டிரம்பின் வரி மிரட்டலுக்கு பணிந்ததா கொலம்பியா? 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றது ஏன்?
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கும் அண்டை நாடான கொலம்பியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதல் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது.
சீனா, கனடா, மெக்சிகோவுக்கு எதிராக டிரம்பின் முதல் வரி நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சாட்டையை கொலம்பியாவுக்கு எதிராக சுழற்றி இருக்கிறார் டிரம்ப். எனினும், சற்று நேரத்திலேயே அந்த முடிவை அமெரிக்கா கைவிட்டது. என்ன நடந்தது?
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை 2 ராணுவ விமானங்களில் அமெரிக்கா அனுப்பியது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை 2 அமெரிக்க ராணுவ விமானம் ஒவ்வொன்றிலும் சுமார் 80 குடியேறிகளுடன் கொலம்பியா சென்றது.
இந்த விமானத்தை தரையிறக்க கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அனுமதி மறுத்துவிட்டார்.
குடியேறிகளை ராணுவ விமானங்களில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த குஸ்டாவோ பெட்ரோ, குற்றவாளிகளைப் போல நடத்தாமல் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.
தனது விமானங்களை தரையிறக்க கொலம்பியா அனுமதி மறுத்ததை அடுத்து, அந்நாட்டின் மீது வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார். கொலம்பியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பதாக தெரிவித்த டிரம்ப், ஒரு வாரத்தில் 50 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக 'Truth Social' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவுக்குள் வரும் அனைத்து கொலம்பியா பொருட்களுக்கும் அவசரகால 25% வரிகள் விதிக்கப்படும். ஒரு வாரத்தில், 25% வரிகள் 50% ஆக உயர்த்தப்படும். கொலம்பிய அரசு அதிகாரிகள், அனைத்து நட்பு நாடுகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது பயணத் தடை மற்றும் உடனடி விசா ரத்து செய்யப்படும். கொலம்பிய அரசின் அனைத்து கட்சி உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது விசா தடைகள் விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இது வெறும் தொடக்கம் மட்டும்தான் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மீது 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், குடியேறிகளைக் கட்டுப்பாடுகள் இன்றி ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொலம்பியா மீதான வரி விதிப்பு திட்டங்களை கைவிடுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒருவேளை கொலம்பியா ஒப்புக்கொண்டதை பின்பற்ற தவறினால் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



