You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வால்டர் வீரய்யா vs வீர சிம்மா ரெட்டி - வசூல் குறித்து விவாதிக்கும் ரசிகர்கள் - முந்தியது யார்?
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடிப்பில் உருவான துணிவு படமும் வெளியாகி வரவேற்பைப் பெற்று இருக்கின்றன. இரண்டு தரப்பு ரசிகர்களும் எந்தப் படம் வெற்றி பெற்றது, எந்தப் படத்திற்கு அதிக வசூல் என்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
தமிழ்நாட்டை போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்திற்கும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டிக்கும் இடையே தான் போட்டி. அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே நடப்பதைவிட மிகத் தீவிரமாக இவர்களின் ரசிகர்கள் டிவிட்டரில் இந்தப் படங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வால்டர் வீரய்யா படத்தையும் வீர சிம்ஹா படத்தையும் தயாரித்தது ஒரே நிறுவனம் தான். இரண்டு பெரிய படங்களையும் ஒரே நிறுவனம் தயாரித்து இருந்தாலு, எந்தப் படத்திற்கு அதிக வசூல் என்று சிரஞ்சீவியின் ரசிகர்களும் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியான நிலையில், ஒரு நாள் கழித்துதான் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் வெளியானது. ஆனால் இரண்டு படத்திற்கு மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்து இருப்பதாக டிவிட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்
வால்டர் வீரய்யா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தனது டிவிட்டர் பதிவில் சிரஞ்சீவி ஆடும் பாடலை பகிர்ந்து தியேட்டரில் பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டிவிட்டர் பதிவில், சிரஞ்சீவியின் பாடல்களுக்கு பெண்கள் பலர் தியேட்டரில் ஆடும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. தியேட்டரில் இந்த படத்திற்கு அனைத்து ஊர்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிரஞ்சீவி படத்திற்கு தியேட்டர்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டதாகவும் இதனால் பாலகிருஷ்ணா படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தது எனவும் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர்.
ஆனால் தியேட்டர்கள் குறைவாகக் கிடைத்தாலும், திரையில் மாஸ் காட்டும் பாலகிருஷ்ணாவை போலவே அவரது ரசிகர்களும் தியேட்டர்களில் மாஸ் காட்டுவோம் என்று ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தியேட்டரில் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தரையில் அமர்ந்துகூட படம் பார்ப்போம் என வீர சிம்மா ரெட்டி படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆந்திரா, தெலங்கானாவில் 3 நாட்களாக வீர சிம்மா ரெட்டி 46 கோடி வசூல் செய்துள்ளது எனவும், 2 நாட்களுக்கு பிறகு வால்டர் வீரய்யா 32 கோடி வசூல் செய்துள்ளது என சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவில் பாலகிருஷ்ணா, தனது முந்தைய படத்தில் பேசிய வசனத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் "வெற்றியால் எங்களுக்கு மகிழ்ச்சி, தோல்வியால் அவர்களுக்கு வருத்தம்," என்று பாலக்கிருஷ்ணா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள மற்றொரு பயனர், 6.75 கோடி வசூல் செய்த படம் தோல்வி, 5.2 கோடி வசூல் செய்த படம் வெற்றியா என சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவின் படங்களை பதிவிட்டு இடுகை இட்டுள்ளார்.
வீர சிம்மா படத்தைவிட வால்டர் வீரய்யா படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக, பாலகிருஷ்ணாவை கேலி செய்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.
வசூல் ரீதியாக சிரஞ்சீவிதான் எப்போதும் வெற்றி பெறுவார் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். அதில் 100 பேர் முன்னிலையில் அரிவாளுடன் இருக்கும் சிரஞ்சீவி, தனது அரிவாளை தூக்கி அனைவரையும் மிரட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
பாலகிருஷ்ணாவுக்கு பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் ஆதரவு அளிப்பதாக ஒரு மீம் ஒன்றை ரசிகர் பகிர்ந்துள்ளார்.
டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஒருவர், வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி படத்துடன் விஜய் நடித்த வாரிசு படமும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
வால்டர் வீரய்யா திரைப்படம் தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளம் வெளியிட்ட விமர்சனத்தில் ,"கடலோட அரசன், வங்காள விரிகுடாவின் தகப்பன் என சிரஞ்சீவிக்கு கொடுக்கப்பட்ட பில்டப்களை கண்ணைப் பறிக்கும் கலர் சட்டை, அதற்கேற்ற லுங்கி, கூடவே ஒரு கூலிங் க்ளாஸ் உடன் ஸ்கீரினில் தோன்றி நியாயப்படுத்துகிறார் அவர்.
உடன் வரும் ரவி தேஜாவும் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். ஆனால் வழக்கமான வெகுஜன மசாலா சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சில ஏமாற்றங்களைக் கொடுக்கும் படமாக வால்டர் வீரய்யா இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஷ்ருதி ஹாசனுடன் பாடல் காட்சிகள், ரவி தேஜாவுடன் சகோதரப்பாசம், வில்லன்களை அடித்து துவைக்கும் ஆக்சன் காட்சிகள் என சிரஞ்சீவி இந்தப் படத்தில் பல முனை தாக்குதலை இந்தப் படத்தில் கொடுத்து இருக்கிறார் என 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் வழக்கமான பாணியான கடத்தல், மீட்பு, சேசிங் என எடுக்கப்பட்ட வால்டர் வீரய்யா படத்தில், சிரஞ்சீவியின் நடிப்பு ஒன்று தான் நம்மை காப்பாற்றுகிறது என 'தி நியூஸ் மினிட்' விமர்சனம் எழுதியுள்ளது.
சிரஞ்சீவி, ரவி தேஜா கூட்டணியில் வரும் காட்சிகளை தவிர வால்டர் வீரய்யா படத்தில் புதிய காட்சிகள் ஏதுமில்லை. சீரஞ்சீவியின் ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகள் பல இந்த படத்தில் இருக்கின்றன. கிளாசிக் சிரஞ்சீவி வரும் காட்சிகளை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுகின்றனர் என 'தி இந்து' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்