காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு

ஒடிசா அமைச்சர்- துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், ANI

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிறன்று உயிரிழந்தார். முன்னதாக, பிற்பகலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த நாப் கிஷோர் தாஸை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டார். 

ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க நபா கிஷோர் தாஸ்சென்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பிற்பகல் ஒருமணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

துப்பாக்கியால் சுடப்பட்டதும், வான்வழியாக அவர் உடனடியாக புவனேஸ்வர் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கடுமையாக முயன்றும், எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோதி, முதலமைச்சர் பட்நாயக் இரங்கல்

நபா கிஷோர் தாஸ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸின் திடீர் மறைவு அதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல். ஓம் சாந்தி’ என குறிப்பிட்டுள்ளார். 

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சுகாதாரத்துறை அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, முதலமைச்சர் பட்நாயக் இந்த வழக்கின் விசாரணையை குற்றப் பிரிவுக்கு ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று விவரித்த முதலமைச்சர் பட்நாயக், “மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.

“அரசு மற்றும் கட்சி இரண்டிற்கும் நாப் தாஸ் ஒரு சொத்தாக இருந்தார். அவர் மக்கள் நலனுக்காக சுகாதாரத் துறையில் பல முக்கிய முயற்சிகளை எடுத்து அவற்றை வெற்றிபெறச் செய்தார். ஒரு தலைவராக, பிஜூ ஜனதா தளம் கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவு ஒடிசா மாநிலத்திற்கு பேரிழப்பாகும்.” என்றும் அவர் தெரிவித்தார். 

நபா கிஷோர் தாஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போது முதலமைச்சர் பட்நாயக்கும் அங்கு இருந்தார். 

ஜார்சுகுடாவில் உள்ள பிரஜ்ராஜ்நகரின் எஸ்டிபிஓ, சர்பேஸ்வர் போய், சம்பவத்திற்குப் பிறகு, "இந்த தாக்குதலை ஒரு போலீஸ் ஏஎஸ்ஐ செய்தார். அந்த போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார்" என்று கூறினார்.

மறுபுறம், எதிர்க்கட்சிகள் முதல்வர் நவீன் பட்நாயக்கைக் குறிவைத்து, இந்த சம்பவத்தை சட்டம்-ஒழுங்கு தோல்விக்கு எடுத்துக்காட்டு என்று வர்ணித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான சுரேஷ் ரூத்ராய், 'மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, இந்த சம்பவத்திற்கு நவீன் பட்நாயக் பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.

உள்துறை, முதலமைச்சர் நவீன் பட்நாயக் வசம் இருப்பதால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அவர் மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். 

ஒடிசா அமைச்சர்- துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், SUBRAT PAT/BBC

சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவரும் வழக்கறிஞருமான ராம் மோகன் ராவ் ஏ.என்.ஐ. ஊடகத்திடம் பேசுகையில், “நாப் தாஸ் வந்தபோது, கூட்டம் அவரை வரவேற்க சென்றது. சில பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். அப்போது, சத்தம் கேட்டது, கூட்டத்தில் இருந்து போலீஸ் அதிகாரி ஒருவர் ஓடி சென்றார். ஓடி செல்லும்போதும் அவர் துப்பாக்கியால் சுட்டார். அவரைக் கொன்றவர் அவருக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நாங்கள் நினைத்தோம். புல்லட் அவரது மார்பில் இருந்தது” என்றார். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவரான தாஸ் 2009 ஆம் ஆண்டு முதல் ஜார்சுகுடா சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். நாப் கிஷோர் தாஸ் தனது அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அவர் காங்கிரஸில் இருந்து விலகி பிஜேடியில் சேர்ந்தார் மற்றும் முதல் முறையாக கேபினட் அமைச்சராகாவும் ஆனார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: