கிறிஸ்துமஸ் நாள் உரையில் 'மூன்றாம் உலகப் போர்' குறித்து பேசிய போப் ஃபிரான்சிஸ்

Pope Francis Christmas Day message from the Vatican.

பட மூலாதாரம், Reuters

கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் மாடத்தில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். இது போப் ஃபிரான்சிஸின் 10ஆவது கிறிஸ்துமஸ் நாள் உரையாகும்.

போப் தனது உரையில் போது, யுக்ரேனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இந்த போரின் காரணமாக யுக்ரேனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதன் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர், என்றார்.

உலகின் கோதுமை தேவையில் 30% கோதுமையை யுக்ரேன் ஏற்றுமதி செய்கிறது. இந்த போரினால் யுக்ரேனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வாட்டிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தின் மாடத்தில் இருந்தவாறே போப் ஆண்டவர் உலக மக்களிடம் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தையும், கிறிஸ்துமஸ் தின செய்தியையும் ஆண்டுதோறும் தெரிவிப்பது வழக்கம். இன்று இந்த செய்தியை போப் வழங்கினார்.

தமது 10 நிமிட உரையில் பெரும்பாலான நேரம் யுக்ரேன் போர் குறித்தே போப் ஃபிரான்சிஸ் பேசினார்.

''அமைதிக்கான இந்த மோசமான பஞ்சம் பிற பகுதிகளிலும், மூன்றாம் உலகப்போரின் அரங்கேற்றங்கள் நிகழும் இடங்களிலும் உள்ளது,'' என்று போப் பிரான்சிஸ் தமது உரையில் குறிப்பிட்டார்.

இதுமட்டுமல்லாது மத்திய கிழக்கு, ஹைடி, மியான்மர், ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள சஹேல் போன்ற நாடுகளில் நடக்கும் மோதல்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இரானில் மீண்டும் நல்லிணக்கம் திரும்ப தான் பிரார்த்தனை செய்வதாக கூறிய போப், அங்கு அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் கடந்த மூன்று மாதங்களில் 69 குழந்தைகள் உட்பட 500 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர் எனப் பேசினார்.

"மனிதர்களின் அதிகாரப் பசி மற்றும் பணப் பசிக்கு" - கண்டித்த போப்

Pope coming to baslica in wheel chair

பட மூலாதாரம், Getty Images

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் மாலையில், வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் போப் ஆண்டவர் கலந்து கொண்டார்.

சனிக்கிழமை புனித பீட்டர்ஸ் பேராலயத்திற்கு தனது சக்கர நாற்காலியில் வந்திருந்த போப் ஃபிரான்சிஸ், பீடத்தில் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே வழிபாட்டில் கலந்து கொண்டார். பேராலயத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போப் ஆண்டவர், ரஷ்யா - யுக்ரேன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நிகழும் மோதல்களை குறிக்கும் வகையில், "மனிதர்களின் அதிகாரப் பசி மற்றும் பணப் பசிக்கு" எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் போப் தனது உரையில் நேரடியாக ரஷ்யா - யுக்ரேன் இடையே நடக்கும் போர் குறித்து பேசவில்லை.

போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள்

'கிறிஸ்துமஸ் ஈவ் மாஸ்' நிகழ்வு உரையின்போது, உலகில் நடைபெற்ற பல்வேறு போர்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் எளிதில் இலக்காகும் வகையிலும், பலவீனமாகவும் வாழ்கின்றனர் என போப் தனது உரையின் போது குறிப்பிட்டார். அனைத்திற்கும் மேலாக போரினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், குறிப்பாக வறுமையிலும், அநீதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகள் கூட அவைகளின் தேவைக்கேற்ப உட்கொள்ளும் நிலையில், அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் ஏற்படும் பசிக்காக நாம் நமது தாயையும், சகோதர சகோதரிகளையும், அக்கம் பக்கத்தினரையும் கூட விட்டு வைக்க மறுக்கிறோம் என்றார், போப் ஃபிரான்சிஸ்.

Pope francis

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய படையெடுப்பு குறித்து போப் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாக யுக்ரேனிய மக்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானார், போப் ஆண்டவர். அதன் பின்னர் ஜூன் மாதம் பேசிய போப், "இந்த போர் எப்படியோ தூண்டப்பட்டது அல்லது தடுக்கப்படவில்லை". என்றார். ஆனால் அதன் பின்னர் போப், "ரஷ்ய துருப்புக்கள் செய்த அட்டூழியங்கள்" என்று தான் விவரித்த செயல்களைக் கண்டித்தார்.

காணொளிக் குறிப்பு, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: