ஊழியர்களின் மிரட்டலுக்கு பணிந்த OpenAI நிறுவனம் - மீண்டும் சி.இ.ஓ. ஆகிறார் சாம் ஆல்ட்மேன்

    • எழுதியவர், கிறிஸ் வாலன்ஸ், அன்னாபெல் லியாங் & ஜோ க்ளீன்மேன்
    • பதவி, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப செய்தி ஆசிரியர்

ஓபன் ஏஐ இணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன் மீண்டும் அந்நிறுவனத்திற்கு திரும்ப ஒப்புக் கொண்டுள்ளார். நிர்வாகக்குழுவால் நீக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் அவர் தலைமைய செயல் அதிகாரியாகவே வருவார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாகக் குழுவுக்கு புதிய குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.

வெள்ளிக்கிழமையன்று ஆல்ட்மேன் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டது தொழில்துறை வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவரை மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால், ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

"நான் OpenAI நிறுவனத்திற்கு திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று எக்ஸ் பக்கத்தில் அல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

"நான் OpenAI நிறுவனத்தை விரும்புகிறேன், கடந்த சில நாட்களாக இந்த ஊழியர் குழுவையும் அதன் திட்டத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தேன்." என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம், ஆல்ட்மேனை நீக்கும் நிர்வாகக்குழுவின் முடிவு, இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேனின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. இது, ஓபன் ஏஐ செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

சாம் பணி நீக்கத்திற்கு காரணம் என்ன?

"ஓபன்ஏஐ தொடர்ந்து நன்றாக செயல்படுவதை உறுதி செய்வதே சத்யா மற்றும் எனது முதன்மையான முன்னுரிமை" என சாம் ட்வீட் செய்துள்ளார்.

"எங்கள் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது நடந்து வரும் செயல்பாடுகளின் தொடர்ச்சியை முழுமையாக வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் கூட்டணி, இதை சாத்தியமாக்குகிறது."என்றார் சாம்.

செயற்கை நுண்ணறிவின் (AI) முன்னணி நபர்களில் ஒருவரான சாமின் பணிநீக்கம் தொழில்நுட்ப உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடிதத்தில் கையொப்பமிட்ட நூற்றுக்கணக்கான மூத்த ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாங்களே ராஜினாமா செய்வோம் என்று கூறுகிறார்கள்.

ஓபன்ஏஐயின் மிகப்பெரிய முதலீட்டாளரான மைக்ரோசாப்ட், அவர்கள் நிறுவனத்தில் சேர விரும்பினால் அனைத்து ஓபன்ஏஐ ஊழியர்களுக்கும் வேலைகள் இருப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், ஓபன்ஏஐ உடனோ அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வரும் ஓபன்ஏஐ ஊழியர்களுடனோ பணிபுரியத் தான் தயாராக இருப்பதாக சத்யா நாதெல்லா கூறினார்.

"இந்த கட்டத்தில் [ஓபன்ஏஐ இல்] ஆளுகையைச் சுற்றி ஏதாவது மாற வேண்டும் என்பது மிக மிகத் தெளிவாக உள்ளது," என்றும் அவர் கூறினார். இரண்டு நிறுவனங்களும் இதைப் பற்றி தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறினார்.

ஓபன்ஏஐயின் மேலாளரான இவான் மொரிகாவா, “நிறுவனத்தின் 770 தொழிலாளர்களில் 743 பேர் தங்கள் பெயர்களை கடிதத்தில் வைத்துள்ளனர்,” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடிதத்தில் கையெழுத்திட்ட குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் ஓபன்ஏஐயின் தலைமை விஞ்ஞானி இலியா சுட்ஸ்கேவர். அதனால், இவ்விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தான் தவறு செய்துவிட்டதாக அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"வாரியத்தின் செயல்களில் நான் பங்கு பெற்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ஓபன்ஏஐக்கு தீங்கு விளைவிக்க நான் ஒருபோதும் எண்ணவில்லை. நாங்கள் இணைந்து உருவாக்கிய அனைத்தையும் நான் விரும்புகிறேன், மேலும் நிறுவனத்தை மீண்டும் ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த சாம் ஆல்ட்மேன்

கடந்த வார இறுதியில் நடந்த குழப்பமான நிகழ்வுகளில், சாம் ஆல்ட்மேன் தனது வேலையைத் திரும்பப் பெறக்கூடும் எனக் கருதப்படுகிறது

ஆனால், அந்த குழப்பத்திற்கு பிறகு, அவர் மைக்ரோசாப்டில் சேருவதாக அறிவிக்கப்பட்டது. மைக்ரோசாப் நிறுவனம் ஓபன்ஏஐ நிறுவனத்தில் 49% பங்கு அளவிற்கு முதலீடு செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, “ சாம் ஆல்ட்மேன் "ஒரு புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி குழுவை"வழிநடத்துவார்,” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டி

அவரது புதிய வேலையை உறுதிப்படுத்தும் வகையில், நாதெல்லாவின் பதிவுக்கு சாம் பதிலளித்தார். ஆல்ட்மேன் "பணி தொடர்கிறது" என்று பதிவிட்டார்.

