You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் விற்பனை: கிரெடிட் கார்டில் வட்டியில்லா தவணை முறை உண்மையில் லாபமா?
அடுத்த சில நாட்களில் நவராத்திரி தொடங்குகிறது. பின்னர் சரஸ்வதி பூஜை, விஜயசதமி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று ஜனவரி வரை வரிசையாக பண்டிகைகள் வரவுள்ளன.
ஆடி மாதத்தில் பொருட்கள், ஜவுளிகள் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுவது போல் பண்டிகை காலத்திலும் ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பொருட்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் சலுகைகளை அறிவித்து விற்பனையை தொடங்கிவிட்டன. இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் செல்போன் போன்ற மின்சாதன பொருட்களின் விலை குறைவாக இருக்கும் என்பதால் பலரும் காத்திருந்து வாங்குவது உண்டு. இதுபோக, கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் விலை குறைப்பு, வட்டியில்லா தவணை முறை என்று பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இதனால் தேவையில்லை என்றாலும்கூட ஒருசிலர் பொருட்களை வாங்கிக் குவித்துவிடுகின்றனர். இதனால் தேவையற்ற செலவு ஏற்படுவதோடு சில நேரங்களில் பண நெருக்கடியும் ஏற்படுகிறது.
எனவே, பண்டிகைகால பட்ஜெட்டை எப்படி திட்டமிடுவது? தவணை முறையில் பொருட்களை வாங்குவது சரியானதா? கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அவசியமானதா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக, அது நமக்கு அவசியமானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்பதற்காக அவசியமற்ற பொருட்களை வாங்குவதோ பொருட்களை அதிகளவில் வாங்கி வைப்பதோ சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார் நிதி, சேமிப்பு ஆலோசகரும் ஒன்க்ரூ நிறுவனத்தின் சி.பி.ஓ.வுமான ஜி.சதீஷ் குமார்.
“ஒருசிலர் தள்ளுபடியில் கிடைக்கிறது என்று மளிகைப் பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி வைக்கின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதால் காலாவதி தேதி முடிந்து அவை வீணாகி விடுகின்றன. எனவே, ஒரு பொருள் நமக்கு தேவையில்லை என்றால் எவ்வளவு தள்ளுபடி இருந்தாலும் அதனை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் வீண் செலவுதான் ஏற்படும். ” என்று அவர் கூறுகிறார்.
முன்னரே திட்டமிடுவது அவசியம்
இதேபோல் செல்போன், மடிக்கணினி போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்தால் பண்டிகை கால விற்பனைக்கு முன்பாகவே எந்த பொருளை வாங்குவது, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று திட்டமிட்டு முடிந்தால் பணத்தையும் சேமிக்க தொடங்குவது நல்லது. பொருளை வாங்கிவிட்டு வட்டியுடன் தவணையை செலுத்துவதற்கு பதிலாக முன்பாகவே பணத்தை சேமிப்பதன் மூலம் கடன் இல்லாத சூழலை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
பண்டிகைக்கால தள்ளுபடி என்றில்லாமல் சுதந்திர தினம், குடியரசுத் தினம் போன்ற நாட்களிலும் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தள்ளுபடி வழங்குகின்றன. எனவே, அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.
விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
ஒரு பொருளுக்கு எதில் அதிக தள்ளுபடி கிடைக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சதீஷ் குமார் கூறுகிறார்.
“ஆன்லைனில் தள்ளுபடி அறிவிக்கப்படும்போது எந்த தளத்தில் அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து அந்த பொருளை வாங்கலாம். ஒருசில பொருட்கள் ஆன்லைனை விட கடைகள் குறைந்த விலைக்கு கிடைக்கக்கூடும். ஆனால், அதுபற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, எங்கு வாங்கினால் லாபம் என்பதை ஒப்பிட்டு பார்த்து பொருட்களை வாங்குவது பணத்தை கூடுதலாக மிச்சப்படுத்த உதவும்.”
“மேலும், முன்பெல்லாம் 50 சதவீத தள்ளுபடி என்று கடைகளில் விளம்பரப்படுத்துவார்கள். தற்போது 10 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி என்று அறிவிக்கிறார்கள். இதில், பிராண்டெட் அல்லாத பொருட்களுக்கு மட்டுமே அதிகளவு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. எனவே, அதன் தரம் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறூகிறார்.
கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கலாமா?
இது தொடர்பாக பேசிய சதீஷ் குமார், “ஆன்லைன் நிறுவனங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போது கூடுதலாக சலுகைகளை வழங்குகின்றன. எனவே அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மொபைல் 16,000 ரூபாய் என்றால், குறிப்பிட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதனை வாங்கும்போது கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி தரப்படுகின்றன. அந்த நேரத்தில் கிரெடிட் கார்டு மூலம் அந்த பொருளை வாங்கலாம். ” என்றார்.
அதே நேரம் வட்டியில்லா தவணை, தவணை முறைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
வட்டியில்லா தவணை முறை உண்மையில் லாபமா?
“ஒருசில வங்கிகள் தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது 20 சதவீதம் வரை வட்டி விதிக்கின்றன. இதுபோக செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லாத சூழலில், மிகவும் அவசியமான நேரத்தில், விலை அதிகம் உள்ள பொருட்களை தவணை முறையில் வாங்கலாம். ஆனால், குறைந்த விலையில் உள்ள பொருட்களையே தவணை முறையில் வாங்குவது கூடுதல் செலவுக்கு வழிவகுக்கும்” என்கிறார் சதீஷ் குமார்.
அதேபோல், வட்டியில்லா தவணை முறையில் பொருட்களை வாங்கும் அவற்றுக்கு சலுகை விலை கிடைப்பது இல்லை. எடுத்துக்காட்டாக 18 ஆயிரம் ரூபாய் உள்ள பொருளை நீங்கள் ஒரே தவணையாக வாங்கும்போது கிரெடிட் கார்டு சலுகையுடன் ரூ.16 ஆயிரம் அல்லது ரூ.17 ஆயிரத்துக்கு அந்த பொருள் உங்களுக்கு கிடைக்கக் கூடும். ஆனால், வட்டியில்லா தவணை முறையில் இந்த சலுகைகள் இருக்காது.
இதேபோல், வட்டியில்லா தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது வங்கிகள் செயலாக்க கட்டணங்களை வசூலிக்கின்றன. வட்டியில்லை என்று கூறப்பட்டாலும் இதிலும் வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால், அந்த வட்டி தொகை முன்கூட்டிய தள்ளுபடியாக நமக்கே வழங்கப்படுவதால் பலரும் அதனை கவனிப்பது இல்லை.
கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போது பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம் தவணையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவணையை தாமதமாக செலுத்தும்போது அதற்கு அதிகளவு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே, தள்ளுபடிக்காக பொருட்களை வாங்காமல் தேவைக்காக வாங்குவது பொருளாதார ரீதியாக நமக்கு பயனை தரும் என்று சதீஷ் குமார் அறிவுறுத்துகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)