You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயது இளைஞரா? என்ன காரணம்? அமெரிக்க புலனாய்வு அமைப்பு புதிய தகவல்
- எழுதியவர், டாம் மெக்ஆர்தர்
- பதவி, பிபிசி செய்தி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ என்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டிஎன்ஏவைப் பயன்படுத்தி அடையாளத்தை கண்டுபிடித்த அதிகாரிகள்
எஃப்.பி.ஐ. அமைப்பின் அறிக்கையில், முன்னாள் அதிபர் மீதான படுகொலை முயற்சியில் `சம்பந்தப்பட்ட’ நபரின் பெயர் க்ரூக்ஸ் என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
அந்த நபர் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை என்பதால் புலனாய்வு அதிகாரிகள் அவரை அடையாளம் காண டி.என்.ஏ.வைப் பயன்படுத்தினர் என்றும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவ்யூ செய்தித்தாள் கூற்றின்படி, அவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி, டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70கிமீ (43 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. க்ரூக்ஸ் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகத் தெரிகிறது.
அமெரிக்க ஊடகங்களின்படி, க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை மாநில வாக்காளர் பதிவுகள் காட்டுகின்றன.
அவர் 2021 இல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ActBlue’ அமைப்புக்கு $15 நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அவரின் நோக்கம் என்ன?
க்ரூக்ஸின் நோக்கம் குறித்தும், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"அவரின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை" என்று சனிக்கிழமை இரவு ஒரு மாநாட்டில் எஃப்.பி.ஐ பிட்ஸ்பர்க் சிறப்பு முகவரான கெவின் ரோஜெக் கூறினார்.
என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணையை முழுமையாக முடிக்க பல மாதங்கள் வரை ஆகலாம், மேலும் க்ரூக்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய புலனாய்வு அதிகாரிகள் அயராது உழைப்பார்கள் என்றும் ரோஜெக் கூறினார்.
சிஎன்என் ஊடகத்திடம் பேசிய க்ரூக்ஸின் தந்தை, மேத்யூ க்ரூக்ஸ், "என்ன நடக்கிறது" என்பதை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதாக அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். தனது மகனைப் பற்றி பேசுவதற்கு முன் "நான் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேசும் வரை காத்திருப்பேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
க்ரூக்ஸ் வசித்த வீட்டிற்கு செல்லும் சாலையை போலீஸார் சீல் வைத்துவிட்டதடாக சிபிஎஸ் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் தங்களை வெளியேற்றியதாக பக்கத்து வீட்டுக்காரர் சிபிஎஸ்ஸிடம் கூறியுள்ளார்.
க்ரூக்ஸின் வீட்டைச் சுற்றிலும் விசாரணை நடைபெற்று வருவதாக பெத்தேல் பார்க் போலீசார் தெரிவித்தனர்.
க்ரூக்ஸ் வேறு யாரையாவது தாக்கினாரா?
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரும் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த ஆண்கள் என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் "என் மீது சுடப்பட்ட தோட்டா என் வலது காதின் மேல் பகுதியை துளைத்தது" என்று பதிவிட்டிந்தார்.
“ஏதோ தவறு நடப்பதாக நான் உடனடியாக உணர்ந்தேன். அப்போது என் காதருகில் உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் ரத்தம் வடிவது தெளிவாகத் தெரிந்தது.
குடியரசுக் கட்சியின் தேசியக் குழு (RNC) இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, டிரம்ப் நலமாக இருக்கிறார், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்தது.
டிரம்பிடம் இருந்து எவ்வளவு தூரத்தில் க்ரூக்ஸ் நின்றிருந்தார்?
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு, ஒரு கட்டிடத்தின் கூரை (க்ரூக்ஸ் என்று கூறப்படும் நபர்) மீது ஒரு நபர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
பிபிசி வெரிஃபை, சம்பவம் நடந்த இடத்தின் காட்சிகளை ஆய்வு செய்து, டிரம்புக்கு 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி (flat warehouse) கட்டடத்தின் மேல் இருந்து துப்பாக்கி வைத்திருந்த நபர் தூப்பாக்கிச்சூடு நடத்தியதை உறுதி செய்தது.
`TMZ’ வெளியிட்ட வீடியோ காட்சிகள், துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தைக் காட்டுகின்றன.
டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர் "ஏஆர்-ஸ்டைல் துப்பாக்கி" (AR-style rifle) பயன்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான `சிபிஎஸ் நியூஸ்’ ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் எந்த வகையான துப்பாக்கியைப் பயன்படுத்தினார், எத்தனை முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதை பற்றி உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று எஃப்.பி.ஐ. கூறுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திய அதிகாரிகள் கட்டடத்தின் மேற்கூரையில் ஒரு சடலத்தை நோக்கி செல்வதை வீடியோ காட்டுகிறது.
எஃப்.பி.ஐ. கூறியது என்ன?
தேர்தல் பிரசார கூட்டத்தின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. (FBI) தெரிவித்துள்ளது.
பென்சில்வேனியாவில் பட்லர் என்ற இடத்தில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இறந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
20 வயது இளைஞன், ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், முன்னாள் அதிபரின் படுகொலை முயற்சியில் க்ரூக்ஸ் "சம்பந்தப்பட்டவர்" என்றும் அதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)