"நாங்கள் அனைவரும் ஒன்றாக அல்லது வேறு வழியில் வேலை செய்யப் போகிறோம், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒரு குழு, ஒரு பணி." என அவர் பதிவிட்டார்.

இதற்கிடையில், முன்னாள் டிவிட்ச்(Twitch) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ எம்மெட் ஷியர், ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய தலைவராக இருப்பார்.

இந்தப் பணியை வாழ்கையில், ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்ட விதம் "மிக மோசமாக கையாளப்பட்டது" என்றும் "எங்கள் நம்பிக்கையை கடுமையாக பாதித்தது" என்றும் அவர் கூறினார்.

முப்பத்தி எட்டு வயதான சாம் ஆல்ட்மேன், ஓபன்ஏஐ நிறுவனத்தைத் தொடங்க உதவினார் - பிரபலமான சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் மிகவும் பிரபலமானார். இவர், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர்.

இவ்வளவு உயர்ந்த பதவியில் உள்ள செல்வாக்கு மிக்க நபரின் பதவி நீக்கம், தொழில்துறை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் வழிநடத்திய நிறுவனத்தில் உள்ள அவரது குழு உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்வதால், அவர்களும் கோபத்தில் உள்ளனர்.

புதிய தலைமை செயல் அதிகாரி என்ன சொல்கிறார்?

முதலீட்டு நிறுவனமான வெட்புஷ் செக்யூரிட்டிஸின் தலைவர் இவ்ஸ் கூறுகையில்,” மைக்ரோசாப்ட் வலுவடைந்து விட்டது - ஆனால் ஓபன்ஏஐ நிறுவனத்தில் நிலைமை மோசமாக உள்ளது. ஓபன்ஏஐயில் கடந்த வார இறுதியில் நடந்த தர்மசங்கடமான நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினரால் எடுக்கப்பட்டது."என்றார்.

ஓபன்ஏஐயின் புதிய தலைவர் எம்மெட் ஷியர், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான ட்விச்சின் முன்னாள் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். ஓபன்ஏஐ-யின் ஊழியர்களுக்கான ஒரு குறிப்பில், "ஓபன்ஏஐ- யை முன்னோக்கி கொண்டு செல்லும் திறன்கள், நிபுணத்துவம் மற்றும் உறவுகளின் தனித்துவமான கலவை தான் எம்மெட் ஷியர்" எனக் கூறியிருந்தனர்.

இப்போது உலகின் மிக சக்திவாய்ந்த ஏஐ நிறுவனங்களில் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும்,"தொழில்நுட்ப-நம்பிக்கையாளர்" என்று சுயமாக விவரித்திருந்தாலும், ஷியர் தொழில்நுட்பத்தால் முன்வைக்கப்படும் சாத்தியமான இருத்தலியல் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கருதுவதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

ஓபன்ஏஐ-யின் நிர்வாகக்குழுவில் உள்ளவர்களிடம், சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான சரியான காரணங்கள் தெளிவாக இல்லை.

வெள்ளிக்கிழமை, ஓபன்ஏஐ நிறுவனம், சாம் ஆல்ட்மேனை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தபோது, "நிர்வாக்குழுவுடன் அவர் தொடர்ந்து நேர்மையாக இருக்கவில்லை, அதன் பொறுப்புகளைச் செயல்படுத்தும் திறனைத் தடுக்கிறார்" என்று குற்றம் சாட்டியது.

ஷியர் இந்த விஷயத்தில் சில ஊகங்களுக்கு உரையாற்றினார்.

"பாதுகாப்பு குறித்த குறிப்பிட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிர்வாக்குழு சாமை நீக்கவில்லை. அவர்களின் தர்க்கம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எங்கள் அற்புதமான மாடல்களை வணிகமயமாக்குவதற்கான குழுவின் ஆதரவு இல்லாமல் இந்த வேலையை தேர்தெடுக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை", அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் ஷியார், இந்த நிகழ்வுகளில் நடந்த முழு விவரத்தையும் வெளிக்கொண்டு வர ஒரு சுயாதீன புலனாய்வாளரை பணியமர்த்த உறுதியளித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)