You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டீசல்' ஊடக விமர்சனம்: ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றாரா ஹரிஷ் கல்யாண்?
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், வினய் ராய், அதுல்யா ரவி, சாய் குமார், கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'டீசல்' திரைப்படம், தீபாவளியை ஒட்டி நேற்று (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஹரிஷ் கல்யாணின் முந்தைய இரு திரைப்படங்களான 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்புகள் இருந்தன, 'டீசல்' படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
டீசல் திரைப்படத்தின் கதை என்ன?
1980களில் வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.
இதில், தனது நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார் மனோகரன் (நடிகர் சாய்குமார்).
பின்னர் சில வருடங்களில், கச்சா எண்ணெய் தொழில் மூலம் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார் மனோகரன். கதை 2014க்கு நகர்கிறது. இப்போது, மனோகரனின் மகன் 'டீசல்' வாசுதேவன் (ஹரிஷ் கல்யாண்), தந்தையின் தொழிலில் அங்கம் வகித்தவாறே மீனவ மக்களுக்கும் நற்பணிகளைச் செய்கிறார்.
இவர்களுக்கு போட்டியாக கச்சா எண்ணெய்யை திருடி விற்கும் தொழிலில் பாலமுருகன் (விவேக் பிரசன்னா) நுழைவதும், காவல்துறை அதிகாரி மாயவேல் (நடிகர் வினய் ராய்) உடனான 'டீசல்' வாசுதேவனின் 'ஈகோ' மோதலும், பல பிரச்னைகளை உருவாக்குகின்றன. அதன் பிறகு என்னவானது? நாயகன் 'டீசல்' அந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.
'டீசல்' எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
"'டீசல்' படத்தின் தொடக்கம் சிறப்பாக உள்ளது. இயக்குனர் வெற்றி மாறனின் குரலில், 'வட சென்னை' திரைப்படத்தை நினைவூட்டும் வகையில், திரைப்படத்தின் முன்கதை சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, அதைத் தொடர்ந்து வெடிக்கும் போராட்டங்கள், உயிரிழப்புகள் என ஒரு அழுத்தமான களம் கண்முன் விரிகிறது." என்று 'இந்தியா டுடே'-வின் திரைப்பட விமர்சனம் கூறுகிறது.
"ஆனால், சுவாரசியம் என்பது இந்த முதல் சில நிமிடங்களோடு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு, ஒரு 'மசாலா' திரைப்பட பாணிக்குள் கதை செல்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் இருந்த நம்பகத்தன்மை காணாமல் போகிறது. குறிப்பாக, ஹரிஷ் கல்யாண்- அதுல்யா ரவி காதல் திரைப்படத்தை இன்னும் பலவீனப்படுத்துகிறது." என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.
'தி இந்து' ஆங்கில நாளிதழ் தனது விமர்சனத்தில், "டீசல் திரைப்படத்தின் பிரச்னையே, 'டீசல்' என்ற எரிபொருளின் பின்னணி குறித்து மட்டுமே அதிக நேரம் பேசுவது தான். இயக்குனர் சண்முகம் முத்துசாமி பல விஷயங்களை திரைப்படத்தில் பேசுகிறார், அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அந்த எரிபொருள் பின்னால் உள்ள மோசடிகளையும், அதைக் கட்டுப்படுத்தும் அதிகார பலம் கொண்ட தனிநபர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். ஆனால் ஒரு கட்டத்தில், நாம் சோர்வடைவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் இவை அனைத்துமே பார்வையாளர்களுக்கு அந்நியமாக தெரிகின்றன." என்று கூறியுள்ளது.
"திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தெளிவாக இல்லை. உதாரணத்திற்கு ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' கதாபாத்திரத்திற்கு, வடசென்னையின் நிழல் உலகம் பயப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதற்கான காட்சிகள் இல்லை. திரைப்படத்தில் ஓரளவு இருக்கும் சுவாரசியம் கூட ஹரிஷ் கல்யாண்- அதுல்யா ரவி காதல் காட்சிகளாலும், மூன்று பாடல்களாலும் காணாமல் போகிறது" என 'டைம்ஸ் ஆப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.
மேலும், "சண்டை மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் 'டீசல்' கதாபாத்திரம், திடீரென புத்திக்கூர்மையால் பிரச்னையால் எதிர்கொள்வது போல காட்டியிருப்பது நம்பும்படி இல்லை." என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பு எப்படி உள்ளது?
"இடைவேளைக்கு முந்தைய காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும், 'டீசல்' திரைப்படம் ஹரிஷின் நட்சத்திர இமேஜை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. அவரும் அதற்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளார்." என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
"ஹரிஷ் கல்யாண் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். ஆனால், அந்த உழைப்பிற்கு ஏற்ற திரைக்கதை இல்லாததே பிரச்னை" என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.
"ஹரிஷ் கல்யாணின் தோற்றம், ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஆகியவை திரைப்படத்திற்கு பெரிதும் உதவுகின்றன. திரைப்படத்தை தனது நடிப்பின் மூலம் அவர் நகர்த்தி கொண்டுசெல்ல உதவுகிறார். அதேபோல, வினய் ராய் வில்லனாக சிறப்பான நடிப்பை அளித்துள்ளார், கருணாஸும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்" என 'டைம்ஸ் ஆப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.
"ஹரிஷ் கல்யாணின் நடிப்பு செயற்கையாக உள்ளது. ஒரு 'வடசென்னை இளைஞனாக' அவர் முழுமையாக இந்தப் படத்தில் பொருந்தவில்லை. 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இதில் அவர் நடிப்பு ஏமாற்றமளிக்கிறது. 'ஒரு மாஸ் ஹீரோவாக' திரையில் தெரிவதில் ஹரிஷ் கல்யாணுக்கு இருக்கும் சிக்கல்களை 'டீசல்' திரைப்படம் வெளிப்படுத்துகிறது" என 'இந்தியா டுடே'-வின் திரைப்பட விமர்சனம் கூறுகிறது.
"பல திரைப்படங்களில் சமூக பிரச்னைகள் மறைமுகமாக சொல்லப்படும், கதாபாத்திரங்கள், சுவாரசியமான திரைக்கதை மூலம் மக்கள் அதை புரிந்துகொள்வார்கள். 'டீசல்' திரைப்படத்தில், அவை நேரடியாக, தைரியமாகச் சொல்லப்பட்டுள்ளன" என 'டைம்ஸ் ஆப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு