You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய, மாநில பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராவது?
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பொதுத்தேர்வுக்குப் பிறகு மாணவர்களின் அடுத்தகட்ட உயர் கல்விப் பயணத்தைத் தீர்மானிப்பதில் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு முக்கிய இடம் உண்டு
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்றால் என்ன? அதன் தேர்வு முறை எப்படி இருக்கும்? இதில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற என்ன மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும்?
இந்தியாவில் உள்ள பல்வேறு மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுதான் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. இதனைத் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்துகிறது.
நாட்டிலுள்ள 48 மத்திய பல்கலைக்கழகங்கள், 36 மாநில பல்கலைக்கழகங்கள், 26 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 113 தனியார் பல்கலைக்கழகங்கள் இதில் அங்கமாக உள்ளன.
இந்த 223 பல்கலைக்கழகங்களைத் தவிர, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற ஏழு அரசு நிறுவனங்களும் இந்தத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை சேர்க்கையை வழங்குகின்றன.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவல் கையேட்டின்படி, இந்தத் தேர்வை எழுதுவதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்தவொரு விண்ணப்பதாரரும் இத்தேர்வை எழுதலாம்.
இருப்பினும், ஒரு மாணவர் சேர விரும்பும் குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அதற்கேற்ப சேர்க்கை நடைபெறும்.
தேர்வு எப்போது?
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, ஜேஇஇ, கேட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அகிலேஷ் சிங், "இதற்கு வயது வரம்பு இல்லை, 12-ஆம் வகுப்பு முடித்து ஓராண்டு இடைவெளி எடுத்தவர்களும் இத்தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். இருப்பினும், 12-ஆம் வகுப்பு படிக்கும் போதே இதற்குத் தயாரானால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது, ஏனெனில் ஆண்டுதோறும் போட்டி அதிகரித்து வருகிறது," என்கிறார்.
மூன்று பாடங்களுக்குப் பதிவு செய்யும் மாணவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மூன்று பாடங்களுக்கு மேல் கூடுதலாகச் சேர்க்கப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 400 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போதுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு மே 11 முதல் 31-க்குள் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய ஜனவரி 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வின் முறை என்ன?
இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது என 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் கட்டமைப்பு மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது குறித்து ஐஎம்எஸ் கல்வி நிறுவனத்தின் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு திட்ட இயக்குநர் ஜதிந்தர் வோரா, "முதல் பிரிவு மொழிப் பிரிவு ஆகும். இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, அஸ்ஸாமி உள்ளிட்ட 13 மொழிகள் உள்ளன. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மொழித்தாள் கட்டாயமானது. சில பல்கலைக்கழகங்களில் இது தேவையில்லை. ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் போன்ற முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இது மிக அவசியம். ஆங்கில இலக்கியம் போன்ற படிப்புகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் என்றாலும், பொதுவான படிப்புகளுக்கு மாணவர்கள் இந்த 13 மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்." என்றார்
"இரண்டாம் பிரிவு துறை சார்ந்த பாடங்கள் ஆகும். இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற 12-ஆம் வகுப்பில் படிக்கும் பாடங்களை இதில் தேர்வு செய்யலாம்."
"மூன்றாம் பிரிவு பொதுத் திறன் தேர்வு (GAT - General Aptitude Test) ஆகும். இதில் பொது அறிவு, தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதம் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இது கட்டாயமில்லை என்றாலும், மாநில பல்கலைக்கழகங்களின் தகுதி சார் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவும், கூடுதல் மதிப்பெண் பெறவும் இதை எழுதுவது நல்லது."
எந்தப் பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது நீங்கள் சேர விரும்பும் பல்கலைக்கழகம் மற்றும் படிப்பைப் பொறுத்தது.
ஜதீந்தர் வோரா இதனைக் குறித்து விளக்கினார். "உதாரணமாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் (B.Com Honours) சேர விரும்புபவர்கள் ஒரு மொழித்தாள், கணிதம் அல்லது கணக்குப்பதிவியல் மற்றும் பிற இரண்டு துறை சார்ந்த பாடங்களை எழுத வேண்டும். ஆனால் பனாரஸ் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு தேவைப்படும் பாடங்கள் மாறக்கூடும்" என்றார்.
துறை சார்ந்த பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அகிலேஷ் சிங் அறிவுறுத்துகிறார்.
துறை சார்ந்த பாடங்கள் என்பது இயற்பியல், வேதியியல், கணிதம், கணக்குப் பதிவியல், வரலாறு, உயிரியல் போன்று 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் படிக்கும் துறை சார்ந்த பாடப்பிரிவுகள்.
"மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் படித்த பாடங்களையே இதிலும் தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் படிக்காத பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்தப் பாடத்தைப் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். உங்களின் மதிப்பெண்ணில் ஒரு பகுதி குறைக்கப்பட்டு, அதன் பிறகே கட்ஆஃப் (தரவரிசை) கணக்கிடப்படும்," என்று அவர் விளக்குகிறார்.
ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான பதிலுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். கேள்வியைத் தவிர்க்கும் பட்சத்தில் மதிப்பெண் குறைப்போ அல்லது கூடுதல் மதிப்பெண்ணோ இருக்காது.
மொத்தம் ஐந்து தாள்கள் உள்ளன, ஒவ்வொரு பாடத்திற்கும் தாளை முடிக்க 60 நிமிடங்கள் வழங்கப்படும்.
பாடத்திட்டம் என்ன?
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் பாடத்திட்டம் 12-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது என அகிலேஷ் சிங் கூறுகிறார்.
"என்சிஇஆர்டி பாடத்திட்டம் மிகவும் விரிவானது. மாநில பாடத்திட்டங்கள் பெரும்பாலும் என்சிஇஆர்டியைத் தழுவியே அமைகின்றன, இருப்பினும் சில பாடங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், தேசிய தேர்வு முகமை தரப்பில் முழு வினாத்தாளுமே என்சிஇஆர்டி அடிப்படையில்தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு மாணவர் எந்தப் பாடத்திட்டத்தில் படித்தவராக இருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவில் ஆழமான அறிவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்," என்கிறார்.
அதேபோல், ஜதிந்தர் வோராவின் கருத்துப்படி, துறை சார்ந்த பாடங்களின் பாடத்திட்டம் 90-95% வரை என்சிஇஆர்டி பாடத்திட்டத்துடன் பொருந்துகிறது.
கருத்தில் கொள்ள வேண்டியவை
பயிற்சி மையங்களுக்குச் செல்லாமலேயே பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் சிறந்து விளங்க சில வழிகளை அகிலேஷ் சிங் பரிந்துரைக்கிறார்:
- என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை கவனமாகப் படிக்கவும். எந்த சந்தேகமும் இல்லாத அளவிற்கு அதைத் தீரப் பயிற்சி செய்யவும்.
- தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும்.
- முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அடிக்கடி பயிற்சி செய்யவும்.
- நேர மேலாண்மை மிக முக்கியமானது.
மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஜதிந்தர் வோரா. மேலும், துறை சார்ந்த பாடங்களுக்கு முதலில் 12-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், தேர்விற்கு விடாமுயற்சியுடன் தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு