You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ஆர்ஆர்: மேலும் 4 சர்வதேச விருதுகளை பெற்ற ராஜமௌலியின் திரைப்படம்
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்துவரும் நிலையில், மேலும் 4 சர்வதேச விருதுகளை அப்படம் வென்றுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஹோலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதை பெற மேடையேறிய ராஜமௌலி ஆற்றிய உரையில், இவ்விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். படத்தை உருவாக்க 320 நாட்கள் கடுமையாக உழைத்ததாகவும் அதில் பெரும்பாலான நாட்களை படத்தின் சண்டை காட்சிகளுக்கு செலவிட்டதாவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த அங்கீகாரம் எனக்கும் எனது படத்துக்கும் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்துக்கும் மிகப்பெரிய கௌரவம். நாங்கள் மேலும் மேல்நோக்கி செல்ல இந்த விருது உதவும" என்றார்.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை நடிகர் ராம் சரணுடன் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய ராஜமௌலி, "எங்களாலும் சிறந்த சர்வதேச திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை நான் மட்டுமல்ல எனது சக இயக்குநர்களும் நம்புவதற்கு இந்த விருது உதவும்" என்றார்.
விருதுகளை குவிக்கும் ஆர்ஆர்ஆர்
மகதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
ராம் சரண், ஜுனியர் என்டிஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்த இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததுடன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது வெளிநாட்டு ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது. அமெரிக்காவின் சைனிஸ் திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படம் திரையிட்ட போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் திரைக்கு அருகே வந்து நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஆர்ஆர்ஆர் படம் குறித்து, 'உங்கள் படம் மிக பிரமாதமாக இருந்தது. என்னோட கண்களை என்னால் நம்ப முடியவில்லை. என்னை பொறுத்தவரை ஆர்ஆர்ஆர் திரைப்படம் கண்களுக்கு விருந்தாக இருந்தது. படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. உங்கள் படத்தில் கதையை நான் கவனிக்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நீங்கள் ஒவ்வொரு காட்சியையும் காட்சியமைத்தது அழகாக இருந்தது. ஆகச்சிறந்த அனுபவத்தை அந்த படம் எனக்கு கொடுத்தது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்" என ஒரு உரையாடலின்போது ராஜமௌலியிடம் தெரிவித்தார். இதேபோல், பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் அதனை இயக்கிய ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர்.
வசூலையும், பாராட்டுகளையும் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதுகளை பெறவும் தவறவில்லை. சிறந்த இசைக்காக வழங்கப்படும் சர்வதேச விருதான 'கோல்டன் குளோப்' விருதை 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கடந்த ஜனவரி மாதம் பெற்றார். அட்லாண்டா ஃபிலிம் கிரிட்டிக் சர்கில் விருது, அஸ்டீன் ஃபிலிம் கிரிட்டிக் அசோசியேஷன் விருது, பாஸ்டன் சொசைட்டி ஆஃப் ஃபிலிம் கிரிட்டிக் விருதுகள், கிரிட்டிக் அசோசியேஷன் ஆஃப் செண்ட்ரல் ஃப்ளோரிடா விருதுகள், தாதா சாகிப் பால்கே திரைப்பட விழா விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் ஃபிலீம் கிரிட்டிக் அசோசியேஷன் விருதுகள், நார்த் கரோலினா ஃபிலிம் கிரிட்டிக் அசோசியேஷன் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது.
திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்