கோஹினூர் வைரம் பிரிட்டன் அரசர் முடிசூட்டு நிகழ்வில் பயன்படுத்தப்படாது - ஏன் தெரியுமா?

    • எழுதியவர், ஷான் காக்லன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிரீடம் லண்டன் டவரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு முடிசூட்டு விழாவுக்காக அளவு மாற்றப்படுகிறது.

சமீபகாலத்தில் இப்படி கிரீடம் அளவு மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. அரசி இரண்டாம் எலிசபெத்தின் வைரங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன. கமீலா வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசருக்கு அருகில் முடி சூட்டப்படுவார்.

அரசர் அரசி அணியும் கிரீடங்கள்

மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய அணிகலன்களில் உள்ள வைரங்களைக் கொண்டு அரசி கமீலா சூடும் கிரீடம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் III, IV, V என்னும் வைரங்கள் ஆகும்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அணிந்திருப்பார். 1661-இல் அரசர் இரண்டாம் சார்ல்ஸ் அணிந்திருந்த கிரீடம் உள்நாட்டுப் போரால் அழிந்துபோன பின் அவருக்காக உருவாக்கப்பட்ட கிரீடம் இது.

அவருக்குப் பின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இதை அணிந்து வந்தார். ஆனால் அவருக்குப் பின் வரும் அரசர்கள் தங்களுக்குப் பொருந்தும் வகையில் கிரீடங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கோஹினூர் வைரத்தின் சர்ச்சை

உலகிலேயே அதிக விலைமதிக்கத்தக்க வைரக்கற்களில் ஒன்றான கோஹினூர் வைரக்கல் இந்த முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படவில்லை.

அதற்குக் காரணம், இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்னும் சர்ச்சை அரசி எலிஸபெத் முடிசூட்டிய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. இதற்குப் பதிலாகத்தான் கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படுகிறது.

கோஹினூர் வைரம் உலகின் மிகப் பழைமையான வைரம் அல்ல. இருந்தும் அதைச் சுற்றி சர்ச்சைகள் இன்றளவும் சுழன்று வருவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த வைரம் இந்தியாவில் இருந்து நாதர்ஷா என்னும் இரானிய மன்னனால் 1739ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதன் பிறகு பல படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் கண்ட கோஹினூர் வைரம் இறுதியாக 1849இல் பஞ்சாப் இணைப்பின்போது பிரிடிஷ் கவர்னர் ஜெனரலின் கைகளுக்கு வந்தது.

அப்போது இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு, வீழ்த்தப்பட்ட ஓர் இளம் மன்னன் இதைப் பரிசாக அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கோஹினூர் பற்றிய ஒரு புத்தகத்தின் இணை எழுத்தாளரும் பிபிசி செய்தியாளருமான அனிதா ஆனந்த் கூறும்போது, “ஈட்டிமுனையில் இருக்கும்போது வழங்கப்படுவதை எல்லாம் பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறுகிறார்.

1850களில் இளவரசர் ஆல்பர்ட் இந்த வைரத்தை பளபளப்பாக்கி அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆபரணத்தில் பதித்தார். அதிலிருந்து பட்டத்து ஆபரணங்களுள் ஒன்றாக கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட இந்த வைரத்தை தங்களுடையது என்று உரிமை கோரி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: