மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்

பட மூலாதாரம், Detroit Public Library
- எழுதியவர், லூசி ஷெரிஃப்
இரண்டு ஆண்கள் காட்டெருமை மண்டை ஓடுகள் நிறைந்திருக்கும் குவியல் மீது நிற்கும் புகைப்படம் அமெரிக்காவின் காலனித்துவ காலத்தின் போது நடைபெற்ற வேட்டையாடலின் அடையாளமாக அறியப்படுகிறது. இந்த புகைப்படத்திற்கு பின்னால் கவலையை ஏற்படுத்தும் ஒரு வரலாறு இருக்கிறது, சமகாலத்திற்கான ஒரு செய்தியும் உள்ளது.
கறுப்பு சூட்கள், தொப்பிகள் அணிந்த இரண்டு ஆண்கள் காட்டெருமை மண்டை ஓட்டு குவியல்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகள் நேராக குவிக்கப்பட்டு, வானத்தை நோக்கி உயர்ந்துள்ளன.
19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த புகைப்படம் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஏற்படும் அபிப்ராயத்தைத் தாண்டியும், அதன் பின்னால் ஓர் இருண்ட ரகசியம் இருக்கிறது. இந்த மண்டை ஓடுகள் அமெரிக்காவில் நடந்த அளவு கடந்த வேட்டையை மட்டும் உணர்த்தவில்லை. அதன் அருகில் நின்று கொண்டிருக்கும் அந்த இரண்டு ஆண்களும் வேட்டைக்காரர்களும் இல்லை.
அமெரிக்காவில் இருந்த காட்டெருமைகளை ஒழிப்பதற்கும், பூர்வீக அமெரிக்கர்களின் முக்கிய வளங்களை அவர்களிடம் இருந்து பறிப்பதற்கும், அந்த நாட்டிற்கு புதிதாக வந்த வெள்ளையின குடியேற்றக்காரர்களால் கட்டுப்படுத்தப்படும் சிறிய பகுதிகளுக்கு பூர்வீக அமெரிக்கர்களை வரவழைப்பதற்கும், நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல்பாடுகளின் சான்றுகள் தான் இந்த மண்டை ஓடுகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்தப் படம் காலனித்துவ காலத்தில் நடத்தப்பட்ட அழிவுகளின் கொண்டாட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு," என்று கூறுகிறார் தாஷா ஹப்பார்ட். அவர், கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் நேட்டிவ் ஸ்டடீஸ் பிரிவில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
- வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு
- தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை
- அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?
- கேட்வே ஆஃப் இந்தியா: பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம் மற்றும் முடிவின் அடையாளமாக நிற்கும் நினைவுச் சின்னம்

ஹப்பார்ட், காட்டெருமையின் அழிவை காலனித்துவ விரிவாக்கத்தின் "உத்தி" என்று கூறுகிறார். இந்த விலங்குகளின் அழிப்பை, குடியேற்ற விரிவாக்கத்திற்குத் தேவையான வனப்பகுதியை தங்களின் வசப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
பெருமளவில் காட்டெருமைகள் கொல்லப்பட்டது, வாழ்வாதாரத்திற்காக அந்த விலங்குகளை நம்பியிருந்த பழங்குடியினருக்கு பெரிய அடியாக அமைந்தது. அதற்கு பிறகு, காட்டெருமைகளை சார்ந்து இருக்காத நாடுகளைக் காட்டிலும், காட்டெருமைகளை நம்பியிருந்த நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் மோசமான பாதிப்புகளை சந்தித்தன.
உதாரணமாக, மற்ற நாடுகளை விட, இந்த நாடுகளில் அதிகளவில் குழந்தைகள் இறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது ஒரு ஒப்பீட்டு ஆய்வு. அந்த நாடுகள், காட்டெருமைகளின் இழப்பால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது. அதன் தாக்கம் இன்றைய நாள் வரை நீடிக்கிறது என்று அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தை அழித்த காட்டெருமைகள் வேட்டை
அமெரிக்காவின் பூர்வ குடிகள் பல நூற்றாண்டுகளாக காட்டெருமைகளை வேட்டையாடி வந்தனர். காட்டெருமைகளை சார்ந்த நாடுகளுக்கு, நாடோடி கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது காட்டெருமைகள். மேலும், அவை அந்த மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரத்தை வழங்கின. உணவுக்குத் தேவையான இறைச்சி, தங்குமிடம் மற்றும் ஆடைகளுக்குத் தேவையான தோல், ஆயுதங்களாக எலும்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டது. (பேச்சுவழக்கு மற்றும் வரலாற்று ஆதாரங்களில், காட்டெருமைகள், 'எருமை' என்றே குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் ஆரம்பகால குடியேற்றக்காரர்கள் அவற்றை 'எருமை' என்றே அழைத்தனர். ஆனால், அவை இரண்டும் வெவ்வேறானவை.)
வட அமெரிக்கா முழுவதும் பழங்குடி மக்கள் காட்டெருமையை நம்பியிருந்தனர் என்கிறார் ஹப்பார்ட். "எங்களை பலவீனப்படுத்தி, கட்டுப்படுத்தவும், எங்களின் பூர்வீக இடங்களில் இருந்து எங்களை வெளியேற்றவும், இந்த விலங்குகளின் அழிப்பு நடைபெற்றது. இந்த விலங்குகள் அழிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பட்டினி எங்களுக்கு எதிரான ஆயுதமாக்கப்பட்டது," என்றார்.
காட்டெருமைகள் அதிகளவில் அப்போது பயன்பட்ட போதிலும், பூர்வகுடி அமெரிக்கர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே காட்டெருமைகளை வேட்டையாடினார்கள். இது 1800-களின் முற்பகுதியில் இருந்த 30 முதல் 60 மில்லியன் (3-6 கோடி) காட்டெருமைகளின் எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது.
கடந்த 1889-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று, அமெரிக்காவில் 456 காட்டெருமைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவற்றில் 256 காட்டெருமைகள் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா மற்றும் சில சரணாலயங்களில் முகாம்களில் வைத்து பாதுகாக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
வணிக பொருளாக மாறிய காட்டெருமையின் உடல் பாகங்கள்
காட்டெருமைகள் பெருமளவுக்குக் கொல்லப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தன என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதிக அளவில் காட்டெருமைகள் வாழ்ந்த பகுதிகள் வழியாக மூன்று ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.
இது காட்டெருமையின் தோல் மற்றும் இறைச்சிக்கான புதிய தேவையை ஏற்படுத்தியது. நவீன துப்பாக்கிகள் காட்டெருமைகளைக் கொல்வதை எளிமையாக்கின. மேலும் வேட்டையாடுவதைத் தடுக்கக்கூடிய போதுமான பாதுகாப்பு அம்சங்கள் அன்று இல்லை.
ஆனால், காட்டெருமையின் தோல் மற்றும் இறைச்சிக்காக அதிகரித்த தேவையைக் காட்டிலும், விலங்குகளின் வீழ்ச்சிக்கு மிகவும் மோசமான காரணம் இருந்தது. குடியேறிகளுக்கு தேவையான காட்டெருமை இறைச்சி மற்றும் தோல் கூட இறுதியில் காலனித்துவம் மற்றும் வெற்றியுடன் பின்னிப்பிணைந்துவிட்டது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
"நில உடைமை, மனிதர்களை அடிமைகளாக வைத்திருத்தல், முடிவற்ற வளர்ச்சி மற்றும் லாபம் காண்பதற்கான உந்துதல் மற்றும் இயற்கை வளங்களை வணிகமயமாக்கல் போன்றவை காட்டெருமைகளை பெருமளவில் வேட்டையாட வழிவகை செய்தது. இந்த காரணங்களே ஐந்து நூற்றாண்டுகளாக பூர்வகுடி மக்களின் தேசம் மற்றும் மனிதாபிமானத்தின் மீதான அரசியல் ரீதியான தாக்குதலையும் நேரடி தாக்குதலையும் தீவிரப்படுத்தியது," என்று கூறுகிறார் பெத்தனி ஹூகஸ்.
ஓக்லஹோமாவின் சோக்டாவ் நேஷன் உறுப்பினரான அவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பூர்வீக அமெரிக்க ஆய்வுகள் பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த 1869ம் ஆண்டில் கண்டம் தாண்டிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்கள் நிறைவடைந்தபோது, அது வன விலங்குகளின் அழிவை துரிதப்படுத்தியது . 1871-ஆம் ஆண்டில், பென்சில்வேனியாவில் செயல்பட்டு வந்த ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை, காட்டெருமைத் தோலை வணிக ரீதியில் லாபம் தரும் வகையிலான 'லெதராக' மாற்றும் முறையை கண்டறிந்தது. தோலுக்காக வேட்டையாடிய நபர்கள், மத்திய சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த காட்டெருமை மந்தைகளை "அதிர்ச்சியளிக்கக் கூடிய வேகத்தில்" அழித்தனர் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
பிரபலமான இந்த மண்டை ஓட்டு புகைப்படம் மிச்சிகன் கார்பன் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தில் எடுக்கப்பட்டது. இது எலும்புகளை பதப்படுத்தும் ஆலையாகும். அங்கு காட்டெருமையின் எலும்புகள் கரியாக மாற்றப்பட்டது. அந்த கரி பிறகு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்பட்டன. எலும்புகள் பசையாகவும் உரமாகவும் பயன்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Detroit Public Library
"இந்தப் புகைப்படம் அமெரிக்க மேற்கத்திய விரிவாக்கத்தால் உருவான குப்பைகளைக் கொண்டும், இனரீதியான தர்க்கங்களால் பூர்வீக அமெரிக்கர்கள் மத்தியில் தோன்றிய தாழ்வு மனப்பான்மையை சேர்த்தும் உருவக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான வணிகத்தைக் குறிக்கிறது," என்கிறார் பெத்தனி. "காலனித்துவமும் முதலாளித்துவமும் ஒன்றாகப் பயணிக்கின்றன" என்கிறார் அவர்.
லாப நோக்கிலும், இது போன்ற பொருளாதார வெற்றிகளை ஊக்குவிக்கவும் இந்த நிறுவனம் காட்டெருமைகளின் எலும்புகளை பதப்படுத்தியது. இந்த எலும்புகள், சில நேரங்களில் அமெரிக்காவில் குடியேறியவர்கள் உருவாக்கிய வன்முறையான விரிவாக்க உத்திகள் மூலம் கிடைத்த கூடுதல் பலனாகும். இது பூர்வகுடி மக்களின் நிலம், தேசியம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றதன் விளைவாக ஏற்பட்டது.
"இந்தப் புகைப்படம் காலனித்துவ காலத்தின் கொடுமைகளை நினைவூட்டுவதாக இல்லை. மாறாக, தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நெறிமுறை நிலைமைகளை மறைக்கும் வணிக நுகர்வு பழக்கவழக்கங்கள் மீதான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு, இத்தகைய போக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்ற ஆடம்பரங்களை எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், வெளியில் இருந்து பார்க்கும் போது தீங்கற்றதாகவும் மாற்றியது"
காட்டெருமைகளைக் கொல்வது வளங்களை குன்றச் செய்வதற்கான ஒரு உத்தியாக ராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ராணுவத்தின் பங்கு என்ன?
அமெரிக்காவை காலனித்துவத்தின் கீழ் கொண்டு வரும் போது பூர்வீக அமெரிக்கர்களின் வளங்களை சூரையாடுவதற்கான ஒரு வழியாக மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் காட்டெருமைகளை கொல்ல ராணுவத்தினரை அனுப்பினார்கள். இது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வு.
