You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூடான் மோதலில் இந்தியர் உள்பட 100 பேர் பலி - என்ன நடக்கிறது? எளிய விளக்கம்
சூடானின் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) எனப்படும் அந்நாட்டின் துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1,100 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினரும் நாட்டின் தலைநகரான கார்டூம் நகரின் முக்கிய பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கார்டூம் நகர மருத்துவமனைகளில் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போர், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள், மற்றும் உபகரணங்கள் ஆகியவை மக்களிடம் சென்று சேர்வதைத் தடுத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கார்டூம் நகரின் மக்கள் இடைவிடாத துப்பாக்கிச் சத்தங்கள், குண்டுவெடிப்புகளுக்கிடையே, 24 மணிநேரத்தைத் தூங்காமல் கழித்ததாகச் சொல்கின்றனர்.
ஞாயிறன்று தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது எவ்வளவு முறையாகக் கடைபிடிக்கப்படும் என்று தெரியவில்லை.
சூடான் எங்கே இருக்கிறது?
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது சூடான். எகிப்து, சாட், எரித்ரியா, எத்தியோப்பியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் செங்கடலும் இதைச் சுற்றி அமைந்திருக்கின்றன.
ஒரு காலத்தில் பெரிய பன்முகத் தன்மை கொண்ட நாடாக விளங்கியது சூடான். 2011-ஆம் ஆண்டு இந்த நாட்டில் இருந்து தெற்கு சூடான் என்று தனி நாடு பிரிந்து சென்றுவிட்டது. எனினும் எண்ணெய், எல்லை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னையாக இருந்து வருகிறது.
தற்போது சூடானின் மக்கள் தொகை 3.95 கோடி. அரபியும் ஆங்கிலமும் இந்நாட்டின் மொழிகள். பெரும்பான்மை மக்கள் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள்.
தற்போதைய மோதலின் பின்னணி என்ன?
சூடானில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அப்போதிருந்து அந்நாட்டை ராணுவப் படைத்தலைவர்களைக் கொண்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது.
இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கலில் பிரதானமாக இரண்டு ராணுவத் தளபதிகள் உள்ளனர். ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான், சூடானின் படைத்தலைவர். இதனால் நடைமுறைப்படி இவர் நாட்டின் ஜனாதிபதி.
அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ. இவர் ஹெமெத்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூடானின் துணை ராணுவமான Rapid Support Forces இன் (RSF) தலைவர்.
இருவருக்கும் இடையே நாடு செல்லும் திசை, ஜனநாயக அரசினை அமைப்பது போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இருவருக்குமிடையே முக்கியமான பிரச்சனைகள் RSFஇன் ஒரு லட்சம் வீரர்களை ராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால், படைகளுக்கு யார் தலைமை தாங்குவது ஆகியவை.
யார் முதலில் மோதலைத் துவங்கியது?
கடந்த பல நாட்களாக, RSF உறுப்பினர்கள் சூடான் முழுவதும் பணியமர்த்தப்பட்டனர். ராணுவம் இதனை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்தது.
அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கமான சூழலே மோதலாக வெடித்திருக்கிறது.
பேச்சுவார்த்தை மூலமாக நிலமையை சரிசெய்யமுடியும் என்று பலரும் நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை.
அனைத்திற்கும் இடையே, சனிக்கிழமை, யார் முதலில் மோதலைத் துவங்கியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே இருக்கும் ஸ்திரமற்ற தன்மையை இம்மோதல் மேலும் மோசமாக்கும் என்ற அச்சம் பெருமளவில் நிலவுகிறது.
ராஜதந்திரிகள் போர்நிறுத்தம் செய்யுமாறு இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Rapid Support Forces என்பது என்ன?
RSF 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இப்படையின் வேர்கள், மேற்கு சூடானின் டார்ஃபூர் பிராந்தியத்தில் புரட்சியாளர்களைக் கொடூரமாக ஒடுக்கிய ஜன்ஜாவீத் எனப்படும் ஆயுதக்குழுவிலிருந்து முளைப்பவை.
அப்போதிருந்து, ஜெனரல் தாகலோ மிகவும் சக்திவாய்ந்த ஒரு படையைக் கட்டமைத்தார். யேமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த மோதல்களில் இப்படை தலையிட்டது.
மேலும் சூடானின் சில தங்கச் சுரங்கங்கள் இப்படையின் கட்டுப்பட்டில் இருக்கின்றன.
இதன்மீது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இப்படையின் வீரர்கள் 2019ஆம் ஆண்டு 120 போராட்டக்காரர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
ராணுவமல்லாத இப்படியொரு படை, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கான காரணமாகக் கருதப்படுகிறது.
ராணுவ ஆட்சி ஏன்?
2019ஆம் ஆண்டு, சூடானின் நீண்டநாள் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கத்தின் சமீபத்திய விளைவுதான் இந்த மோதல்.
பஷீர் அதிபராக இருந்தபோது, 30 ஆண்டுகளுக்குமேல் நீண்டு கொண்டிருந்த அவரது ஆட்சிக்கு முடிவுவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் அவருக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியது.
அதன்பின்னும், ஜனநாயக அரசுவேண்டி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதைத்தொடர்ந்து, மக்களும் ராணுவமும் இணைந்த ஒரு அரசு நிறுவப்பட்டது. ஆனால் இதுவும் 2021ஆம் அண்டு நிகழ்ந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினால் வீழ்த்தப்பட்டது.
அப்போதிருந்து ஜெனரல் புர்ஹான் மற்றும் ஜெனரல் தாகலோ ஆகியோருக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயக அரசினை நிறுவுவதறகான ஒரு ஒப்பந்தம் சம்மதமானது, ஆனால் இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்தியர்களின் நிலைமை என்ன?
சூடானில் கணிசமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கார்டூம் நகரில் இந்தியாவின் தூதரகம் அமைந்திருக்கிறது. தற்போதைய சண்டையில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அவரது பெயர் ஆல்பர்ட் அகஸ்டின்.
சண்டை ஓரிரு நாளுக்குள் முடிவுக்கு வராது என்பதால் இந்தியர்கள் அனைவரும் தற்போது இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் இருப்பவர்கள் மொட்டை மாடி, பால்கனி ஆகிய பகுதிகளுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்?
மோதல் தொடர்ந்தால், அது சூடானில் மேலும் பிரிவினைகளை உண்டாக்கி, அரசியல் குழப்பங்களை மோசமாக்கும்.
ஜனநாயக அரசினை நிறுவ முயன்றுவரும் ராஜதந்திரிகள், இரண்டு ஜெனரல்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைக்கத் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அதுவரை, சூடானின் சாதாரண குடிமக்கள், மற்றொரு குழப்பமான காலகட்டத்தை வாழ்ந்து கடக்கவேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்