துணிவு, வாரிசு: அஜித் விஜய் படங்களில் யாருக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்தன?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விஜய், அஜித் இருவரும் நடித்த படங்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டு படங்கள் குறித்தும் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக எந்தப் படம் அதிக வசூலை குவித்துள்ளது, திரையரங்கில் எந்தப் படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

வாரிசு vs துணிவு

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியிருந்த துணிவு படமும் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சமூக ஊடகங்களில் வாரிசு படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால், அந்த படத்திற்கு காட்சிகளும், தியேட்டர்களும் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாக டிவிட்டரில் பலர் பகிர்ந்தனர்.

வாரிசு படத்திற்கு காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் குறித்து அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் விவாதத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் இரண்டு படங்களில் தயாரிப்பு நிறுவனங்களோ, விநியோக உரிமையைப் பெற்ற நிறுவனங்களோ இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

வாரிசு படத்திற்கு காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் சினிமா செய்தியாளரான பிஸ்மி. அவர் தனது பதிவில், வாரிசு படத்தின் டிஜிட்டல் மார்கெட்டிங் பிரிவு மூலமாக அந்தப் படத்திற்கு காட்சிகள் அதிகமாக்கப்பட்டுள்ளது எனப் போலியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருவதாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு தொடர்பாக வாரிசு திரைப்படத்தின் சார்பில் விளக்கம் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.

தியேட்டர்கள் அதிகமாகியுள்ளதா?

வாரிசு திரைப்படம் தொடர்பாக முன்வைக்கப்படும் இந்தக் கூற்றின் உண்மைத்தன்மை தொடர்பாக பிரபல சினிமா டிக்கெட் முன்பதிவு தளத்தில் பார்த்தபோது சில தகவல்களைப் பெற முடிந்தது.

சினிமா டிக்கெட் முன்பதிவு தளமான 'டிக்கெட் நியூ' தளத்தில் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு மண்டலத்தில் வாரிசு திரைப்படம் 59 தியேட்டர்கள் ஓடிக்கொண்டு இருப்பதாக அதில் காட்டப்பட்டு இருந்தது.

59 தியேட்டர்களுக்கும் சேர்த்து வாரிசு திரைப்படத்திற்கு 388 காட்சிகளுக்காக முன்பதிவு செய்யும் வசதி அதில் இருந்தது.

அதேநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு மண்டலத்தில் துணிவு படம் 56 தியேட்டர்கள் ஓடுவதாகவும், இதற்காக 408 காட்சிகள் வரை ஒதுக்கப்பட்டு அதற்கான முன்பதிவு நடப்பதாகக் காட்டியது.

அதேபோல செங்கல்பட்டு மண்டலத்தில் இருக்கும் மாயாஜால் திரையரங்கத்தில்தான் சென்னை, செங்கல்பட்டு மண்டலத்தில் அதிக காட்சிகள் இருக்கும். இங்கு 16 திரைகள் இருக்கும் நிலையில், இங்கு 14ஆம் தேதிக்கான முன்பதிவில் வாரிசு படத்திற்கு 23 காட்சிகளும், துணிவு படத்திற்கு 27 காட்சிகளும் இருப்பதாக 'புக் மை ஷோ' டிக்கெட் தளத்தில் காட்டியது.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம், "சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் பொய். இரண்டு படத்திற்கும் சரிசமமான அளவிலேயே காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு வாரம் வரை இரண்டு படங்களுக்குமே ஒதுக்கப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது. 10 நாட்களுக்குப் பிறகு தான் தியேட்டர்களில் காட்சிகளின் எண்ணிக்கை குறையும்," தெரிவித்தார்.

நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், அங்கு மொத்தமுள்ள தியேட்டர்களில் 35% தியேட்டர்களின் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளதாக டிவிட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தியேட்டர்களின் எண்ணிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி இருப்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு வணிக ரீதியாக வெற்றியாக அமைந்துள்ளது என்றும், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

கோவையில் உள்ள முன்னணி திரையரங்கமான கற்பகம் தியேட்டர் சார்பாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் பொங்கல் விடுமுறை முடியும் வரை வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கும் ஆதரவு சிறப்பாக இருப்பதாகவும் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வாரிசு, துணிவு படம் குறித்த விமர்சனம்

வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் அதிக வசூலை ஈட்டி வரும் நிலையில், ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களையும் பலர் பார்த்துள்ளனர்.

துணிவு படம் சிறந்த ஆக்சன் படமாகவும், வாரிசு படம் குடும்பத்துடன் பார்க்க ஏற்றவாறு இருந்தததாகவும் பயனர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர்.

அஜித், விஜய் இரண்டு பேரின் படங்களையும் ஒரே நாளில் அடுத்தடுத்து பார்ப்பது சிறந்த உணர்வைத் தருகிறது என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை நிஷா அவரது கணவர் மற்றும் நடிகர் விஜய்யின் தாய் ஷோபனாவுடன் வாரிசு திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

துணிவு படத்தில் அதிக துப்பாக்கி காட்சிகளும், வன்முறை காட்சிகளும் இருப்பதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர். "விரசமான வசனம் ஏதுமின்றி, சிகரெட், மதுபானம் போன்ற காட்சிகள் இன்றி வெளியாகியுள்ள வாரிசு படத்தை குடும்பத்துடன் பார்க்க சிறப்பாக இருக்கிறது," என ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்தார்.

அஜித் குமார் - எச்.வினோத் கூட்டணியில் வெளியான நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களும் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைப் பேசி வெளி வந்துள்ளது பாராட்டக்கூடியது என சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். 

தனியார் வங்கிகள் மூலமாகப் பலர் அடையும் பாதிப்புகள் குறித்து நடிகர் அஜித் தனது படத்தின் மூலம் பேசியது குறித்து ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

வாரிசு திரைப்படத்தில் அரசு விதிமுறைகளை மீறி இயங்கும் தந்தையின் சுரங்கத்திற்கு ஆதரவாக விஜய் வருவது, கத்தி படத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக அவர் பேசிய வசனங்களுக்கு முரணாக அமைந்திருப்பதாகவும் சில பயனர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: