You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஆர்ஆர்ஆர்' படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?
ஆர்ஆர்ஆர் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், அப்படத்தை பற்றிய பேச்சுகள் இன்னும் அடங்கியபாடு இல்லை. ஹாலிவுட்டின் விருதுகள் சீசனில் ஆர்ஆர்ஆர் திரைபப்டம் அதன் புகழ் அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், , பிபிசியின் மெரில் செபாஸ்டியன், ஏன் இப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பதைப் குறிப்பிடுகிறார்.
முக்கியமாக இந்தியர்களுக்காகவே (இந்தியாவில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்) இப்படத்தை எடுத்ததாக படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கூறுகிறார்.
ஆனால், இப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு எல்லைகளை கடந்துள்ளது. தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், பிரிட்டன் அரசுக்கு எதிராக போராடும் இரு இந்திய புரட்சியாளர்கள் பற்றிய கற்பனை கதையை அடிப்படையாக கொண்டது.
சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ள இந்த படம், பல வாரங்களாக அமெரிக்க நெட்பிளிக்ஸ்சின் டாப் 10 படங்களின் பட்டியலில் இருந்ததோடு அல்லாமல் தற்போது ஜப்பானிலும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பல மதிப்புமிக்க பட்டியல்களில் இது சேர்க்கப்பட்டுள்ளது, இதில் பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மற்றும் அமெரிக்காவில் உள்ள தேசிய மதிப்பாய்வு வாரியம் ஆகியவை அடங்கும்.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல், கடந்த ஜனவரி 11ஆம் தேதி சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த வாரம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற `கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்` நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படமும், நாட்டு நாட்டு பாடலும் உயரிய விருதுகளை வென்றுள்ளன. பிபிசி கலாச்சார திரைப்பட விமர்சகர்கள் நிக்கோலஸ் பார்பர் மற்றும் கேரின் ஜேம்ஸ் ஆகியோர் 2022ஆம் ஆண்டிற்கான தங்களின் சிறந்த 20 படங்கள் பட்டியலில் இப்படத்தையும் சேர்த்துள்ளனர்.
இப்படத்திற்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு தொடர்பாக ராஜ்மௌலியின் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் அவரது பல்வேறு பேட்டிகளில் தெரிகிறது.
“ ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மேற்கு நாடுகளில் இருந்து ஆதரவுகள் கிடைக்க தொடங்கியபோது, இவர்களெல்லாம் திரைப்படத்தை பார்க்க சென்ற இந்தியர்களின் நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைத்தோம்” என லேட் நைட் வித் சத் மயர்ஸ் என்னும் அமெரிக்க நிகழ்ச்சியில் நகைச்சுவையாக ராஜமௌலி கூறியிருந்தார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதன்முதலில் அமெரிக்காவில் வெளியானபோது, பிற இந்திய படங்களுக்கும் அதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று கூறுகிறார் நியூயார்க்கை சேர்ந்த திரைப்பட விமர்சகரான சித்தாந்த் அட்லாகா. டிசம்பரில் ராஜமௌலியை சிறந்த இயக்குனராகத் தேர்வுசெய்த தி நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டத்தின் உறுப்பினராக இவர் உள்ளார்.
“முதல் வாரத்தில் பெரும்பாலான ரசிகர்கள் இந்தியர்களாக இருந்தனர் ” என்று கூறிய சித்தாந்த் அட்லாகா, “அடுத்த சில வாரங்களில் இது முற்றிலும் மாறியது ” என்கிறார்.
திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க மக்கள் படையெடுத்ததையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படம் தொடர்பான பேச்சுகள் பரவத் தொடங்கின. சினிமா விமர்சகர்கள் படத்தை பாராட்டி விமர்சனம் எழுதினர். ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ, எட்கர் ரைட், ஸ்காட் டெரிக்சன் மற்றும் ஜேம்ஸ் கன் உட்பட ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர்கள் படத்தை பாராட்டினர்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து படத்தை திரையிட்டதாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
“இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு என்பது மற்ற இந்திய படங்களில் இருந்து வேறுபட்டது ” என்கிறார் அட்லாகா.
