கீர்ட் வைல்டர்ஸ்: நெதர்லாந்து தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு தலைவரின் பின்னணி

    • எழுதியவர், பால் கிர்பி & அன்னா ஹோலிகன்
    • பதவி, பிபிசி செய்திகள், தி ஹேக்

மூத்த இஸ்லாமிய எதிர்ப்பு ஜனரஞ்சக தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் நெதர்லாந்து பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் வியத்தகு வெற்றியைப் பெற்றுள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக அங்கம் வகித்த பிறகு, அவரது சுதந்திரக் கட்சி (பிவிவி) 37 இடங்களைத் தற்போது வெல்ல உள்ளது. இது, அவரது நெருங்கிய போட்டியாளரான இடதுசாரி கூட்டணி பெற்ற இடங்களைவிட அதிகமான இடங்களாகும்.

"பிவிவியை இனி புறக்கணிக்க முடியாது, நாங்கள் ஆட்சி செய்வோம்”, என அவர் கூறினார்.

அவரது வெற்றி டச்சு அரசியலை உலுக்கியது மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தன்னுடைய “அனைவருக்கும் பிரதமர்” என்ற உறுதிமொழியை நிறைவேற்ற, மற்ற கட்சிகளைத் தன்னுடன் கூட்டணியில் சேரும்படி அவர் அழைக்க வேண்டும். 150 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 76 இடங்களைப் பெறுவது அவரது இலக்காக உள்ளது.

அறுபது வயதான வைல்டர்ஸ், மற்ற நாட்டினர் நெதர்லாந்துக்கு இடம் பெயர்வது பற்றி மக்களுக்கு இருந்த கோபத்தைச் சரியாகப் பயன்படுத்தி “எல்லைகள் மூடப்பட்டுவிட்டன” என்னும் தேர்தல் வாக்குறுதியை அளித்தார். ஆனால், குர்ஆனை தடை செய்வதாக அவர் அளித்த வாக்குறுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அவர் தனது வெற்றி உரையில் போராட்ட மனநிலையில் இருந்தார். அவர் பேசுகையில், "நாங்கள் ஆட்சி செய்ய விரும்புகிறோம்... நாங்கள் ஆட்சி செய்வோம். நாங்கள் பெற்ற இடங்கள் ஒரு மகத்தான ஊக்கம். ஆனால் அதுவொரு மகத்தான பொறுப்பும்கூட,” எனத் தெரிவித்தார்.

வாக்கெடுப்புக்கு முன், மற்ற மூன்று பெரிய கட்சிகள் வைல்டர்ஸ் தலைமையிலான அரசாங்கத்தில் பங்கேற்பதை நிராகரித்தன. காரணம், அவரது தீவிர வலதுசாரி கொள்கைகள். ஆனால், அவர் தற்போது பெற்றிருக்கக் கூடிய வெற்றி அவர்களின் முடிவை மாற்றக்கூடும்.

94% வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட கணிப்பின்படி, முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸின் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 25 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டச்சு ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, வைல்டர்ஸ் தலைமையிலான அரசாங்கத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். "நெதர்லாந்திற்கு இடம்பெயர்ந்த யாரையும் வெளியேற விடமாட்டோம். நெதர்லாந்தில் அனைவரும் சமம்," என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

டிலான் யெசில்கோஸின் கீழ் உள்ள மைய-வலது தாராளவாத கட்சியான VVD மூன்றாவது இடத்தையும் மேலும் விசில்ப்ளோவர் எம்பி பீட்டர் ஓம்ட்ஜிக்ட் உருவாக்கிய புதிய கட்சி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

வைல்டர்ஸ் தனது அரசியல் போட்டியாளர்களுக்கு ஒன்றிணைந்து செயல்படலாம் என நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வைல்டர்ஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வைல்டர்ஸோடு கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பை முழுமையாக நிராகரிக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது.

வைல்டர்ஸின் வெற்றி ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பும். ஏனெனில் நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்று.

