ஸ்ரீவைகுண்டம்: அசாம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சிறார்கள் உள்பட மூவர் கைது

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறார்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலை செய்து வந்துள்ளனர்.
காவல்துறை அளித்த தகவலின்படி, திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (வயது 27) என்பவர் சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை வேலையில் சேர்த்துவிட்டுள்ளார்.
காவல்துறை கூறுவது என்ன?
இந்நிலையில், "தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி அத்தம்பதி அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்துள்ளனர். அப்போது முகமது மஹ்புல் ஹுசைன், இரண்டு இளம் சிறார்களுடன் அசாம் தம்பதியைத் தடுத்து நிறுத்தி, கணவரைப் பிடித்து வைத்ததோடு, மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக" காவல்துறை கூறுகிறது.
இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களைக் கைது செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சார்பு ஆய்வாளர் சேவியர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''அத்தம்பதி தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தங்கிப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகப் போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்று தொழிற்சாலை உரிமையாளரிடம் தம்பதி கேட்டுள்ளனர். அப்போது, அவர்களது சம்பளம் ஏஜென்ட் முகமது மஹ்புல் ஹுசைனிடம் கொடுக்கப்பட்டு வருவதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இதைத் தொடர்ந்து அவர்களது சம்பளத்தை முமகது மஹ்புல் ஹுசைனிடம் கேட்டபோது அவர் தர மறுத்ததாகவும், அதனால் மீண்டும் அசாமுக்கே செல்வதாக தொழிற்சாலை உரிமையாளரிடம் கூறிவிட்டு 14-ஆம் தேதி இரவு தம்பதி புறப்பட்டுச் சென்றதாகவும் சார்பு ஆய்வாளர் சேவியர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, காட்டுப் பகுதியில் நடந்து சென்ற அசாம் தம்பதியை தடுத்து நிறுத்தி, முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர் என மூன்று பேர் அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதோடு, "பின்னர் இருவரும் தப்பித்து ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ரயில்வே போலீசாரிடம் நடந்ததைக் கூறியதால் ரயில்வே போலீசார் ஸ்ரீவைகுண்டம் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்" என்கிறார் சேவியர்.
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவரிடம் புகார் பெறப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது மஹ்புல் ஹுசைனை தூத்துக்குடி மாவட்ட சிறையிலும் இரண்டு சிறார்களை சிறுவர் சீர்திருத்த மையத்திலும் வைத்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












