You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா, ஜப்பான் வரிசையில் இந்தியாவும் வளர்ந்த நாடாவது எப்போது?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர், இந்தியா
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோதி, 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதாக உறுதியளித்து வருகிறார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறக்கூடும் என்று பல கணிப்புகள் கூறுகின்றன.
வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருவாய் 13,846 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.11.63 லட்சம்) அல்லது அதற்கும் மேலாக இருக்கிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா, சுமார் 2,400 டாலர்கள் (சுமார் ரூ.2 லட்சம்) தனிநபர் வருமானத்துடன் குறைந்த, நடுத்தர வருமான கொண்ட நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் ஒரு “நடுத்தர வருமான பொறியை” நோக்கிச் செல்லக்கூடும் என்று கடந்த சில ஆண்டுகளாக பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஒரு நாடு வேகமான வளர்ச்சியை, எளிதாக அடைவதை நிறுத்தி, முன்னேறிய பொருளாதார நாடுகளுடன் போட்டியிடும் போது இதுபோல நிகழக்கூடும். இதை “செலவுகள் அதிகரித்து மற்றும் பிற நாடுகளுடன் போட்டியிடும் தன்மையை இழப்பது போன்ற பொறியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழல்" என்று பொருளாதார நிபுணர் ஆர்டோ ஹான்சன் வரையறுக்கிறார்.
இதுபோல உலக வங்கியின் புதிய அறிக்கையில் அச்சமூட்டும் பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி, அமெரிக்காவின் தற்போதைய தனிநபர் வருமானத்தில் 25%-ஐ அடையவே இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும் என்று இந்த ஆண்டின் உலக வங்கி வளர்ச்சி அறிக்கை கூறுகிறது.
இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற 100-க்கும் மேற்பட்ட நாடுகள் "கடுமையான சிக்கல்களை" எதிர்கொண்டுள்ளன. இதனால் வருங்காலத்தில் உயர் வருமானம் கொண்ட நாடக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இவை இடையூறாக இருக்கலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கிற்கு காரணமான 108 நடுத்தர வருமான நாடுகள் குறித்த தரவுகளை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்நாடுகளில் தான் உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் இங்கிருப்பதாகவும், அதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் தீவிர வறுமையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் நடுத்தர வருமான பொறியில் இருந்து தப்பிப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விரைவாக முதுமையை எட்டும் மக்கள் தொகை, முன்னேறிய பொருளாதாரங்களில் முழுமையான தாராளமயத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவது மற்றும் விரைவான ஆற்றல் மாற்றத்திற்கான அவசரத் தேவை போன்ற சிக்கல்களை அந்நாடுகள் சந்தித்து வருகின்றனர்.
"உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான போரில் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வெற்றி அல்லது தோல்வி என எது வேண்டுமானாலும் நிகழலாம்" என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆய்வாளர்களில் ஒருவருமான இந்தர்மிட் கில் கூறுகிறார்.
"ஆனால் இந்த நாடுகள் முன்னேறிய பொருளாதாரமாக மாறுவதற்கு பழைய உத்திகளையே நம்பியுள்ளன. அவர்கள் நீண்ட காலமாக முதலீட்டை மட்டுமே நம்பியுள்ளனர் அல்லது தேவைக்கு முன் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாறுகின்றனர்.
உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வர்த்தக வளர்ச்சி வேகம் பெரும்பாலும் மெதுவாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா, மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளில் 40 ஆண்டுகளாக செயல்படும் நிறுவனங்கள் வெறும் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே அடைகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவில், இது போன்ற நிறுவனங்கள் ஏழு மடங்கு வளர்ச்சி அடைகின்றன. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தும் வளர்ச்சி பெற போராடுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதன் விளைவாக, இந்தியா, பெரு மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 90% நிறுவனங்களில் ஐந்துக்கும் குறைவான ஊழியர்களே பணிபுரிகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே 10 அல்லது அதற்கும் மேற்பட்டவர்களைக் கொண்டுள்ளனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
கில் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய அணுகுமுறையை பரிந்துரைக்கின்றனர். இதில் இந்த நாடுகள் அதிக முதலீட்டில் கவனம் செலுத்தி, உலகம் முழுவதிலுமிருந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
தென் கொரியா இதற்கு சான்றாக இருக்கிறது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. 1960 ஆம் ஆண்டில், அதன் தனிநபர் வருமானம் $1,200 ஆக இருந்தது . 2023-ஆம் ஆண்டில் அது $33,000 ஆக உயர்ந்துள்ளது.
