You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றமா? சிறுபான்மை இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் நிலை என்ன?
- எழுதியவர், ஷுமைலா கான்
- பதவி, பிபிசி செய்தியாளர், கராச்சியில் இருந்து
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் புனித குரான் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு ஃஜரான்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை மாலை கராச்சி செய்தியாளர் மன்றத்தின் முன்பு கிறிஸ்தவர்களும், சமூக சேவை அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த ஆதாரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டின் பேரில் இவை அனைத்தும் நடந்ததாகவும், குற்றச்சாட்டு குறித்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் பிபிசியிடம் பேசிய ஒரு சமூக சேவகர் கூறினார்.
"குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே தீ வைப்பு தொடங்கியது. பைபிள்கள் எரிக்கப்பட்டன. தேவாலயங்களை எரிக்கத் தொடங்கினர். மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ காலனியில் சேதம்
இஸ்லாத்தின் புனித நூலான குரானை அவமதித்தது மற்றும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஃஜரான்வாலா போலீசார் இரண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஃபைசலாபாதில் உள்ள ஃஜரான்வாலா தாலுகாவில் நடந்த வன்முறையில் ஒரு தேவாலயம் எரிக்கப்பட்டது. இது தவிர கிறிஸ்தவ மக்கள் வாழும் காலனி மற்றும் அப்பகுதியில் உள்ள சில அரசு கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.
"எங்கள் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பாக இல்லை. இங்கு எதுவும் பாதுகாப்பாக இல்லை. பாகிஸ்தான் இந்தியா போல் ஏன் மாறி வருகிறது? தெய்வ நிந்தனை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்" என்று பாதிரியார் கஜாலா ஷாபிக் கண்களில் கண்ணீர் மல்கக் கூறினார்.
"நாங்கள் இந்த நாட்டில் வாழவில்லை என்பது போல உணர்கிறோம். இந்த நாடு எங்கள் தாயைப் போல் இல்லை. நாங்கள் ஆதரவற்றவர்கள், பாகிஸ்தானியர்கள் அல்ல என்பதுபோல உணர்கிறோம். நாங்கள் வெளிநாட்டினர் என்பது போல உள்ளது. வேற்று நாட்டு குடிமக்களான நாங்கள் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது,” என்று ஒரு கிறிஸ்தவர் சொன்னார்,
சிறுபான்மையினரின் நிலை குறித்த கேள்விகள்
"தற்போது எந்த அரசியல் கட்சியின் ஆட்சியும் இங்கு இல்லை. அரசு மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கை மிகவும் மெதுவாக உள்ளது. அதனால்தான் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இதுபோன்ற வன்முறையை பரப்பியவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்," என்று சமூக ஆர்வலர் சபீர் மைக்கேல் கூறினார்.
ஃபைசலாபாத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் துறைமுக நகரமான கராச்சியில் போலீசார் தீவிர விழிப்பு நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கான உரிமைகளை கோரி சிறுபான்மையினர் அணிவகுப்பு முதல்முறையாக சென்ற வாரம் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகள் பற்றிய விஷயங்களை இந்த நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்களுக்காக கராச்சியில் செயல்படும் லிவிங் ஹோப் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஸஜல் ஷஃபீக் பிபிசியிடம் பேசினார்.
கட்டாய மத மாற்ற விஷயம்
"எங்கள் புகலிடத்தில் இப்போது ஐந்து பெண்கள் வசிக்கிறார்கள். ஜெரேஷ் என்பவர் இப்போது கூட இரவில் பயந்து கத்துகிறார். அவருக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. சில மணிநேரங்களுக்கு ஒரு முறை கூச்சலிடுவார்," என்று ஷஃபீக் தெரிவித்தார்.
ஜெரேஷ் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவருடைய மையத்திற்கு வந்தார். வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து ஜெரேஷ் மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கராச்சியில் நடந்த சிறுபான்மையினர் அணிவகுப்பில் மிக முக்கியமான விஷயமாக வலுக்கட்டாய மதமாற்றம் இருந்தது.
நேஹாவை உதாரணம் காட்டும் ஸஜல், "இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கிறது. நேஹா எங்கள் மையத்திற்கு வந்தபோது அவரால் இரவில் தூங்க முடியாமல் இருந்தது. ஆண்களுக்கு மத்தியில் செல்லமாட்டார். ஆனால் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு இப்போது அவரால் மேடையேறி எல்லா விஷயங்கள் பற்றியும் பேச முடிகிறது,” என்றார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் சென்ற ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
"இந்து சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். நமது கோவில்களை மாஃபியா கைப்பற்றுகிறது. ஆனால் அரசு எதுவும் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறது" என்கிறார் பாகிஸ்தானில் சனாதன் தர்ம் குளோபல் இயக்கத்தை நடத்தி வரும் மனோஜ் செளஹான்.
புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை
- 2022 இல் பாகிஸ்தானில் 35 தெய்வ நிந்தனை வழக்குகள்.
- 171 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
- 65 சதவிகித சம்பவங்கள் பஞ்சாப் மாகாணத்தில் நடந்தன.
- பாகிஸ்தானின் மக்கள் தொகை சுமார் 21 கோடி.
- இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம்.
- கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 1.27%
- கராச்சியில் சீக்கியர்களின் எண்ணிக்கை 4000.
தெய்வ நிந்தனை சட்டத்தை தவறாக பயன்படுத்துதல்
2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 35 மத நிந்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
171 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 65 சதவிகித வழக்குகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவை. சிறுபான்மையினரை துன்புறுத்தவும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கடந்த வாரம் சிறுபான்மையினர் அணிவகுப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கராச்சியில் சுமார் 4,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர், இருப்பினும் கடந்த வார சிறுபான்மையினர் அணிவகுப்பில் அவர்களின் அதிக பங்கேற்பு காணப்படவில்லை. ஆனால் சீக்கியர்கள் மற்றும் குருத்வாராக்களை குறிவைப்பதற்கு எதிராக அவ்வப்போது இந்த சமூகமும் குரல் எழுப்பி வருகிறது.
"பெஷாவரில் ஒரு சீக்கியர் சில நாட்களுக்கு முன் கொடூரமாக கொல்லப்பட்டார். சுக்கூரில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடந்துள்ளது. குருத்வாராக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு நான் அரசிடம் தொடர்ந்து கோரி வருகிறேன்," என்று கால்ஸா சீக்கிய கவுன்சில் தலைவர் சர்தார் அமர் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சிறுபான்மை சமூகம் கோரி வருகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்தவ சமூகத்திற்காகப் பணியாற்றும் சஃபீனா ஜாவேத் கூறுகிறார்.
"இப்படிச்செய்வதன் மூலம் நிலைமை மேம்படும். அப்போதுதான் சிறுபான்மையினருக்கான சட்டங்களை இயற்ற முடியும். அவர்கள் மீது இழைக்கப்படும் அநீதி மற்றும் அடக்குமுறைகளை தடுக்கவும் முடியும்" என்றார் அவர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது 336 இடங்கள் உள்ளன. இதில் பத்து இடங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அதாவது சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என
சிறுபான்மை சமூகத்தினர் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அணிவகுப்பு
சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான முன்மொழிவை பாகிஸ்தான் அரசால் கடந்த வாரம் முன்வைக்க முடியவில்லை. ஏனெனில் இந்த முன்மொழிவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று சிறுபான்மை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு ஆகஸ்ட் 11 ஆம் தேதியை சிறுபான்மையினர் தினமாக அறிவித்தது, ஆயினும் அது நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தில் ஒரே நேரத்தில் இத்தகைய அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கராச்சியில் உள்ள பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்கள், இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்த அணிவகுப்பில் பெரும்திரளாக கலந்து கொண்டனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிட் வழங்க வேண்டும் என இவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“ஆகஸ்ட் 11ஆம் தேதிதான் க்வாய்த்-இ-ஆசம் முகமது அலி ஜின்னா அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் பேசும்போது, கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த சுதந்திரம் எங்களுக்கு கிடைத்துள்ளதா என்று நான் கேட்க விரும்புகிறேன்,” என்று இந்த அணிவகுப்பின் அவசியம் குறித்துப்பேசிய மாணவர் தலைவர் பாவிஷ் குமார் கூறினார்.
இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி பல்கலைக்கழகங்களில் ஹோலி பண்டிகையின் போது இந்து மாணவர்களுடன் கைகலப்பு சம்பவங்கள் நடந்தன.
கராச்சியில் நடந்த சிறுபான்மை அணிவகுப்பில் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் பார்சி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். அவர்கள் அனைவரின் கைகளிலும் கட்டாய மதமாற்றத்தை எதிர்க்கும் வாசக அட்டைகளைப் பார்க்க முடிந்தது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 2016 இல், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால்
சமய அடிப்படைவாதிகள் அதை எதிர்த்தனர். அதன் பிறகு இந்த சட்டம் நிலுவையில் உள்ளது.
அதில் திருத்தம் செய்து நிறைவேற்றுவதாக சமீப காலம் வரை பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த திசையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம் பேரே சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதில் சுமார் இரண்டு சதவிகிதம் பேர் இந்துகள். ஒரு சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்