இப்படத்தை ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டு திரையரங்குகளில் கொண்டாட்டமாக பார்க்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தியாவில் திரை நட்சத்திரங்களை இவ்வாறு கொண்டாடுவது வழக்கமானது. ஆனால், அமெரிக்காவில் இது அரிய நிகழ்வு.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ்பெற்ற சைனீஸ் திரையரங்களில் இயக்குநர் ஜே.ஜே. ஆப்ரஹாம் மூலம் இப்படம் திரையிடப்பட்டபோது, ஏராளமானோர் திரையின் மேடைக்கே சென்று நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்.
“இங்குள்ள ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா இயக்குநர்களுக்கும் புது விதமான சினிமா பார்க்கும் முறையை ஆர்ஆர்ஆர் திரைப்படம் அறிமுகம் செய்தது. இது அவர்களுக்கு பழக்கமில்லாதது, அதனால்தான் சினிமா சார்ந்தவர்கள் கூட ஈர்க்கப்பட்டனர்” என்று அட்லாகா குறிப்பிடுகிறார்.
படத்தின் கதைசொல்லல் மற்றும் நம்பிக்கையான செயலாக்கம் பார்வையாளர்களை ஈர்த்திருந்தாலும், நேரமும் உதவியது.
“ஆர்ஆர்ஆர் திரைப்படம் உச்சத்தில் உள்ளது. மக்கள் திரையரங்குகளிலும் வீட்டில் இருந்தபடி நெட்பிலிக்ஸிலும் பார்க்க காத்திருந்த திரைப்படம் இதுதான் ” என்கிறார் லைனி காசிப் பொழுதுபோக்குச் செய்தி தளத்தின் நிறுவனரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான எலைன் லூய்.
இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான பட்டியலில் குஜராத்தி படமான `செல்லோ ஷோ`விடம் ஆர்ஆர்ஆர் தோல்வி அடைந்திருந்தாலும், இப்படத்தை சுற்றியுள்ள பரபரப்பானது பரிந்துரைகளுக்கான ஓட்டத்தில் உறுதியாக இடம்பெற செய்துள்ளது. பல ஹாலிவுட் இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஆதரவும் இப்படத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த அசல் பாடல் உள்ளிட்ட பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்படலாம் என்று வர்த்தக பத்திரிகை வெரைட்டி கணித்துள்ளது.
சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆர்ஆர்ஆர்-ஐச் சமர்ப்பிக்க வேண்டாம் என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எதிரான போட்டியாகவே இருக்கும் என்கிறார் லூய்.
“சினிமா துறையில் சலசலப்பு என்பது பெரிய விஷயம். தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் உரையாடல்களின் ஒருபகுதியாகவே மாறிவிட்டது. வார இறுதிகளிலோ அல்லது விருந்துகளிலோ `ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டாயா?` என்று அனைவரும் கூறுகின்றனர்” என்றும் அவர் கூறுகிறார்.
மார்வெல் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன நிலையில், இத்திரைப்படம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலருக்கும் புதுமையான மற்றும் வியப்பான உணர்வை ஏற்படுத்தியது.
இங்குள்ள பிளாஸ்பஸ்டர் திரைப்படங்கள் மிகவும் சிடுமூஞ்சித்தனமாகவும் நேர்மையற்ற தன்மையிலும், இமேஜ் தொடர்பாக எவ்வித அக்கறையும் இல்லாமல் வெறும் தொழிற்சாலை தயாரிப்பு போன்று வெளிவரும்போது, நேர்மையான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களால் அவை முறியடிக்கப்படும் என்றும் அட்லாகா தெரிவித்தார்.
ராஜமௌலி பாணியில் கூறவேண்டும் என்றால், ஆர்ஆர்ஆர் திரைப்படம் அற்புதமான படங்கள், பல ஆடம்பரமான தொகுப்புகள் மற்றும் கற்பனையான கதைசொல்லல் ஆகியவற்றை ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது.
