சஞ்சய் சிங்கிற்கு எதிர்ப்பு: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம்

பட மூலாதாரம், Getty Images
பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்திய அரசு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது.
சமீபத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக அறிவித்தார் சாக்ஷி மாலிக். மேலும், தனது பத்ம ஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க போவதாக கூறினார் பஜ்ரங் புனியா.
சஞ்சய் சிங்கின் முழு குழுவும் வெற்றி பெற்றது என்றும், நல்ல பெரும்பான்மை கிடைத்துள்ளதாகவும் பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் மருமகன் விஷால் சிங் கூறியிருந்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்வாகியிருந்த சஞ்சய் சிங், "இனிமேல் மல்யுத்தத்திற்கான முகாம்கள் நடத்தப்படும்... மல்யுத்தம் செய்ய விரும்புபவர்கள் மல்யுத்தம் செய்யவேண்டும்; அரசியல் செய்ய விரும்புபவர்கள் அரசியல் செய்ய வேண்டும்," எனக் கூறியிருந்தார்.
அரசியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி சஞ்சய் சிங் சுட்டிக்காட்டிய சர்ச்சை, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பெண் வீரர்கள் கூறிய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பானது.
இந்த வழக்கில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, 354-டி மற்றும் 506 (1) போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI
சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பல வாரங்கள் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, வீரர்கள் டெல்லி போலீசாருடன் சண்டையிட்டனர், அதன் பிறகு அவர்கள் தங்கள் பதக்கங்களை வீசிவிடுவதாக எச்சரித்தனர்.
ஆனால் அதே நேரம், இந்த வழக்கில் சிங் மற்றும் அவரது கூட்டாளி வினோத் தோமர் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் வழங்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகார்தாரர்கள் அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது ஆசை வார்த்தை கூறிக் கவர்ந்திழுக்கவோ கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பட மூலாதாரம், Deblin
மேலும், இந்த வழக்கில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை டெல்லி காவல்துறை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஏனெனில் ஜாமீன் வழங்கும் போது, அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவாவிடம், "அவர்களுக்கு ஜாமீன் அளிப்பதில் உங்கள் நிலைப்பாடு என்ன? மனுவை எதிர்க்கிறீர்களா?" என்று நீதிமன்றம் கேட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என அப்போது தெரிவித்தார்.
இதற்குப் பிறகு நீதிபதி, "நீங்கள் (டெல்லி காவல்துறை) ஜாமீன் மனுவை எதிர்க்கிறீர்களா, இல்லையா?" எனக்கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர், “இருவருக்கும் ஜாமீன் வழங்க எந்த எதிர்ப்பும் இல்லை” என்று கூறியிருந்தார். “சட்டப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்,” என்றும் அப்போது அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங் டெல்லி காவல்துறையை விமர்சித்திருந்தார்.
“பிரிஜ் பூஷன் சிங் வழக்கில், விசாரணையில் அவர் செல்வாக்கு செலுத்துவது மட்டுமின்றி சாட்சியங்களை சிதைத்து, நேரடியாக சாட்சிகளை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. காவல்துறையினர் இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவேண்டும்," என்றார்.

பட மூலாதாரம், INSTAGRAM/ANITASHEORAN_WRESTLER
தேர்தலில் தோற்றுவிட்ட மல்யுத்த வீரர் என்ன சொன்னார்?
பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங்கிடம் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் அனிதா ஷியோரன் ஆவார். அவர் ஒரு மல்யுத்த வீரராகவும் இருந்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த அனிதா ஷியோரன், அம்மாநில காவல் துறையில் பணியாற்றி வருகிறார். ஆனால் ஒடிசா பிரிவின் பிரதிநிதியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்களில் அனிதா ஷியோரனும் சாட்சியாக இருந்தார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஷியோரான், "நாங்கள் எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினோம். அவ்வளவு கடினமான போராட்டம் நடத்தியும் நாங்கள் எதிர்பார்த்த பலன் இன்னும் கிடைக்கவில்லை. எங்களைப் போலவே அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. நாங்கள் பெண்களுக்காக போராடுகிறோம்," என்றார்.
ஆனால் எந்த மாற்றத்தையும் மல்யுத்த வீரர்களின் கூட்டமைப்பு ஏற்கவில்லை என்றும், இருப்பினும் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார் அவர். “அநீதிக்கு எதிராக அமைதியாக இருக்க மாட்டோம். ஆனால், இப்போது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லை."

