You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்புடன் ஒன்றாக பயணம் - முஸ்லிம் எதிர்ப்பு, இனவெறி கருத்துகளால் பிரபலமான இவர் யார்?
- எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் & மெர்லின் தாமஸ்
- பதவி, பிபிசி நியூஸ் & பிபிசி வெரிஃபை
டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பிரசார நிகழ்வுகளில் அவருடன் லாரா லூமர் என்னும் வலதுசாரி சதி கோட்பாட்டாளர் பயணிப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடியரசு கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைக்குரிய லாரா லூமர், டிரம்ப் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
லாரா லூமர் தனது முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளுக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 9/11 என்னும் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட "உள் வேலை" என்று கூறியவர். இதுபோன்ற சதி கோட்பாடுகளை பரப்பி பிரபலமானவர்.
கடந்த புதன்கிழமைன்று (செப் 11) நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார். அவருடன் லாரா லூமரும் கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. சில அமெரிக்க ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியது.
செவ்வாய்க்கிழமையன்று, அதிபர் தேர்தல் விவாதத்திற்காக சென்ற டிரம்புடன், 31 வயதான அவரும் பிலடெல்பியா சென்றார்.
ஹைத்தியில் (Caribbean country) இருந்து சட்டவிரோதமாக ஓஹாயோ என்னும் சிறிய நகரத்தில் புலம் பெயர்ந்தவர்களை குறிப்பிட்டு அதிபர் தேர்தல் விவாதத்தில் டிரம்ப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை கொன்று அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்ற ஆதாரமற்ற கருத்தை டிரம்ப் கூறியது விவாதத்தின் மறக்கமுடியாத தருணமாக இருந்தது.
"புலம்பெயர்ந்த நபர்கள் அங்கு வசிக்கும் மக்களின் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்" என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் கூறியது போல் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என ஓஹாயோ நகர அதிகாரிகள் பிபிசி வெரிஃபையிடம் கூறினர். "அதுகுறித்து நம்பகமான அறிக்கைகள் எதுவும் இல்லை" என்று அவர்கள் கூறினர்.
டிரம்ப், தான் கூறும் கருத்துகள் தொலைக்காட்சியில் கேட்ட கூற்றுகளை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
அதேசமயம் இந்த விவாதத்திற்கு ஒரு நாள் முன்னதாக லாரா லூமர் இந்த கோட்பாட்டை தன் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டார். சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்தும் லாரா, தன் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து திங்கட்கிழமை பதிவிட்டார். அவரை சுமார் 12 லட்சம் பேர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.
டிரம்ப் ஆதரவாளர்கள் கருத்து
டிரம்பை லாரா லூமர் எப்படி அணுகுகிறார் என்பது தெளிவாக இல்லை. டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸும் ஓஹாயோ தொடர்பான ஆதாரமற்ற கோட்பாட்டைப் பரப்பினார்.
லாரா லூமரின் பதவியும் பிலடெல்பியாவில் அவரது இருப்பும் தான் டிரம்ப் கூறும் ஆதாரமற்ற கூற்றுக்கு காரணம் என்று சில குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னாள் அதிபர் டிரம்ப் பிரசாரக் குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அமெரிக்க செய்தி நிறுவனமான செமாஃபோரிடம், லாரா லூமர் டிரம்புடன் நெருக்கமாக இருப்பதைப் பற்றி அவர்கள் '100%' கவலைப்படுவதாக கூறினார்.”
"டிரம்ப் பிரசாரக் குழு அவர் மீது ஏதேனும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அது வேலை செய்வதாக எனக்கு தோன்றவில்லை" என்று அந்த நபர் கூறினார்.
பல மூத்த குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் லாரா லூமரை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர். டிரம்ப் அவரை தனது நெருக்கமான வட்டத்திற்குள் வைத்திருப்பதைக் குறிப்பிட்டு அவர்கள் எச்சரித்தனர்.
"லாரா லூமர் ஒரு சதி கோட்பாட்டாளர். அவர் குடியரசுக் கட்சியினரைப் பிரிக்கும் நோக்கில் அருவருப்பான கருத்துகளை தொடர்ந்து பரப்புவார்" என்று வட கரோலினா செனட்டர் தாம் டில்லிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"DNC [ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு] உறுப்பினர்களால் கூட டிரம்பை இந்த அளவுக்கு வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சியால் கூட இந்த அளவுக்கு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை குறைக்கும் வேலையைச் செய்ய முடியாது" என்று டில்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 13 அன்று கலிபோர்னியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் பற்றி அவர் கூறிய சமீபத்திய கருத்துகள் அல்லது 9/11 தாக்குதல் குறித்த அவரது கருத்துகள் பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார்.
“நான் லாராவைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை. லாரா தான் விரும்புவதைச் சொல்லலாம். அவர் ஒரு சுதந்திர மனப்பான்மையில் இருப்பவர்" என்று அவர் கூறினார்.