தொடக்க காலத்தில், தென் கொரியா பொது மற்றும் தனியார் முதலீட்டை அதிகரித்தது. 1970-களில், அந்நாடு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி முறைகளை பின்பற்றும் ஒரு தொழில்துறை கொள்கைக்கு மாறியது.
சாம்சங் போன்ற நிறுவனங்கள் இதன் அடிப்படையில் செயல்பட்டன. ஆரம்பத்தில் நூடுல்ஸ் தயாரிப்பாளராக இருந்த சாம்சங், ஜப்பானிய நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்ப உரிமம் பெற்று உள்நாட்டு மற்றும் வட்டார சந்தைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கியது.
இந்த வளர்ச்சி திறமையான தொழிலாளர்களுக்கான தேவையை உருவாக்கியது. இதற்கான திறன் வளர்ச்சிக்கு, அரசாங்கம் நிதி அறிக்கையில் திட்டங்களை அதிகரித்து, பொது பல்கலைக் கழகங்களுக்கு திறன் வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்தது. இன்று, சாம்சங் ஒரு உலகளாவிய நவீன தொழில்நுட்ப நிறுவனமாகவும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் இருக்கிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது.
போலந்து, சிலி போன்ற நாடுகளும் இதே முறையை பின்பற்றின என்று அந்த வறிக்கை கூறுகிறது. போலந்து மேற்கு ஐரோப்பிய தொழில்நுட்பங்களை பின்பற்றி உற்பத்தி திறனை அதிகரித்தது. நார்வேயின் சால்மன் பண்ணைத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பிரபல சால்மன் மீன் ஏற்றுமதியாளராக சிலி மாறியது.
வரவிருக்கும் நடுத்தர வருமான பொறி குறித்து வரலாறு போதுமான குறிப்புகளை வழங்குகிறது. நாடு செழிப்பாக வளரும் போது, அது பெரும்பாலும் 8,000 அமெரிக்க டாலர் என்ற நிலையை எட்டியதும் ஒரு வலையில் விழுந்து, அதை மீண்டும் நடுத்தர வருமான வரம்பில் தள்ளுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு 34 நடுத்தர வருமான நாடுகள் மட்டுமே வளர்ந்த நாடாக மாறியுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளுடன் ஒருங்கிணைந்ததால் பயனடைந்துள்ளன.
பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜனும், ரோஹித் லம்பாவும் தனித்தனியாக மதிப்பிட்டுள்ளபடி, தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக இருந்தாலும், இந்தியாவின் தனிநபர் வருமானம் 2060 ஆம் ஆண்டில்தான் 10,000 டாலரை எட்டும். இது சீனாவின் இன்றைய அளவை விட குறைவு.
“வரும் ஆண்டுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். மற்ற நாடுகளை போலவே வருங்காலத்தில் நமது நாட்டின் மக்கள் தொகையில் வயது முதிர்ந்த பிறகும் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை உயரும்" என்று அவர்களது புதிய புத்தகமான The Mould: Reimagining India's Economic Future இல் எழுதியுள்ளனர்.
“நமது இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றால், நாம் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். நமது மக்கள் தொகை வயதாகத் தொடங்குவதற்கு முன்பு, நாம் வசதியான நடுத்தர வர்க்கமாக மாற வேண்டும்” என்கிறார் அவர்.
சுருங்கச் சொன்னால், “இந்தியா வயதாகி விடுவதற்கு முன் வளமாகுமா? என்று பொருளாதார நிபுணர்கள் வியப்புறுகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)