ஔரங்கசீப் பற்றிய சர்ச்சை, நாக்பூர் வன்முறை குறித்து ஆர்எஸ்எஸ் சொன்னது என்ன?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூரு

மகாராஷ்டிராவில் முகலாய பேரரசர் ஔரங்கசீப் பற்றிய சர்ச்சை மற்றும் நாக்பூரில் உள்ள அவரது கல்லறை தொடர்பாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், ஔரங்கசீப் 'இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானவர் அல்ல' என்று ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஔரங்கசீப் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் ஆம்பேகர், "எந்த வகையான வன்முறையும் இந்த சமூகத்திற்கு நல்லதல்ல. இன்றைய காலகட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் இல்லை என்று நான் நினைக்கிறேன்", என்றார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-ன் அகில இந்திய பிரதிநிதிகள் சபையின் மூன்று நாள் மாநாட்டிற்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ''நாக்பூரில் நடந்த வன்முறைக்கான காரணங்களை காவல்துறை விசாரித்து வருகிறது'' என சுனில் ஆம்பேகர் கூறினார்.

மகாராஷ்டிராவின் சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட சில இந்து மத அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பரவிய வதந்தியால் நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை மாநில சட்டமன்றத்தில் பேசியபோது, சமீபத்தில் வெளியான 'சாவா' திரைப்படம்தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறினார்.

சிவாஜி மன்னரின் மகனான சம்பாஜிக்கு ஔரங்கசீப் செய்த அட்டூழியங்களை இந்தப் படம் காட்டுவதாகவும், இது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியதாகவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.

இருப்பினும், 'சாவா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஔரங்கசீப் மீது மக்கள் கோபமாக இருப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சுனில் ஆம்பேகர் பதிலளிக்கவில்லை.

ஆர்எஸ்எஸ்ஸின் நிலைபாடு என்ன?

வரும் வாரங்களில் பிரதமர் நரேந்திர மோதி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தருவது குறித்தும் சுனில் ஆம்பேகர் கருத்து தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பிரதமர் வருவது அசாதாரணமான ஒரு விஷயமல்ல, வாஜ்பாய்கூட பிரதமராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளார் என்று அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற கருத்தினை சுனில் ஆம்பேகர் நிராகரித்தார். மாநாட்டின் இறுதியில் அகில இந்திய பிரதிநிதிகள் சபை இது குறித்த தரவுகளை வெளியிடும் என அவர் கூறினார்

"அந்த தரவுகள் இதற்கு பதில் சொல்லும். ஆர்எஸ்எஸ்-ல் அதிக அளவில் மக்கள் இன்னும் சேர்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் சேர்கிறார்கள். எனவே, சங்கத்தின் கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற உங்கள் கேள்வி சரியல்ல", என்று அவர் கூறினார்.

"கடந்த நான்கு ஆண்டுகளில், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் எங்கள் சங்கத்தின் கிளைகளை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இப்போது, முன்பு நடத்தப்படாத இடங்களிலும் கூட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன", என்று சுனில் ஆம்பேகர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு அகில இந்திய பிரதிநிதிகள் சபை ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டுகால மதிப்பாய்வை முன்வைக்க இருக்கிறது. இத்துடன் அமைப்பின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் இந்த சபை தெரிவிக்க இருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா 2025 விஜயதசமியிலிருந்து 2026 வரை கொண்டாடப்படும் என்று சுனில் ஆம்பேகர் கூறினார்.

அகில இந்திய பிரதிநிதிகள் சபையின் மாநாட்டின் இறுதி நாளில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

"வங்கதேசத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்த மாநாட்டில் ஒரு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்", என்று சுனில் ஆம்பேகர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பஞ்ச பரிவர்த்தன் திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று சுனில் ஆம்பேகர் கூறினார். அவர் கூறியதன்படி பஞ்ச பரிவர்த்தன் திட்டம், குடும்பத்தில் விழிப்புணர்வு, சமூக ஒற்றுமை, கடமை குறித்த உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுதேசி வாழ்க்கை முறை ஊக்குவிப்பு.

ஔரங்கசீப் பற்றிய சர்ச்சை என்ன?

மகாராஷ்டிராவின் சம்பாஜிநகர் மாவட்டத்திலிருந்து (முன்னர் ஔரங்காபாத் மாவட்டம்) 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்தாபாத்தில் உள்ள 17 ஆம் நூற்றாண்டின் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பாக திங்கள்கிழமை நாக்பூரில் வன்முறை நடந்தது.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் 1707 ஆம் ஆண்டு அஹில்யாநகரில் (அப்போது அகமதுநகர்) இறந்தார். அதன் பிறகு அவரது உடல் குல்தாபாத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சிறிது காலமாக, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மற்றும் சில கூட்டணி அமைப்புகள் இந்த கல்லறையை இங்கிருந்து அகற்றக் கோரி வருகின்றன.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மக்களை சித்திரவதை செய்து, மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியை சித்திரவதை செய்து கொன்றதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, அத்தகைய ஆட்சியாளரின் கல்லறை இங்கே இருக்கக்கூடாது என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன.

திங்கள்கிழமை அன்று, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் இந்த கல்லறையை அங்கிருந்து அகற்றக்கோரி மராத்வாடாவில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போதுதான், ஔரங்கசீப்பின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த புனித துணி எரிக்கப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது.

இதன் பின்னர், செவ்வாய்க்கிழமை, நாக்பூரின் மஹால் பகுதியில் சிலர் கடைகளை சேதப்படுத்தத் தொடங்கினர் மற்றும் பல வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

வன்முறை எப்படி வெடித்தது?

காவல்துறையின் நடவடிக்கை குறித்து, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டமன்றத்தில் கூறும்போது "இந்த சம்பவத்தில் 33 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூன்று காவல்துறையினர் முக்கிய பதவியில் இருப்பவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டார். மொத்தம் 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் மூன்று பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர், மேலும் இருவர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஐசியுவில் உள்ளார்"

"சிலர் கற்களை வீசி தாக்கியதை பார்க்க முடிந்தது, ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, சில வீடுகள் மற்றும் கடைகள் குறிவைக்கப்பட்டன. எனவே, இதுபோன்ற நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியிருந்தார்.

காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர சிங்கால் கூறுகையில், "இதுவரை ஐந்து முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். இது தவிர, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.