இதுவரை இல்லாத 'அதி சக்திவாய்ந்த' ஆயுதத்தை பரிசோதித்த வட கொரியா

பட மூலாதாரம், Getty Images
கண்டம் விட்டும் கண்டம் பாயும் வகையிலான புதிய திட எரிபொருள் ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பரிசோதனை செய்ததிலேயே இதுதான் சக்தி வாய்ந்த ஏவுகணை என்றும் அந்நாடு கூறியுள்ளது.
இந்த பரிசோதனையை வெகுவாக பாராட்டியுள்ள வட கொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (KCNA), சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுவாக, திட எரிபொருள் ஏவுகணைகளை திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட வேகமாக செலுத்த முடியும். மேலும், அவற்றைக் கண்டறிவதும், இடைமறிப்பதும் கடினமானது.
தங்களின் இந்த பரிசோதனை எதிரிகளுக்கு அதீத பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வட கொரியா பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் புதியது அல்ல என்றும் முழு செயல்பாட்டுடன் கூடிய திட பொருள் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ICBM) உருவாக்க வட கொரியாவுக்கு கூடுதல் நேரமும் உழைப்பும் தேவைப்படும் என தென் கொரியா வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் தனது மகள், மனைவி மற்றும் சகோதரி ஆகியோருடன் இணைந்து இந்த பரிசோதனையை மேற்பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Hwasong-18 என அழைக்கப்படும் இந்த சோதனை ஆயுதம் வடக் கொரியாவின் ராணுவ மூலோபாயத்தை ஆதரிக்கும் என்றும் கிம் கூறினார்.
வியாழன்று மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனை, “உயர் உந்துதல் திட-உந்துசக்தி பலநிலை மோட்டார்கள், நிலை பிரிப்பு தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு செயல்பாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது” என்று KCNA குறிப்பிட்டுள்ளது.
திட எரிபொருள் மூலம் இயங்கும் குறுகிய இலக்கு ஏவுகணைகளை பல ஆண்டுகளாக பரிசோதித்த வந்த நிலையில், வட கொரியா தற்போது முதன் முதலாக திட எரிபொருள் மூலம் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இதற்கு முன்பும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்துள்ளது. ஆனால், அவையெல்லாம் திரவ எரிபொருளால் இயங்கக்கூடியவை. அவற்றுக்கு நீண்ட காலத்துக்கு எரிபொருள் நிரப்ப முடியாது.
வட கொரியாவின் ஆயுத திட்டங்களில் இதுமாபெரும் மைல்கல் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். திட எரிபொருள் மூலம் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை மூலம் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் அல்லது மிக குறைந்த எச்சரிக்கையை மட்டுமே வெளிப்படுத்தி அமெரிக்காவை வட கொரியாவால் தாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், KCNA
ஜப்பானில் பதற்றத்தை ஏற்படுத்திய வட கொரியாவின் பரிசோதனை
வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை ஜப்பானின் வடக்கு பகுதியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மக்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர், 30 நிமிடங்கள் கழித்து அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது. ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கின, சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
போர் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் நடைமுறையான மற்றும் தாக்குதல் முறையைப் பின்பற்றுமாறு தனது ராணுவத்துக்கு கிம் உத்தரவிட்ட சில நாட்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை பரிசோதனைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தனர், இது போரைத் தடுப்பதில் "மிகவும் நடைமுறை மற்றும் தாக்குதல்" முறையைப் பின்பற்றுமாறு திரு கிம் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
புதிய, அதிக சக்தி வாய்ந்த ஆயுதத்தை வட கொரியா சோதனை செய்தது ஆச்சரியத்தை அளிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"வடகொரியா பல ஆண்டுகளாக புக்குக்சாங் தொகுதியின் ஒரு பகுதியாக பெரிய விட்டம் கொண்ட திட ராக்கெட் மோட்டார்களை சோதித்து வருவதால், 2020 முதல், இது போன்ற சோதனை எந்த நேரத்திலும் வந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது" என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜேம்ஸ் மார்ட்டின் மையத்தில் பரவல் அல்லாத ஆய்வுக்கான கிழக்கு ஆசியாவின் இயக்குநராக உள்ள ஜெஃப்ரி லூயிஸ் கூறுகிறார்.
கிம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து 11 ஆண்டுகள் ஆவதை இந்த வாரம் வட கொரியா கொண்டாடி வருகிறது. ராணுவ முன்னேற்றத்தின் பல்வேறு காட்சிகளுடன் இந்த ஆண்டு விழாவைக் கொண்டாட அந்நாட்டு முனைப்பு காட்டி வருகிறது.
வடகொரியா தனது அணு ஆயுதங்களை அதிகப்படுத்தவும், அதிநவீன ஆயுதங்களை உருவாக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் அது விமர்சித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












