'இந்த ஆண்டில் ஆசியாவின் சக்திவாய்ந்த சூறாவளி'- வியட்நாமை புரட்டிப்போட்ட யாகி; பேரழிவின் தாக்கத்தைக் காட்டும் படங்கள்

    • எழுதியவர், கெல்லி என்ஜி
    • பதவி, பிபிசி செய்திகள்

வியட்நாமில் யாகி சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.

அரசாங்க மதிப்பீடுகளின்படி, அந்நாட்டின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று 20 ஆண்டுகளில் முதன்முறையாக அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதனால் வியட்நாம் தலைநகர் ஹனோய் தெருக்கள் வெள்ளக் காடாகியுள்ளன.

புதன்கிழமை (செப்டம்பர் 11), வியட்நாமின் சிவப்பு நதி பெருக்கெடுத்ததில் ஹனோயின் சில பகுதிகளில் வெள்ள நீர் ஒரு மீட்டர் உயரம் வரை எட்டியது. இதனால் மக்கள் வெளியில் செல்லப் படகுகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹனோயின் 30 நிர்வாக மாவட்டங்களில், 10 மாவட்டங்கள் ‘வெள்ள எச்சரிக்கையில்’ இருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு வியட்நாம் முழுவதும் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்தான் இறப்புகளுக்கு முக்கியக் காரணம் என்று வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"இது நான் பார்த்த மிக மோசமான வெள்ளம்," என்று ஹனோய் நகரவாசியான டிரான் லு குயென் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். "நேற்று காலை நகரம் வறண்டிருந்தது. இப்போது தெரு முழுவதும் வெள்ளம். நேற்று இரவு எங்களால் தூங்க முடியவில்லை," என்றார் அவர்.

யாகி சூறாவளி, ஆரம்பத்தில் ‘சூப்பர் டைஃபூன்’ என வகைப்படுத்தப்பட்டது. இது மிகச் சக்திவாய்ந்த வகை 5 சூறாவளிக்குச் சமமானது. ஆனால், பின்னர் அது வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தரமிறக்கப்பட்டது. இந்தச் சூறாவளி, சனிக்கிழமை (செப்டம்பர் 7) கரையைக் கடந்ததில் இருந்து, வியட்நாமில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது.

இது இந்த ஆண்டில் ஆசியாவின் மிகச் சக்திவாய்ந்த சூறாவளி என்று விவரிக்கப்பட்டுள்ளது.

"எனது வீடு இப்போது ஆற்றின் ஒரு பகுதியாகி விட்டது," என்று சிவப்பு நதியின் கரையில் வசிக்கும் குயென் வான் ஹுங், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

வியட்நாமின் வடக்கு லாவோ காய் மாகாணத்தில் உள்ள ஒரு முழு கிராமமும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் குறைந்தது 25 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்க நூற்றுக்கணக்கான மீட்பு படையினர் அக்கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வடமேற்கு யென் பாய் மாகாணத்தில் உள்ள ஒரு நீர்மின் நிலையத்தின் மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அணையைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் அது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான துணை அமைச்சர் குயென் ஹொவாங்க் ஹியெப் புதன்கிழமை நீர்மின் நிலையம் ‘பாதுகாப்பாக’ இருப்பதாகக் கூறினார். ஆனால் அதில் நீர்மட்டம் ‘அனுமதிக்கப்பட்ட’ அளவுக்குக் குறைய இரண்டு நாட்கள் ஆகலாம் என்பதால், அப்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த நான்கு நாட்களாக வியட்நாமின் வடக்குப் பகுதியில் யாகி சூறாவளி அழிவை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (செப்டம்பர் 10) இந்தச் சூறாவளியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து, அதன் மீதிருந்த பத்து கார்கள் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்கள், சிவப்பு நதியில் மூழ்கின.

இந்தச் சூறாவளியில் கட்டடங்களின் கூரைகள் கிழித்தெறியப்பட்டன, மரங்களை வேரோடு பிடுங்கியெறியப்பட்டன. வடக்கு வியட்நாமில் கட்டுமானங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

வியட்நாமைத் தாக்கும் முன், இந்தச் சூறாவளி, தென் சீனா மற்றும் பிலிப்பைன்ஸைத் தாக்கியது. இதில் 24 பேர் பலியாகினர்.

புவி வெப்பமடைவதால் சூறாவளிகள் பலத்த காற்றையும், தீவிர மழையையும் கொண்டு வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கூடுதல் தகவல் பிபிசி வியட்நாம் சேவை

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)