படத்தில் உள்ள தனித்துவமான காட்சிகளில் ஒன்று- தீயில் சிக்கிய குழந்தையை மீட்பதற்காக பாலத்தில் இருந்து குதிப்பதற்கு முன், ஹீரோக்கள் முதன்முதலில் சந்திக்கும் காட்சி- அவர்கள் குதிரை மற்றும் மோட்டார் பைக்கில் சவாரி செய்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
“அமெரிக்க பார்வையாளர்கள் பொதுவாக இந்த வகையான அதிகபட்ச காட்சிகளுக்குப் பழக்கப்பட்டவர்கள் இல்லை,” என்று அட்லாகா கூறுகிறார், "எந்தவொரு கலாச்சார பின்னணியிலிருந்தும்" இந்த படம் மிகவும் "நன்றாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் இருந்து இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் இப்படம் பிரதிபலிக்கிறது - பார்வைக்கு தூண்டுதல், நிறைய பேர், நிறைய ஆக்ஷன் காட்சிகள், லட்சியம் - ஆனால் "மிகை இல்லாமல்" என்கிறார் லூய்.
இந்தியாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பெற்ற வெற்றி என்பது ஆச்சரியம் அளிக்கக்கூடியது அல்ல. பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களின் வெற்றி ராஜமௌலியை அனைவருக்கும் தெரியக்கூடிய நபராக மாற்றியதோடு அல்லாமல், ஆர்ஆர்ஆர் படத்திற்கான எதிர்பார்ப்பையும் உச்சத்தில் வைத்திருந்தது.
ஆனால் இத்திரைப்படம் பல விமர்சகர்களிடமிருந்து நடுநிலையான விமர்சனங்களைப் பெற்றது, இப்படத்தின் பிரச்சனைக்குரிய அரசியல், இந்து மத குறியீடுகளை பயன்படுத்தியிருந்தது மற்றும் பழங்குடி கலாச்சாரத்தை கையகப்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தியாவில் சினிமா என்னும் ஊடகம் மிகவும் அரசியல்மயமாகிவிட்டது என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான சௌமியா ராஜேந்திரன். எனவே பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராடிய இரண்டு நிஜ வாழ்க்கை ஆர்வலர்களை ஆர்ஆர்ஆர் கையகப்படுத்தியது மற்றும் அவர்களை இந்து புராணக் கதாநாயகர்களாக மறுவடிவமைத்தது ஆகியவை ஆய்வுக்கு வழிவகுத்தது என்று அவர் கூறுகிறார்.
ஆனால், மேற்கத்திய ரசிகர்கள், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை காலனித்துவத்துக்கு எதிரான கதையாகவே பார்த்தனர். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு உடனடியாக தோன்றும் அரசியல்` என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில், ஒரு சில வெளியீடுகள் இதை நிவர்த்தி செய்ய முயற்சித்தன.
“விமர்சனத்தைவிட காலனியாதிக்க எதிர்ப்புக் குறியீடுகள் முக்கியத்துவம் பெறுவதாக சிலர் கூறினாலும், இந்தப் படம் குறித்த உரையாடலின் ஒரு பகுதியாக விமர்சனமும் இடம் பெறுகிறது” என்று அட்லாகா கூறுகிறார்.
"அது அப்படியே இருந்தாலும், மக்கள் அவர்கள் பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் படங்களை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்," என்று அவர் கூறுகிறார்.
"இத்தகைய உரையாடல்கள் ஒருபக்கம் இருந்தாலும், ராஜமௌலி மற்றும் குழுவினர் இந்தியத் திரையுலகிலும் வெளியிலும் திரைப்படங்களுக்கு தடைகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள் என்பது நிச்சயமான ஒன்று.
இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்கலாம். ராஜமௌலி அடுத்த கட்டமாக ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கலாம். இது “உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளரின் கனவு” என்றும் ராஜமௌலி கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்