அபுதாபியில் ஊதியம் கிடைக்காமல் உணவுக்கே வழியின்றி தவிக்கும் இந்தியர்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
- எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
- இருந்து, ராஞ்சி
"எங்களிடம் உணவு உண்பதற்கோ அல்லது வீட்டு வாடகை கொடுப்பதற்கோ பணம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக அனைவரும் அபுதாபியில் சம்பளம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்."
45 வயதான சுராமன் மஹதோவின் வார்த்தைகள் இவை. இவர் அபுதாபியில் மசாய் கான்ட்ராக்டிங் எல்எல்சி நிறுவனத்தில் ஒரு டிரான்ஸ்மிஷன் லைன் கோபுரத்தை நிறுவும் பணியில் 18 மாதங்களாக ஈடுபட்டிருந்தார்.
இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்த பிறகு, அவருக்கு வேலை இல்லை. இப்போது அவர் அபுதாபியின் கிராமப்புறப் பகுதியான 'ஹமீம்' இல் வேலையில்லாமல் வசித்து வருகிறார்.
சுராமன் மஹதோவைப் போலவே அவருடன் மேலும் 14 தொழிலாளர்கள் உள்ளனர்

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
வாடகை கொடுக்கவில்லை, உணவுக்கு பணம் இல்லை, நோய்க்கு சிகிச்சை இல்லை
இந்த 15 தொழிலாளர்கள் தங்குவதற்காக மூன்று அறைகள் கொண்ட தங்குமிடத்தை கொடுத்திருந்தது அந்த நிறுவனம். விடுதி வாடகையை கொடுத்துவந்த நிறுவனம் தற்போது வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டது.
"வாடகை செலுத்துங்கள் அல்லது விடுதியை காலி செய்யுங்கள் என்று விடுதி உரிமையாளர் சொல்லிவிட்டார்," என்று சுராமன் கூறுகிறார்.
"விடுதி வாடகை செலுத்துவது ஒருபுறம் இருக்க, உணவுக்கு வழியில்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். கடந்த ஒரு மாதமாக, உப்பு போட்ட சாதம் அல்லது வேகவைத்த உருளைக் கிழங்கை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று மஹ்தோவின் நண்பர் லகன் சிங் கூறுகிறார்.
லகன் சிங்கின் நண்பர் சுக்தேவ் சிங் கூறுகையில், முன்பு உணவுக்காக 600 திர்ஹாம் தொகை கிடைத்து வந்தது. ஆனால் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 850 திர்ஹாம்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்.
"அபுதாபி போன்ற ஒரு இடத்தில் 850 திர்ஹாம் பணத்தில் ஒருவர் எப்படி மூன்று மாதங்கள் உயிர்வாழ முடியும்?" என்று அவர் கேட்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சுக்தேவ் சிங் வழுக்கி விழுந்ததில் அவரது வலது கால் எலும்பு முறிந்தது. "நாள் முழுவதும் படுத்தே கிடக்கிறேன். இப்போது இதுதான் எனக்கு ஒரே சிகிச்சை. பணம் இருந்தால் தானே முறையான சிகிச்சை செய்ய முடியும்?" என்கிறார் அவர்.
"எலும்பு முறிந்து போயிருப்பது குறித்து எனது மேற்பார்வையாளர் மணிராஜிடம் தெரிவித்தேன், ஆனால் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை" என்று சுக்தேவ் கூறுகிறார்.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
"எங்கள் துயர நிலையை வெளியில் சொல்லவே எனது சொந்த மாவட்டமான கிரிதிஹில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆர்வலர் சிக்கந்தர் அலி மூலம் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டேன், இதனால் எங்களுக்கு உடனடி உதவி கிடைக்கும் என்று நினைத்தேன்" என்று லகன் சிங் கூறுகிறார்.
'இது எங்கள் 15 தொழிலாளர்களின் பிரச்னை மட்டுமல்ல, கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கிடைக்காததால் ஜார்கண்டில் வறுமையில் வாடும் எங்கள் குடும்பங்களும் பசியில் வாடுகின்றன' என்று லகன் சிங் கூறுகிறார்.
தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை நிறுவனத்தின் பொது மேலாளர் என்.டி. ரெட்டி ஒப்புக்கொள்கிறார். "இது ஒரு தற்காலிக பிரச்னை. உள்ளூர் திட்ட மேலாளரிடமிருந்து அறிக்கையைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது, இன்வாய்ஸ் அனுப்பப்படவில்லை என்பதால் சம்பளமும் நிறுத்தப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
பொது மேலாளரின் அறிக்கை குறித்து லகன் சிங் கூறுகையில், "நிறுவனத்தில் ஆரம்பத்திலிருந்தே முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதன் விளைவுகளை நாங்களும் எங்களது குடும்பம் அனுபவிக்கிறோம்" என்று சொல்கிறார்.