வரலாற்றாசிரியர் ராபர்ட் வூஸ்டர் தனது 'தி மிலிட்டரி அண்ட் யுனைடெட் ஸ்டேட்ஸ் இந்தியன் பாலிசி' என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "தெற்கு சமவெளி பழங்குடியினருக்கு எதிரான "முழு அளவிலான போர்" உத்திக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரியான ஜெனரல் பிலிப் ஷெரிடன், "காட்டெருமைகளை ஒழிப்பதே, பூர்வீக அமெரிக்கர்களின் நாடோடி பழக்கவங்களை மாற்ற சிறந்த வழி," என்று ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறைந்து வரும் காட்டெருமைகளை பாதுகாக்க சட்டங்களை இயற்ற அரசியல் தலைவர்கள் முயற்சி செய்த போது ஷெரிடன் இவ்வாறு கூறியுள்ளார். "வேட்டைக்காரர்கள் பூர்வீக அமெரிக்கர்களின் உணவு மூலங்களை அழித்து வருகின்றனர். மேலும், ராணுவம் விநியோகங்களை இழப்பது அதற்கு பின்னடைவாக அமையும். ஒரு நிரந்தர அமைதிக்கான தீர்வாக காட்டெருமைகள் முற்றிலுமாக அழியும் வரை அவற்றை கொன்று, தோலுரித்து விற்கட்டும்." என்றார் ஷெரிடன்.
ஷெரிடன் 1868-ம் ஆண்டு சக ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில், "பூர்வகுடிகளின் கால்நடைகளை அழிப்பதன் மூலம் அவர்களை ஏழையாக்குவதே அரசுக்கு இருக்கும் ஒரு சிறந்த வழி. பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவர்களை குடியேற்றலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் டாட்ஜ், ஒரு வேட்டைக்காரரிடம் "உங்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு காட்டெருமையையும் கொல்லுங்கள்... ஒவ்வொரு காட்டெருமை கொல்லப்படும் போதும் ஒவ்வொரு இந்தியனின் (பூர்வகுடி அமெரிக்கர்) கதையும் முடிந்துவிடும்" என்று கூறியிருக்கிறார்.
என்ன நடக்கிறது என்பதை பூர்வீக அமெரிக்கர்கள் அறிந்திருந்தனர். கிரேட் ப்ளைன்ஸில் உள்ள கியோவாஸ் பழங்குடியினரின் தலைவரான சதாந்தா, "எருமைகளை அழிப்பது என்பது இந்தியனின் (பூர்வகுடி அமெரிக்கர்) அழிவைக் குறிக்கும்" என்பதை ஒப்புக் கொண்டார்.
டெக்சாஸைச் சேர்ந்த காட்டெருமை வேட்டையாடிய, எல்லைப்புற ராணுவ வீரரான பில்லி டிக்சன் தனது சுயசரிதையில் இதனை நினைவு கூர்ந்தார். "ஜெனரல் பில். ஷெரிடன், சமவெளிப் பழங்குடியினரை வென்று, எப்போதும் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள, சதாந்தா அஞ்சிய காரியத்தை நடத்த வற்புறுத்தினார். அதையே நடைமுறைப்படுத்தினார்," என்று டிக்சன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பாதிக்கப்பட்ட பூர்வகுடிகள்
பூர்வீக அமெரிக்கர்கள் காட்டெருமைகளை இழந்தது, உயிர்வாழ்வதற்கும், உணவை உற்பத்தி செய்யவும் மேற்கத்திய ராணுவம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
ராணுவத்தின் தந்திரம் பலித்தது. கியோவா பழங்குடியினர் பின்னர் ஓக்லஹோமாவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு தலைமுறைக்குள், காட்டெருமைகளை பெரிதும் நம்பியிருந்த பூர்வீக அமெரிக்கர்களின் சராசரி உயரம், காட்டெருமைகளின் படுகொலையால் மிகவும் பாதிக்கப்பட்டது. ஒரு அங்குலத்திற்கும் (2.5 செ.மீ.) அதிகமாக அவர்களின் உயரம் குறைந்தது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், குழந்தை இறப்பு 16% அதிகமாக இருந்தது. மேலும், காட்டெருமைகளை நம்பி வாழ்ந்த நாடுகளில் தனிநபர் வருமானம், காட்டெருமைகளை சாராத நாடுகளோடு ஒப்பிடுகையில் 25% குறைவாகவே இருந்தது.
