You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் மீது பாலியல் வல்லுறவு புகார் அளிக்க முடியுமா? உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?
- எழுதியவர், அர்விந்த் சப்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பஞ்சாபில் 62 வயது பெண் மற்றொரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்து, ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா என்ற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் எழுந்துள்ளது.
இந்தப் பெண் தன்னைக் கைது செய்யக்கூடாது என்பதற்காக ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அந்தப் பெண் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
இறுதி முடிவு நிலுவையில் உள்ளதால், அவர் கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணையில் இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக வாதாடிய அவரது வழக்கறிஞர், 2006ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை மேற்கோள் காட்டினார்.
அந்த வழக்கில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
பாலியல் வல்லுறவை ஒரு ஆண் மட்டுமே செய்ய முடியும் - நீதிமன்றம்
சட்டப்பிரிவு 375ஐ பொறுத்த வரையில் ஒரு ஆணால் மட்டுமே பாலியல் வல்லுறவை செய்ய முடியும் என்பது தெளிவாகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞரால் மேற்கோள் காட்டப்பட்ட 2006ஆம் ஆண்டு வழக்கானது மத்திய பிரதேசத்தில் சாகர் என்ற இடத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பானது. பாதிக்கப்பட்ட பெண் அந்தப் பகுதியில் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்திருக்கிறார்.
அவர் தான் இறங்கும் இடத்தை அடைந்தபோது, ஒரு நபர் அவரை ரயில் நிலையத்தில் சந்தித்ததாகவும் அந்த நபர் தனது தந்தை தன்னை அழைத்து வரச் சொன்னதாகக் கூறியதாகவும் அந்தப் பெண் கூறுகிறார்.
அன்று அந்தப் பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த நபர் கூறியதை நம்பி அவருடன் சென்ற அந்தப் பெண்ணை அந்த நபர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு வைத்து அந்தப் பெண்ணை அவர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த நபரின் மனைவி அங்கு வந்ததாகவும், அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அந்தப் பெண் அவரை அறைந்து, வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.
பாதிப்பட்ட பெண் அந்த நபர் மற்றும் அவரின் மனைவி மீது பாலியல் வல்லுறவு புகார் அளித்தார். இந்தப் புகாரை எதிர்த்து அந்தப் பெண் மேல் முறையீடு செய்தபோது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.
உச்சநீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்குச் சாதகமாக தீர்ப்பு கூறும்போது, "பாலியல் வல்லுறவு குற்றத்திற்கான இந்திய தண்டனைச் சட்ட பிரிவான பிரிவு 375இல் ஆணுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 376(2)இல் தீவிரமான பாலியல் வல்லுறவுக்கான தண்டனை குறித்துக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் கூட்டுப் பாலியல் வல்லுறவு," என உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும், "ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டால், அனைவர் மீதும் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது," என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் "ஒரு பெண் மீது பாலியல் வல்லுறவு செய்ததாகக் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால், இது சாத்தியமற்றதாகப் பார்க்கப்படுகிறது" என உச்சநீதிமன்றம் கூறியது.
எனவே, பிரிவு 376 (2)(g)இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக மேல்முறையீடு செய்த பெண் மீது வழக்குத் தொடர முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
பிரிவு 375 என்ன சொல்கிறது?
ஐபிசியின் 375வது பிரிவின்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு சூழ்நிலைகளில் ஒரு பெண்ணுடன் ஒருவர் உடலுறவு கொண்டால், அது பாலியல் வல்லுறவாகக் கூறப்படுகிறது.
- பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக
- பெண்ணின் சம்மதம் இல்லாமல்
- பெண்ணின் சம்மதத்துடன், ஆனால் மரணம் அல்லது தீங்கு பயத்தில் அவரை வைத்து அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவரைக் காயப்படுத்தவதாக மிரட்டுவதன் மூலம் உடலுறவில் ஈடுபடுவது
- பெண்ணின் சம்மதத்துடன், ஆனால் அந்த ஆண் திருமணமானவர் என்பதை மறைத்திருந்தால்
- பெண்ணின் சம்மதத்துடன், ஆனால் உடலுறவின்போது பெண்ணின் மனநிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அவர் எதாவது போதைப் பொருளின் தாக்கத்தில் இருந்தாலோ அல்லது சம்மதம் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை அந்தப் பெண் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லாமல் இருந்தாலோ
- 16 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவது
விதிவிலக்கு - மனைவி 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், கணவன் அவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படாது.
தற்போது பஞ்சாபில் நடந்த வழக்கில் என்ன நடந்தது?
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண், பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் வசிப்பவர். தனக்கும் அமெரிக்காவில் வசிக்கும் மன்பிரீத் சிங்குக்கும் ஃபேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டதாக புகாரில் அவர் கூறுகிறார்.
அவர் கூறுகையில், "2022ஆம் ஆண்டில், அவருடைய பெற்றோர் அவரை வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியபோது, மன்பிரீத் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லையெனில் அவர் தனது குடும்பத்தைக் கொன்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்," எனக் கூறினார்.
இதற்குப் பயந்து திருமணத்திற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஆன்லைனில் திருமணம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து மன்பிரீத் வரும் வரை பஞ்சாபில் உள்ள அவர்களது வீட்டில் அந்தப் பெண் தங்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, போர்ச்சுகலில் வசித்து வந்த மன்பிரீத்தின் சகோதரர் ஹர்பிரீத் சிங், இந்தியா திரும்பியபோது அந்தப் பெண்ணிடம் மன்பிரீத்தை விட்டுவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
மன்பிரீத் மற்றும் ஹர்பிரீத் ஆகியோரின் தாயாரும் (இப்போது இவர்தான் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்) அந்தப் பெண்ணை ஹர்பிரீத்தை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண் மறுத்ததால், மன்பிரீத்தின் குடும்பத்தினர் அவரைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
'அறையில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு'
அந்தப் பெண் தனது புகாரில் கூறுகையில், "ஒரு நாள், ஹர்ப்ரீத் மற்றும் அவருடைய தாயார் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். ஹர்ப்ரீத் என்னை இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவு செய்தார்", என தெரிவித்தார்.
மேலும், அவரது நிர்வாணப் படங்களை எடுத்து சமூக ஊ்டகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது பெற்றோரை அழைத்த பிறகு அவர்கள்தான் அவரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை முதலில் செஷன்ஸ் நீதிமன்றமும், பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றமும் கடந்த நவம்பர் மாதம் மன்பிரீத்தின் தாய் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிராகரித்தது.
மனுதாரர் வயதான பெண் என்பது மட்டும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப் போதுமான காரணம் கிடையாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முதல் தகவல் அறிக்கையில் குற்றத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றது குறித்த தெளிவான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.
தற்போது அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இப்போது இந்தப் பெண்ணின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஏன் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு புகார் பதிவு செய்ய முடியாது என்று சொல்ல வேண்டும். அவருக்கு 4 வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் அதிகரித்து வரும் வல்லுறவு சம்பவங்கள்
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, பஞ்சாபில் பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, மாநிலத்தில் பாலியல் வல்லுறவு வழக்குகள் சுமார் 10% அதிகரித்துள்ளன.
கடந்தஆண்டில் 517 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021இல் 464 ஆக இருந்தது. 2021இல் 60 ஆக இருந்த நிலையில், 2022இல் மாநிலத்தில் 42 பாலியல் வல்லுறவு முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 517 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2021ஆம் ஆண்டில், மொத்தம் 464 வழக்குகளில் 10 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)