You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ஆர்ஆர்: ஆஸ்கர் விளம்பரத்திற்கு ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டதா? - தெலுங்கு திரையுலகை உலுக்கிய கேள்வி
- எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
- பதவி, பிபிசி தெலுங்கு
'ஆஸ்கர்' வாயில் கதவைத் தட்டி நிற்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதை வெல்வதற்காகப் பெரும் பணம் செலவழிக்கப்படுவதாக தெலுங்கு திரையுலகில் சர்ச்சை எழுந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆகியோரும்கூட பணம் பெற்றுக் கொண்டு ஆர்.ஆர்.ஆர். படத்தைப் பாராட்டினார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி' புகழ் ராஜமௌலி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும்கூட கவனம் ஈர்த்தது.
படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று பெருமை சேர்த்தது. அதே பாடல் தற்போது ஆஸ்கர் விருக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இதையொட்டி, படத்தின் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நிலையில், தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான தம்மாரெட்டி பரத்வாஜ் ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படத்தைப் பிரபலப்படுத்த ரூ.80 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் அதைக் கொண்டு 8 படங்களை உருவாக்கி இருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
"விமான டிக்கெட்டிற்காக மட்டுமே இந்தப் பணத்தைச் செலவழித்துள்ளனர், இதன் மூலம் அவர்கள் ரூ.80 கோடியை முதலீடு செய்துள்ளனர்," என்று அவர் குறை கூறியுள்ளார்.
பரத்வாஜின் விமர்சனத்திற்கு பிரபல தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாகத் தனது கடுமையான பார்வையை நடிகர் நாகபாவு முன்வைத்த பிறகு இந்த விவாதம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
பரத்வாஜ் எங்கே பேசினார்?
மார்ச் 6ஆம் தேதியன்று, இயக்குநர் ராஜேஷ் டச்ரிவரின் குறும்பட திரையிடல் நிகழ்வு ரவீந்திர பாரதியில் உள்ள பெய்டிராஜூ பிரீவியூ திரையரங்கில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விஷயங்களின் அடிப்படையில் படத்தை உருவாக்குவது குறித்த விவாதத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் முன்வைத்த கருத்தே தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டது.
ஆர்.ஆர்.ஆர். படம் குறித்து கடந்த காலத்திலும் சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தப் படத்தை சிலர் தன்பால் ஈர்ப்பாளர் திரைப்படம் என்று குறிப்பிட்டதால் மிகக் கடுமையான விவாதம் நடைபெற்றது.
ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கரில் ஒரிஜினல் பாடல் பிரிவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை மறுநாள் (மார்ச் 13) காலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இந்தப் பின்னணியில் ஆர்ஆர்ஆர் படத்தைப் பிரபலப்படுத்த 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் சர்ச்சையாகியுள்ளது.
பரத்வாஜின் விமர்சனத்திற்கு நடிகர் நாகபாபு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பெற நீங்கள் ரூ.80 கோடி செலவு செய்துள்ளீர்களா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது அவர்களது மொழியில் பதில் தரும் 'ஒய்.சி.பி. கருத்து' என்று குறிப்பிட்டு அரசியலையும் சேர்த்துள்ளார்.
ராஜமௌலியின் ஆசானும், இயக்குநருமான கே.ராகவேந்திர ராவும், பரத்வாஜின் விமர்சனத்திற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் வாயிலாக பதில் அளித்துள்ளார்.
"உலக அரங்கில் முதன் முறையாக நமது பெயர் வருவதைப் பார்த்து தெலுங்கு சினிமா, தெலுங்கு இலக்கியம், தெலுங்கு இயக்குநர், தெலுங்கு நடிகர்கள் பெருமைப்பட வேண்டும். அவ்வளவுதான்.
ஆனால், ரூ.80 கோடி செலவு என்று கூறும் நீங்கள் அதற்கான கணக்கு விவரங்களை வைத்திருக்கிறீர்களா?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
"ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆகியோரும்கூட பணம் பெற்றுக்கொண்டு ஆர்ஆர்ஆர் படத்தை ப்ரமொட் செய்ததாகக் கூறுகிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக ஆர்.ஆர்.ஆர். பட சர்ச்சையே சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்தை ஆதரித்தும், பரத்வாஜின் விமர்சனத்தை ஆதரித்தும் பலரும் பலதரப்பட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜமௌலி மீது எனக்கு பொறாமையா? - பரத்வாஜ்
சமூக ஊடகங்களில் நீடிக்கும் சர்ச்சைக்கு தம்மாரெட்டி பரத்வாஜ் பதில் அளித்துள்ளார். நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
"ராஜமௌலி பிரமாண்ட இயக்குநர் என்பது உங்களுக்குத் தெரியாதா? 3 மணி நேரம் விவாதத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் சிலர் பகிரும்போது, அதை விமர்சிப்பது சரியல்ல. உட்கார்ந்து பேசலாமா. ஒரு குறும்படத்திற்காக 3 மணிநேரம் நீங்கள் உட்கார்ந்து பேசுவீர்களா?" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றே எப்போதும் விரும்புகிறேன். எனது மானம் காத்து வாழ்வேன். உங்களைப் போல், எந்த அரசு வந்தாலும் அந்த அரசின் சார்பு நிலை எடுத்து, விருது வாங்க மாட்டேன்," என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்