1100 திர்ஹாம் மாத சம்பளத்தில் இந்தத் தொழிலாளர்கள் அபுதாபிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த மூன்று மாத சம்பளத்தையும் சேர்த்தால் மொத்தம் 3300 திர்ஹாம்கள் இருக்கும். இந்திய மதிப்பில் சுமார் 69 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.
"இந்தத் தொகை எங்கள் உயிர்நாடி, இதற்காகத் தான் நாங்கள் கடல் கடந்து இவ்வளவு தூரம் வந்து வேலை செய்துள்ளோம்" என்று லகன் சிங் கூறுகிறார்.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
"வட்டிக்கு கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை"
லகன் சிங்கின் மனைவி சைகி தேவி, ஜார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின் கோவிந்த்பூரில் தனது இரண்டு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
தனது கணவருக்கு சம்பளம் கிடைக்காததால், மூன்று மாதங்களாக வீட்டு வாடகையை செலுத்த முடியவில்லை என்றும், சமீபத்தில் தனது இளைய மகன் தீபக்கின் இரு கைகளும் உடைந்தபோது, அவனது சிகிச்சைக்காக வட்டிக்கு பணம் வாங்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தீபக்கின் சிகிச்சைக்காக சுமார் 19 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது என்கிறார் சைகி தேவி. "விஷ்ணுகர் செல்ல வாகன முன்பதிவுக்கு 5 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இந்த சூழ்நிலையில், சம்பளம் கிடைக்கவில்லை என்றால், எங்களது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும்" என்று கூறுகிறார்.
தனது மகன் தற்போது இருக்கும் மோசமான நிலையை புகைப்படம் எடுத்து நிறுவனத்தின் பொது மேலாளருக்கு அனுப்பியதாகவும், ஆனால் அப்போதும் கூட 'தனது கணவரின் சம்பளத்திலிருந்து அவரது சிகிச்சைக்காக கொஞ்சம் பணம் கொடுக்க அவருக்கு இரக்கம் இல்லை' என்றும் சைகி தேவி கூறுகிறார்.
இது தொடர்பாக, நிறுவனத்தின் பொது மேலாளர் என்.டி. ரெட்டியிடம் பிபிசி பேசியபோது, "லகன் சிங்கின் மகனின் பிரச்னை எனக்குத் தெரியும். விரைவில் அவரது சம்பளத்தை வழங்க முயற்சிக்கிறேன்" என்று கூறினார்.
ஆனால் லகன் சிங், "நிறுவனம் 'இப்போது தருகிறோம், நாளை தருகிறோம்' என்று சொன்னாலும், சம்பளம் கொடுக்காமல் தவிக்க விடுவகிறது. பணப் பற்றாக்குறையால், மகனுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
கடன் கொடுப்பதை நிறுத்திய கடைக்காரர்கள்
லகன் சிங்கைப் போலவே, மற்ற தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலையும் ஊதியம் கிடைக்காததால் மோசமடைந்துள்ளது.
இதில் பைஜ்நாத் மஹதோ, மகேந்திர மஹதோ, சீதாராம் மஹதோ, கிரிதிஹ் மாவட்டத்தின் முராத் மஹதோ, சந்திரிகா மஹதோ, கைலாஷ் மஹதோ, பிஷுன் மஹதோ, ஜகன்னாத் சிங், சுக்தேவ் சிங், அர்ஜுன் மஹதோ, திரிலோகி மஹதோ, ஹசாரிபாக் மாவட்டத்தின் பாலேஷ்வர் மஹதோ மற்றும் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் மஹதோ ஆகியோர் அடங்குவர்.
சுராமன் மஹதோவின் குடும்பம் கிரிதியின் அல்காரி குர்த் கிராமத்தில் வசிக்கிறது.
அவரது மனைவி ஜசோதா தேவி, கடந்த மூன்று மாதங்களாக அருகிலுள்ள மளிகைக் கடையில் எண்ணெய், சோப்பு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கடனுக்கு வாங்கி வருவதாகவும், ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், கடைக்காரர் தனக்குப் பொருட்களைக் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
சம்பளம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளர்கள்
மசாய் கான்ட்ராக்டிங் எல்எல்சியில் பணிபுரியும் 8 தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த 15 தொழிலாளர்களுடன் பணிபுரிந்தனர்.
