You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"விஞ்ஞானத்தோடே வீண் விளையாட்டு" - பாலகிருஷ்ணாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பொங்கலை முன்னிட்டு தமிழில் வாரிசு, துணிவு படங்கள் ரிலீஸ் என்றால், மகர சங்கராந்திக்காக தெலுங்கில் வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யாவும், பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்மா ரெட்டியும் ரசிகர்களின் பேராதரவுடன் ஆந்திரா, தெலுங்கானாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இரண்டுமே மசாலாப் படங்கள் என்றாலும், வால்டர் வீரய்யாவைக் காட்டிலும் வீர சிம்மா ரெட்டிக்கே அதிக வரவேற்பு இருப்பதாக தெலுங்கு திரையுல விமர்சகர்கள் கூறுகின்றனர். வீர சிம்மா ரெட்டி திரைப்படம் வசூலிலும் முந்தைய பாலகிருஷ்ணா படங்களை பல இடங்களில் முந்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பாலகிருஷ்ணா படங்கள் என்றாலே, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத, அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஓடும் ரயிலை கண்ணாலேயே பார்த்து நிறுத்துவது, விமான நிலையத்தில் புறப்படும் ஆகாய விமானத்தின் எதிரில் நின்று அதன் டயர்களை சுட்டு வில்லன் ஆட்களை வெளியே வரவைத்து பந்தாடுவது, செங்குத்தான மலையில் ஏறும் போது மெய்சிலிர்க்கச் செய்யும் சாகசம், சிறைக்குள் அடைபட்டிருந்த நிலையில் நாயகிக்கு தாலி கட்ட, சிறைக் கம்பிகளுக்குள் மாட்டிக் கொண்ட தாலியை காப்பாற்ற சிறைக் கம்பிகளையே வளைப்பது போன்ற அறிவியலுக்கு சவால் விடும் ஸ்டண்ட் காட்சிகள் பாலகிருஷ்ணா படங்களில் ஏராளம்.
அந்த வகையில், வீர சிம்மா ரெட்டி படத்திலும் நம்பவே முடியாத வகையில் வில்லனின் அடியாட்களை பாலகிருஷ்ணா பந்தாடும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. திரையில் பாலகிருஷ்ணா காட்டும் வீர, தீர பராக்கிரமங்களை பார்க்கச் சென்ற அவரது ரசிகர்கள் இதனால் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஆனால், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அல்லாத, மற்றவர்கள் இதே காட்சிகளைக் கொண்டு வீர சிம்மா ரெட்டி படத்தையே கலாய்க்கின்றனர். குறிப்பாக, தன்னை நோக்கி வரும் கார் ஒன்றை பாலகிருஷ்ணா கோபத்துடன் எட்டி உதைக்க, அந்த கார் அப்படியே பின்னோக்கிச் செல்லும் காட்சி சமூக வலைளதங்களில் பெரிதும் பேசுபொருளாகி விட்டது. பாலகிருஷ்ணா ரசிகர்கள் இந்த காட்சியைக் கொண்டாட, மற்றவர்களோ அதை கலாய்க்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி, கடல் தாண்டி அமெரிக்காவிலும் கூட பாலகிருஷ்ணா ரசிகர்கள் அவரது படத்தை கொண்டாடித் தீர்க்கின்றனர்.
அங்கு திரையரங்கு ஒன்றின் முன்பு பொதுக்கூட்டம் ஒன்று திரண்ட பாலகிருஷ்ணா ரசிகர்களால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் வீர சிம்மா ரெட்டி படத்தின் காட்சியே ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், அமெரிக்காவில் வீர சிம்மா ரெட்டி திரையிடப்பட்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் பாலகிருஷ்ணா திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள், பேப்பர்களை கிழித்து வீசி ஆரவாரம் செய்தனர்.
இதனால், அருகில் அடுத்த திரையில் வேறு படங்களை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் வீர சிம்மா ரெட்டி படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவில் வீர சிம்மா ரெட்டி படத்தின் காட்சிகள் ரத்தானதும், அதுதொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அமெரிக்காவில் வீர சிம்மா ரெட்டி திரைப்படம் அவரது முந்தைய படங்களின் வசூலை முறியடித்து அவருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்