பட மூலாதாரம், ANI
அதே நேரம், கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளுக்கு எந்த வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது குறித்து விஷால் சிங் கூறுகையில், "கடந்த சில நாட்களாக மல்யுத்தத்தில் என்ன பிரச்னை ஏற்பட்டாலும், மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாக மாற்றம் சுமூகமாக உள்ளது என்று உறுதியாகக் கூறப்படுகிறது," என்றார்.
"எங்கள் வீரர்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆனால் இது போன்ற பிரச்னைகளின் காரணமாக அவர்களால் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. தகுதியின் அடிப்படையில் வீரர்கள் மதிப்பிடப்படாவிட்டால், அரசியலால் யாராவது பயனடைந்தால், அந்த வீரர்கள் இழப்பை எதிர்கொள்ள நேரிடும்.”
மல்யுத்த போட்டிகளை விட்டு வெளியேறிய சாக்ஷி மாலிக்

பட மூலாதாரம், ANI
சஞ்சய் சிங் வெற்றி பெற்ற செய்தி வெளியானவுடன் டெல்லியில் உள்ள பிரஸ் கிளப்பில் மல்யுத்த வீரர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அதே செய்தியாளர்கள் சந்திப்பில், சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அப்போது பேசிய சாக்ஷி மாலிக், "இன்னும் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர், பிரிஜ் பூஷனின் நண்பர், தொழில் கூட்டாளி என்பதுடன் அவரைப் போன்ற ஒரு நபராகவே இருந்தால்,அவர் இந்த கூட்டமைப்பில் நீடித்தால், நான் எனது மல்யுத்தக் கனவை விட்டுவிடுவேன். இன்றைக்குப் பிறகு என் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். என்னை அங்கே பார்க்கவே முடியாது," என்றார்.

பட மூலாதாரம், NIDHI
அதன் பின், அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஷுக்களைக் கழற்றி மேசை மீது வைத்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய போது, மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் கூறுகையில், "நியாயத்துக்காகப் போராடினோம். முழு மனதுடன் போராடினோம்... 40 நாட்கள் தெருக்களில் தூங்கினோம்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். எனக்கு இன்றுவரை மிகவும் ஆதரவளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி," என்றார்.

பட மூலாதாரம், ANI
பிரிஜ் பூஷன் சரண் சிங் என்ன சொன்னார்?
சாக்ஷி மாலிக்கின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பதில் அளித்தார்.
அப்போது, “சாக்ஷி மாலிக்கின் இந்த முடிவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” எனக்கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்த வெற்றிக்கான பெருமையை இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கும், இந்திய மல்யுத்த சம்மேளன செயலாளருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன். புதிய சம்மேளனம் உருவான பிறகு மீண்டும் மல்யுத்த போட்டிகள் தொடங்கும் என நம்புகிறேன்,” என பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ விருதை திருப்பியளிக்கிறார் பஜ்ரங் புனியா

பட மூலாதாரம், ANI
ஒலிம்பிக் விருது பெற்ற பஜ்ரங் புனியாவும், சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தனது பத்ம ஸ்ரீ விருதை இன்று(வெள்ளி) மாலை பிரதமரிடம் திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ள அவர், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அதில் இணைத்துள்ளார்.
தனது கடிதத்தில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக விளையாட்டு வீராங்கனைகள் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு குறித்து விவரித்துள்ளார் பஜ்ரங் புனியா.
மேலும் அதில், “ எப்போதெல்லாம் நாங்கள் வெவ்வேறு நிகழ்வுகளுக்கு செல்கிறோமோ, அப்போதெல்லாம் மேடையில் எங்களை அழைப்பவர் பத்மஸ்ரீ, கேல் ரத்னா மற்றும் அர்ஜுன் விருதாளர்கள் என்று அறிவிப்பார்கள். அப்போது மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கைதட்டி மகிழ்வார்கள். இவ்வளவு மரியாதை இருந்தும்கூட இப்போது யாராவது என்னை அப்படிக் கூப்பிட்டால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது. "ஒவ்வொரு பெண் மல்யுத்த வீராங்கனையும் வாழ விரும்பும் மரியாதையான வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது."
ஒலிம்பிக் மற்றும் பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்ற இந்த மல்யுத்த வீரர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வநதனர். கடந்த மே மாதம் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் அறிவித்தனர். ஆனால், விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித் தலையீட்டினால் அந்த முடிவை அவர்கள் கைவிட்டனர். பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டுமென்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












