You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னைக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் - இன்றைய முக்கிய செய்தி
இன்றைய தினம் (25/06/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், "துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், துபையில் இருந்து குளியலறை மற்றும் சுகாதார சாதனங்கள் என்ற பெயரில் கப்பல் மூலம் கன்டெய்னர் ஒன்று சென்னைக்கு அனுப்பப்பட்டதும், ஆனால், உண்மையிலேயே அந்த கன்டெய்னரில் குளியலறை மற்றும் சுகாதார சாதனங்கள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கன்டெய்னரில் ரூ.18.20 கோடி மதிப்புள்ள 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது." என கூறப்பட்டுள்ளது.
அந்த சிகரெட்டுகளில் சட்டப்பூர்வ சுகாதார எச்சரிக்கைகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இதைத்தொடர்ந்து, அந்த கன்டெய்னரை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
"இதுதொடர்பாக, சுங்க சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், பொய்யான தகவல்களை வழங்கி வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும், சென்னையில் உள்ள துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்தின் போது வழங்கப்படும் பராமரிப்பு தொகை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
விவாகரத்தின் போது பராமரிப்பு செலவுகளுக்காக ஒரே ஒருமுறை வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை (one-time settlement - OTS) குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை உள்ளடக்காது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒன்றில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண், திருமணம் சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டதாகக் கூறி உயர் நீதிமன்றம் விவாகரத்தை வழங்க முடியாது என்றும், அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் மட்டுமே அதன் சர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தி விவாகரத்தை வழங்க முடியும் என்றும் வாதிட்டதாக, அச்செய்தி கூறுகிறது.
"அப்பெண்ணின் ஒரு குழந்தை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுட்காலம் முழுதும் அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அப்பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் ரிதுபர்ன் உனி வாதிட்டார். அப்பெண்ணின் முன்னாள் கணவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, மனைவிக்கு ஒரேமுறையாக ரூ. 3 கோடியை வழங்கியுள்ளார் என்று வாதிட்டார்." என அச்செய்தி கூறுகிறது.
அப்போது, "குழந்தைகளின் பராமரிப்பு என்று வரும்போது ஒருமுறை வழங்கப்படும் தொகை அதை உள்ளடக்காது," என நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, "அப்பெண்ணின் முன்னாள் கணவர் தனது மகள்களின் செலவுகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறினார்." என கூறுகிறது அச்செய்தி.
"கட்டக்கலை வல்லுநரான அப்பெண் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போதே தனக்கு எதுவும் தேவையில்லை என்று கூறியதாக சஞ்சய் ஹெக்டே தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்தது. அப்பெண்ணின் முன்னாள் கணவர் பிப்ரவரி 17 ஆம் தேதி அவருக்கு 3 கோடி ரூபாய் கொடுத்ததாக ஹெக்டே கூறினார். மேலும் மார்ச் 17 ஆம் தேதி அவர் மறுமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்" என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு