You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? துப்பாக்கியால் சுட்ட நபர் பிடிபட்டார்
- எழுதியவர், மெடலின் ஹால்பெர்ட் மற்றும் லாரன்ஸ் பீட்டர்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பி அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டிரம்ப் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் இருந்ததாக எஃப்.பி.ஐ. கூறுகிறது.
ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் அந்த இடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
நேரில் கண்ட சாட்சி கூறியது என்ன?
ரகசிய சேவை ஏஜெண்டுகள் தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், சந்தேகத்திற்குரிய அந்த நபர் புதரை விட்டு ஓடி, கருப்பு நிற நிசான் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக அதனை நேரில் பார்த்த சாட்சி கூறியுள்ளார். அத்துடன், கார் மற்றும் அதன் நம்பர் பிளேட்டை அவர் புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அந்த கார் மார்ட்டின் கவுண்டியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
"மார்ட்டின் கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் அந்த கார் இருந்த இடத்தை கண்டுபிடித்து அந்த நபரை பிடித்தனர்" என்று பாம் பீச் கவுண்டி ஷெரீஃப் ரிக் பிராட்ஷா தெரிவித்தார்.
"அதன் பிறகு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றோம். புதரில் இருந்து ஓடி, காருக்குள் ஏறிய நபர் அவர்தான் என்று அந்த சாட்சி உறுதிப்படுத்தினார்" என்று ரிக் பிராட்ஷா கூறினார்.
டிரம்ப் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
டிரம்ப் தான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக இமெயில் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
"எதுவும் என் வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.
பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் டிரம்பை ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றதற்கு 2 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு தாக்குதல் முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
டிரம்பை தாக்க முயற்சி நடந்தது பற்றி விசாரித்து வருவதாக ரகசிய சேவைப் பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
"கோல்ப் மைதானத்தில் இருந்த ரகசிய சேவைப் பிரிவு ஏஜெண்ட் சிறப்பான பணி செய்துள்ளார்" என்று ஷெரீஃப் பிராட்ஷா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-அ-லாகோ இல்லத்தைச் சுற்றிலும் உள்ள சாலை மற்றும் நீர் நிலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாம் பீச்சில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிடிபட்ட நபர் யார்?
பிடிபட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத், 58 வயதான அவர் ஹவாயைச் சேர்ந்தவர் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் கணக்குடன் அந்த பெயர் பொருந்திப் போவதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது.
கமலா ஹாரிஸ் கருத்து
டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரிடமும் விவரிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
"டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து அவர்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்த விவரங்கள் உடனுக்குடன் குழுவினரால் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி பற்றி தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டிரம்ப் காயமின்றி தப்பியது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்லர் நகரில் என்ன நடந்தது?
கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த கொலை முயற்சியின் போது டிரம்ப் காயமடைந்தார். அருகில் இருந்த கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தபடி தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற நபர் ஏஆர்15 துப்பாக்கியைப் பயன்படுத்தி டிரம்பை சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதான குரூக்சும் ரகசிய சேவை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிரம்பை 200 மீட்டர் அளவுக்கு நெருங்கி அவரால் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றது எப்படி என்று ரகசிய சேவைப் பிரிவினர் மீது அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. அடுத்த இரண்டே வாரங்களில் ரகசிய சேவைப் பிரிவு இயக்குநர் கிம்பர்லி பதவியை ராஜினாமா செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)