இருப்பினும், காட்டெருமைகளின் அழித்தொழிப்பு தொடர்பாக பல ஆண்டுகளாக சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன .
3 கோடி முதல் 6 கோடி வரை இருந்த காட்டெருமைகளை எப்படி வேட்டைக்கார்கள் கொன்றிருப்பார்கள் என்பது தான் அந்த விவாதம். 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இது ஒரு நோய் தொற்று மூலமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற பதிலை வழங்கியது.
அந்த காலக்கட்டத்தில், அமெரிக்காவில் கால்நடைகளுக்கு இரண்டு நோய்கள் ஏற்பட்டன. ஒன்று நெப்ராஸ்காவில் ஏற்பட்ட ஆந்த்ராக்ஸ், மற்றொன்று மொன்டானாவில் ஏற்பட்ட டெக்சாஸ் டிக் காய்ச்சல். "பல்லாயிரக்கணக்கான விலங்குகளை அழிக்க போதுமான ஆபத்தைக் கொண்டது இந்த நோய்கள்" என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு வரலாற்று பிரச்னை அல்ல
காரணம் எதுவாக இருந்தாலும், காட்டெருமைகளின் எண்ணிக்கையை பழைய அளவுக்கு மீட்க இயலவில்லை. மேலும், இந்த காட்டெருமைகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் காட்டெருமைகளை மீண்டும் பெருஞ்சமவெளி (Great Plains) பகுதிக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் முக்கியமானவை.
அமெரிக்க அரசாங்கத்தின் பணவீக்கக் குறைப்புச் சட்டம், 2023-ன் கீழ், அமெரிக்கா முழுவதும் காட்டெருமைகளை மீட்க 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்டெருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிய அளவிலான முயற்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
தி நேச்சர் கன்சர்வன்சி என்ற லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 1,000 காட்டெருமைகள் வளர்க்கப்பட்டன. அவை, அவர்களின் மூதாதையர் மேய்ச்சல் நிலங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மொன்டானாவில் ஒரு மறுசீரமைப்பு திட்டம் 5,000 காட்டெருமைகளை மீண்டும் புல்வெளிகளுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய வனவிலங்கு கூட்டமைப்புடன் இணைந்து பூர்வகுடி மக்கள் 250 காட்டெருமைகளை தங்கள் நிலத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
காட்டெருமை மண்டையோட்டு குவியல் புகைப்படத்திற்கு பின்னால் உள்ள செய்தி காலப்போக்கில் தொலைந்து போனது என்கிறார் பெத்தனி.
என்கிறார்"படம் ஒரு எளிமையான செய்தியைக் கொண்டுள்ளது. பார்ப்பவர்கள் மத்தியில் கடந்த காலத்தைப் பற்றிய வருத்தத்தை உணர அனுமதிக்கிறது. ஆனால், காலனித்துவ மற்றும் முதலாளித்துவ அமைப்புகள் நமது சுற்றுச்சூழலையும் நம் வாழ்க்கையையும் எதிர்மறையாக எவ்வாறெல்லாம் வடிவமைத்து என்ற கேள்வியை எதிர்கொள்ள கட்டாயப்படுத்தாது" அவர்.
மேலும், "இந்த புகைப்படம், அழித்தொழிப்புகள் மூலம் கிடைத்த பொருட்களை நுகர்வோர் எப்படி காலனித்துவ எந்திரத்தை இயக்குபவர்களாக இருந்தனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது."
"நீங்கள் மற்றொரு நபரை மனிதாபிமானமற்றதாக மாற்றினால் அல்லது ஒரு உயிரினத்தை 'இயற்கை வளம்' என்று புறக்கணித்தால், உங்களின் மனிதநேயமற்ற தன்மை மற்றும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தாருடன் வாழ்வதன் அர்த்தம் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கிறீர்கள் என்பதையே இது வெளிப்படுகிறது," என்று பெத்தனி கூறுகிறார்.
"இது பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான சமகால செய்தி, இது ஒரு வரலாற்று பிரச்னை அல்ல".
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












