஹானி தீர்ப்பு குறித்த கேள்வியே இல்லை" என்றார்.

ஆனால், கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், குஜ்ஜார் சமூகத்தினரின் எண்ணிக்கை 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களுக்குத் தற்போது 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதனால், இட ஒதுக்கீடு வரம்பை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பால் சரியான எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும் மற்றும் அதற்கேற்ப கொள்கைகளை முடிவு செய்யலாம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்,” என்றார்.

ஆனால், ராஜஸ்தானில் இடஒதுக்கீடு வரம்பை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் ராஜஸ்தான் பத்திரிகையாளர்கள். அடிப்படையில் முந்தைய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

பத்திரிக்கையாளர் அவினாஷ் கல்லா கூறுகையில், “முன்பு இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்க முயன்றபோது அது சட்ட சிக்கலில் இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்யாவிட்டாலும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இப்போது 6 சதவீத அறிவிப்பும், காங்கிரஸ் திட்டங்களைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் செய்கின்றனர். அதனால்தான், தேர்தலுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீட்டைக் கொடுக்க முடியுமானால், அதை முன்பே கொடுத்திருக்கலாம்,” என்றார்.

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு எப்படி சாத்தியமானது?

இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்திற்கு மேல் போனால், அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவுக்குமுரணாக இருக்கும் என 1992இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னர், 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நீடிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிறகு, இதுதொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 31 சி-யின் கீழ் சட்டம் இயற்றலாம் எனத் தெரிவித்தார். 31 சியின் கீழ் சட்டம் இயற்றப்பட்டால், அது அரசமைப்பு சட்டப் பிரிவுக்கு முரணாக உள்ளது எனக் கூற முடியாது என முன்னாள் நீதியரசர் வேணுகோபாலும் அப்போது ஆலோசனை வழங்கினார்.

பின்னர்,1993ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை, இட ஒதுக்கீட்டிற்கான தனிச் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்,1994 ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவை சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஒப்புதல் வழங்கினார்.

இருப்பினும், இந்தச் சட்டத்தை ஆராய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என்பதால், இதை பிரிவு 31 (பி)ன்கீழ், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையின் கீழ்கொண்டுவர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்தச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 1994 ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அப்போதிருந்து, தமிழ்நாட்டில் இந்த 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக 2013 தனி நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்கு தொடர்ந்து வருகின்றன. அந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டில், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 சதவீதம் பட்டியல் சாதியினருக்கும் மற்றம் ஒரு சதவீதம் பட்டியல் பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)