டிரம்பிற்கு ஆதரவாக நிற்கும் லாரா
லாராவின் கருத்துகளை அறிய பிபிசி அவரை அணுகிய போது அவர் பதிலளிக்கவில்லை.
ஆனால் எக்ஸ் பக்கத்தில் " டிரம்ப் இந்த தேசத்தின் கடைசி நம்பிக்கை" என்று குறிப்பிட்டு டிரம்பிற்கு உதவுவதற்காக "சுதந்திரமாக" செயல்படுவதாகக் கூறினார்.
"என் கருத்துகளை கேட்க என்னை அணுகும் பல நிருபர்களுக்கு, பதில் அளிக்க விரும்பவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எனது கதைகள் மற்றும் ஆராய்ச்சிகளில் நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன், உங்கள் சதித்திட்டங்களைக் கருத்தில் கொள்ள நேரம் ஒதுக்க முடியாது." என்று அவர் கூறியுள்ளார்.
அரிசோனாவில் 1993 ஆம் ஆண்டு பிறந்த லாரா, தனித்து செயல்படும் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் ஆவார். இவர் ப்ராஜெக்ட் வெரிடோஸ் மற்றும் அலெக்ஸ் ஜோன்ஸின் இன்ஃபோவார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
2020-ஆம் ஆண்டில் அவர் புளோரிடாவில் உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்பின் ஆதரவுடன் போட்டியிட்டார். அவரை ஜனநாயகக் கட்சியின் லோயிஸ் பிராங்கல் தோற்கடித்தார்.
லாராவின் பெயரை மேடையில் உச்சரித்த டிரம்ப்
இப்போது, அவர் டிரம்புக்கு ஆதரவாக குரல் கொடுப்பவராக இருக்கிறார்.
"கமலா ஹாரிஸ் கறுப்பின பெண் இல்லை, டிரம்பின் கொலைக்கு அழைப்பு விடுக்கும் ரகசிய செய்திகளை கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரஸின் மகன் அனுப்பினார்" என்பன போன்ற பல சதி கோட்பாடுகளை அவர் ஊக்குவித்துள்ளார்.
இந்தப் பதிவுகளால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல தளங்களில் அவர் தடை செய்யப்பட்டார். முஸ்லிம் ஓட்டுநர்களைப் பற்றி புண்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதற்காக Uber மற்றும் Lyft நிறுவனங்கள் கூட அவருக்கு தடை விதித்தன. அவர் தன்னை ஒரு "பெருமைமிக்க இஸ்லாமோஃபோப் (முஸ்லிம் எதிர்ப்பு மனநிலை)" என்று விவரித்து கொண்டார்.
லாரா லூமர் அடிக்கடி டிரம்பிற்கு ஆதரவான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். டிரம்பின் புளோரிடா இல்லமான மார்-ஏ-லாகோ முன்பு அவர் தென்படுகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிரம்புடன் லாரா அவரது விமானத்தில் பயணம் செய்து அயோவா சென்றார். அங்கு ஒரு நிகழ்வில் மேடையில் லாராவை பற்றி டிரம்ப் பேசினார். ‘’அவரின் ஆதரவை நீங்கள் விரும்புகிறீர்கள் அல்லவா” என்று உரக்க சொன்னார்.
லாராவின் பல வீடியோக்களை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
பின்வாங்கிய டிரம்ப்
நியூயார்க் டைம்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தி ஒன்றில், "டிரம்ப் தனது பிரசாரத்திற்கு லாராவை பயன்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டார், ஆனால் மூத்த ஆலோசகர்கள் லாரா தேர்தலில் வெல்லும் வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளுவார் என்று கவலைப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது முடிவை கைவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளது.
"டிரம்புக்காக பணிபுரியும் அனைவரும் லாராவை ஒரு பிரச்னையாகவே பார்க்கின்றனர்” என்று ஒரு டிரம்ப் உதவியாளர் ஜனவரி மாதம் என்பிசி நியூஸில் கூறினார்.
மற்றொரு டிரம்ப் ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன், கமலா ஹாரிஸின் இனம் பற்றிய லாராவின் கருத்துகளால் இந்த வாரம் சர்ச்சை எழுந்ததை நினைவூட்டினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை மாளிகையில் குழம்பு வாசனை வீசும் என்று லாரா குறிப்பிட்டிருந்தார்.
லாரா லூமரின் கருத்துகள் "பயங்கரமானவை, மிகவும் இனவெறி கொண்டவை" என்று கிரீன் கூறுகிறார்.
2001, செப்டம்பர் 11-ஆம் தேதி தாக்குதலை நினைவுகூரும் வகையில் நியூயார்க் மற்றும் பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்வுகளில் லாரா லூமர் டிரம்புடன் காணப்பட்டார்.
அசோசியேட்டட் பிரஸ் இதுகுறித்து லாராவிடம் கேட்டதற்கு, டிரம்ப் பிரசாரத்திற்காக வேலை செய்யவில்லை என்றும் "அங்கே விருந்தினராக அழைக்கப்பட்டேன்" என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)