You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே வாரத்தில் ரூ.153 கோடி வசூல்: சிரஞ்சீவிக்கு சாதனைப் படமாக அமையும் 'வால்டர் வீரய்யா'
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் இது அமைந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த போதே புதிய கட்சி தொடங்கி, அரசியல் பிரவேசம் செய்தவர் நடிகர் சிரஞ்சீவி. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் கால் பதித்த அவருக்கு இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமானதாக அமையவில்லை.
அந்த இடைவெளியில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அவரது மகன் ராம்சரண் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ராம்சரண் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கோல்டன் குளோப் விருதையும் வென்று இந்திய திரையுலகிற்கு அந்த படம் பெருமை சேர்த்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி விட்டுச் சென்ற உச்ச நட்சத்திரம் என்ற வெற்றிடத்தை நிரப்ப இன்று பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, ராம்சரண் போன்ற நடிகர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தான் விட்டுச் சென்ற இடத்திற்கான போட்டியில் இன்றைய தலைமுறை புதிய நடிகர்களுடன் சிரஞ்சீவியும் குதித்துள்ளார்.
சிரஞ்சீவிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் சற்று ஏமாற்றம்தான். அவர் நடிப்பில் வால்டர் வீரய்யாவுக்கு முன்னதாக வெளிவந்த காட்பாதர். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெருவெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படத்தின் மறுஆக்கமாக(remake) உருவான இந்த திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், முரளி சர்மா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. ஆனாலும், இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.
இத்தகைய பின்னணியில், மகர சங்கராந்திக்கு வெளியாகி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வால்டர் வீரய்யா திரைப்படம் சிரஞ்சீவிக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. அத்துடன் ஒரே நேரத்தில் வெளியான, பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்மா ரெட்டி' திரைப்படம் பாக்ஸ் ஆஃபீசில் கடும் சவால் அளித்தது.
மகர சங்கராந்தி விடுமுறை நாட்களில் வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய இரு திரைப்படங்களின் தினசரி வசூலிலும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை என்று தெலுங்கு திரையுலகை பின்தொடரும் சேக்நில்க்(Sacnilk) இணையதளம் கூறுகிறது.
ஆனால், பண்டிகை விடுமுறை தினங்கள் முடிவடைந்த பிறகு வீர சிம்மா ரெட்டி திரைப்படம் பின்னடைவை சந்திக்க, வால்டர் வீரய்யா திரைப்படம் இன்னும் ஸ்திரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதை அதன் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
வீர சிம்மா ரெட்டி படத்திற்கு ஒருநாள் பிறகு ரிலீசான வால்டர் வீரய்யா திரைப்படம் இன்று வசூலில் அதனை முந்திவிட்டதாக, தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வசூலை உன்னிப்பாக கவனித்து வரும் ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வால்டர் வீரய்யா திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.153 கோடிக்கும் மேலாக வசூலித்திருக்கிறது.
நடிகர் சிரஞ்சீவியின் சினிமா வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படமாக வால்டர் வீரய்யா அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, சிரஞ்சீவியின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலும் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படமாகவும் இப்படம் உருவெடுக்கும் என்று தெலுங்கு சினிமா வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வால்டர் வீரய்யா திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நடிகர் சிரஞ்சீவி, தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகியுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக 'போலா சங்கர்' என்ற பெயரில் இந்த படம் உருவாகிறது.
மஹெர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆணடு மகா சிவராத்திரியை முன்னிட்டு இநத் படத்தின் முதல் தோற்றம் (First Look) வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அடுத்ததாக, தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானதுடன் தேசிய விருதையும் வென்ற விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்