You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக.19-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்பாரா? திமுகவில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் இதனை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.
"தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். ஆனாலும், துணை முதல்வர் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? திமுகவில் என்ன நடக்கிறது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதன் பின்னர், துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை ஒட்டி மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் முதல்வரின் பொறுப்புகளைக் கவனிக்கும் வகையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா எதிர்பார்ப்பு திமுகவில் ஒரு தரப்பினரிடையே மீண்டும் எழுந்துள்ளது.
ஆக.19-ம் தேதி உதயநிதி பதவியேற்பா?
இந்நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 9ஆம் தேதி நடந்த 'தமிழ்ப் புதல்வன்' திட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை முதல்வர் பதவி குறித்துப் பேசினார்.
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் துறையின்கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டம் வருகிறது. அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்" என்று கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” என்றும் குறிப்பிட்டார். பின்னர் உடனே “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகு தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று கூற வேண்டும். அதற்கு முன்பு அவ்வாறு பேசக் கூடாது” என்று அவர் கூறினார்.
’உதயநிதி துணை முதல்வர் ஆவார்’ என்று பேசப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஒருவர் தேதியை குறிப்பிட்டுப் பேசியது விவாதப் பொருளாக மாறியது. அதேநாளில், இந்தக் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
"உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே?" என செய்தியாளர் கேட்டபோது, "கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, பழுக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
திமுக இளைஞரணி சார்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, "நான் ஏற்கெனவே சொன்னது போல, அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருக்கிறோம். எங்கு சென்றாலும் இளைஞரணி செயலாளர் என்ற பதவி தான் எனக்கு நெருக்கமானது," என்றார்.
திமுக பதில்
துணை முதல்வர் பதவி குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "முதல்வருக்கு துணையாக ஒருவர் வேண்டும் என்பது கட்சியினர் மத்தியில் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும் போது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஒருவர் வேண்டும் என பேசப்பட்டது.
அந்த அடிப்படையில், துணை முதல்வர் பதவி தொடர்பான பேச்சுகள் எழுகின்றன. இந்த தேதியில் பதவியேற்பார் என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசக் கூடியவை தான்."என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "ஒருவருக்கு பொறுப்புகளை வழங்குவது என்பது கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சியில் ஒருமித்த கருத்தாக உள்ளது. அவருக்குப் பொறுப்பைக் கொடுக்கலாமா என்பதை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்," என்று கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் கூறியது என்ன?
துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்த பிறகும் அதுகுறித்த விவாதம் தொடர்வது ஏன் என, மூத்த பத்திரிகையாளர் கே.கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் வினவியது.
"அதற்கு சில காரணங்கள் உள்ளன. 2006-2011 தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது துணை முதல்வர் பொறுப்பில் ஸ்டாலின் அமர்த்தப்பட்டார். இன்று உதயநிதியை முன்மொழிந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன் ஆகியோர் எப்படி பேசுகிறோர்களோ, அதேபோல் அன்று பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனே ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தார். அதன்பின்னரே, துணை முதல்வராகவும் கட்சியின் செயல் தலைவராகவும் மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். ” என்று அவர் கூறினார்.
"எனினும், தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் என தி.மு.க., தலைமை விரும்புகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 மாத அவகாசம் உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., ஆகிய கட்சிகள் தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைத்தால், அது தி.மு.க.வுக்கு சவாலானதாக மாறலாம். அப்படியிருக்கும் போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அது வாரிசு அரசியல் என்ற பெயரில் பேசுபொருளாக மாறிவிடக் கூடாது என்பதில் தி.மு.க., தலைமை எச்சரிக்கையாக உள்ளது,” என்றார் அவர்.
“துணை முதல்வர் என்பது ஓர் அலங்கார பதவி. அரசியல் அமைப்பு ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லை. 'அரசியலில் அடுத்த தலைமை இவர் தான்' என அங்கீகரித்து வழிகாட்டுவதற்கான முறையாக இந்தப் பதவி பார்க்கப்படுகிறது" என்கிறார், கார்த்திகேயன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)