ஐரோப்பா முழுவதும் உள்ள தேசியவாத மற்றும் தீவிர வலதுசாரி தலைவர்கள் அவரது சாதனையைப் பாராட்டியுள்ளார்கள். பிரான்சில், தேசிய பேரணியின் தலைவர் மரைன் லு பென், "தேசிய அடையாளங்களைப் பாதுகாப்பது குறித்துப் பெருகி வரும் ஆதரவை இது உறுதிப்படுத்துகிறது," என்றார்.

வைல்டர்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு "நெக்சிட்" என்று அழைக்கப்படும் பொது வாக்கெடுப்பை நடத்த விரும்புகிறார். இருப்பினும் அவ்வாறு செய்வதற்கான தேசிய மனநிலை இல்லை என்பதை அவர் அங்கீகரிக்கிறார். எந்தவொரு பெரிய கட்சி வரும் காலத்தில் தன்னோடு கூட்டணி வைத்தாலும் அவர்களை நெக்சிட்டிற்கு ஆதராவாக வாக்களிக்க வைக்க அவர் சிரமப்பட வேண்டியிருக்கும்.

வாக்குப் பதிவுக்கு முன்னதாக அவர் தனது இஸ்லாமிய எதிர்ப்பு சொல்லாட்சியைக் குறைத்துக் கொண்டார். இந்த நேரத்தில் அதிக அழுத்தமான பிரச்னைகள் இருப்பதாகவும், மசூதிகள் மற்றும் இஸ்லாமிய பள்ளிகளைத் தடை செய்வது குறித்த தனது கொள்கைகளை "ஃபிரிட்ஜில் வைக்க" அவர் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த வியூகம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அவரது பிவிவி கட்சியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.

பிரசாரத்தின் போது திரு வைல்டர்ஸ் முந்தைய அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டார்.

ட்வென்டே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானி மார்ட்டின் ரோஸ்மாவு கூறுகையில், “இந்தத் தேர்தல் வெற்றி ஒரு சில மாதங்களில் வைல்டர்ஸிற்கு கிடைத்த பல வெற்றிகளில் ஒன்று. மற்றொன்று, மத்திய-வலது தாராளவாதத் தலைவர் அவருடன் கூட்டணியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பது,” என்று அவர் தெரிவித்தார்.

"சர்வதேச அரசியலில் இருக்கும் முன்னுதாரணங்களைப் பார்க்கும்போது, தீவிர வலதுசாரிக் கட்சிகள் அரசியலில் இருந்து விலக்கப்பட்டால் அவை மேலும் வளர்கின்றன என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் கூறினார்.

மக்களிடையே இடப்பெயர்வு பெரிய பிரச்னையாக உள்ளது. இடப்பெயர்வு எனும் சுனாமியை நான் சமாளிப்பேன் என்று கடந்த புதன்கிழமை வைல்டர்ஸ் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு நெதர்லாந்திற்கு நிகர இடம்பெயர்வு 220,000ஐ விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ரஷ்யாவின் யுக்ரேன் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறிய அகதிகள். ஆனால் சுமார் 390,000 வீடுகள் பற்றாக்குறையால் பிரச்னை மோசமாகியுள்ளது.

நாட்டில் நீண்ட கால பிரதமராக இருந்த மார்க் ரூட்டே, ஜூலை மாதம் அரசியலில் இருந்து விலகியபோது, ​​மத்திய வலதுசாரித் தலைவராக திருமதி யெசில்கோஸ் பொறுப்பேற்றார்.

அவர் துருக்கியிலிருந்து ஏழு வயது அகதியாக நெதர்லாந்துக்கு வந்தார். ஆனால் அவரே அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் வைல்டர்ஸோடு யார் கூட்டணி சேரப் போகிறார்கள் என்பதைச் சுற்றித்தான் உள்ளது.

வைல்டர்ஸ், தன் தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பது குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார். தான் ஒரு நம்பிக்கையான மனிதன் என்றும் தான் பெற்றிருக்கும் வெற்றி மற்ற கட்சியினருக்கு தன்னை புறக்கணிப்பதைக் கடினமாக்கும் என்றும் வைல்டர்ஸ் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)