இது குறித்து, நிறுவனத்தின் பொது மேலாளர் ரெட்டி கூறுகையில், "சம்பளம் வழங்குவதில் தாமதம் மட்டுமே உள்ளது, உள்ளூர் திட்ட மேலாளரால் விலைப்பட்டியல் அனுமதிக்கப்பட்டவுடன் சம்பளம் கொடுக்கப்படும்" என்கிறார்.
அபுதாபியில் சிக்கித் தவிக்கும் 15 தொழிலாளர்களில் சிலருக்கு தொழிலாளர் அட்டை இல்லை. சந்திரிகா மஹதோ, மகேந்திர மஹதோ, சீதாராம் மஹதோ, முராத் மஹதோ மற்றும் சுக்தேவ் சிங் ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.
'தொழிலாளர் அட்டை இல்லாததால், நாங்கள் எங்கும் செல்ல முடியாது' என்று சந்திரிகா மஹதோ கவலையுடன் கூறுகிறார். "அத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகம் எங்களைப் பிடித்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்று அறிவித்தால், எங்கள் நிலைமை என்னவாகும்?" என்று அவர் கேட்கிறார்.
இது தொடர்பாக நிறுவனத்தின் பொது மேலாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
'எனது பாஸ்போர்ட் காலாவதியாகப் போகிறது'
பணம் கிடைத்ததும், நாங்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புகிறோம் என்று சந்திரிகா மஹதோ கூறுகிறார்.
ஆனால், "அனைவருக்கும் சம்பளம் கொடுத்த பின்னர், அடுத்த திட்டத்தில் யாரை வைத்திருப்பது, யாரை திருப்பி அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்வோம்" என்று ஜி.எம். ரெட்டி கூறுகிறார்.
ஜகநாத் சிங் என்ற தொழிலாளி தனது பாஸ்போர்ட்டைப் பற்றி கவலைப்படுகிறார்.
'எனது பாஸ்போர்ட் ஜூலை 30, 2025 அன்று காலாவதியாகிவிடும்' என்று அவர் கூறுகிறார். நான் இதை பொது மேலாளரிடம் சொல்லும் போதெல்லாம், அவர் இன்னும் நேரம் இருக்கிறது, பாஸ்போர்ட் செளதி அரேபியாவிலேயே புதுப்பிக்கப்படும் என்று கூறி அதைத் தள்ளிப்போடுகிறார்.'
"காலாவதி தேதி நெருங்கி வருவதால், ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வேனோ என்ற கவலை அதிகரித்து வருகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
தொழிலாளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் குறித்து, ஜார்கண்ட் தொழிலாளர் இணை ஆணையர் பிரதீப் லக்ரா கூறுகையில், இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும், மேலும் சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்து இதற்கான தீர்வை கண்டறிவோம் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், MD. SARTAJ ALAM
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து, ஹசாரிபாக் மற்றும் கிரிதிஹ் மாவட்ட துணை ஆணையர்களிடம் பேசியபோது, இந்த விஷயம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், ஜார்கண்டின் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "குடியேற்றவாசிகளின் பாதுகாவலர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரக தொழிலாளர் பிரிவுக்கு இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, அனைவரின் பாஸ்போர்ட் விவரங்களும் பகிரப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இந்த விஷயத்தில் நடவடிக்கை தொடங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என அவர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சகத்தின் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் அதிகாரியான சுஷில் குமார் கூறுகையில், 'இதுபோன்ற சமயங்களில், முதலில் இந்த தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய முகவர்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அதன் பிறகு, அவர்கள் மூலம் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறோம். இந்த வழக்கிலும் அதே செயல்முறை நடந்து வருகிறது.'

"வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் பலர் பதிவு செய்யாமல் சென்றுவிடுகின்றனர். அதனால்தான் அவர்கள் பிரச்னைகளுக்கு பலியாகின்றனர்" என்று தொழிலாளர் நல இணை ஆணையர் பிரதீப் லக்ரா கூறுகிறார்.
ஜார்கண்டின் தொழிலாளர் துறை கூடுதல் செயலாளர் சுனில் குமார் சிங் கூறுகையில், "எதிர்காலத்தில், வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள், பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் ஊராட்சி நிலையிலேயே செய்யப்பட்டு வருகின்றன, இதனால் தொழிலாளர்கள் எந்தவொரு மோசடி நிறுவனத்திடமும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடியும்," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












