அபுதாபியில் இந்து கோவிலை திறக்கும் மோதி - மத சகிப்புத்தன்மை பற்றி ஐக்கிய அரபு அமீரக தூதர் கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 13ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். அங்கு அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்கிறார்.

மோதியின் பயணம் குறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதருடனான பேட்டியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அப்துல்நாசிர் அல்ஷாலி, இந்த நிகழ்வைச் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

“இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும் சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மதிப்புகளுக்கு ஏற்ப இது அமைந்திருக்கிறது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். கடந்த எட்டு மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமரின் மூன்றாவது பயணம் இது. 2015ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால் இது ஏழாவது முறை.

பிரதமர் மோதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை இங்கு சந்திக்கிறார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமையும் மோதி சந்திக்கிறார். அவரது அழைப்பின் பேரில், துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அல்ஷாலி தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த மின்னஞ்சல் பேட்டியில், "இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைக் காட்டுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவில் திறப்பு விழாவைத் தவிர, இரு தலைவர்களின் சந்திப்பு நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"இருதரப்பு உறவுகளின் முக்கியமான பகுதிகளில் மேலும் ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்புகளை நாம் கேட்க வாய்ப்பிருக்கிறது."

இரு நாடுகளுக்கும் இடையே 2022-23ஆம் ஆண்டுக்கு இடையில் இருதரப்பு வர்த்தகம் 85 பில்லியன் டாலர்களாக இருந்தது. அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை, 2022-23இல் இந்தியாவில் முதலீடு செய்யும் முதல் நான்கு நாடுகளில் கத்தார் உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அல்ஷாலி கூறுகையில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடனான இருதரப்பு மற்றும் ராஜ்ஜீய உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது," என்றார்.

"இந்து கோவிலை திறப்பதற்காக பிரதமர் மோடியின் வருகையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுகிறது. இது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை மதிப்புகளுக்கு ஏற்ப உள்ளது." என்றும் அவர் கூறினார்.

இந்திய சமூகத்தைச் சந்திக்கும் மோதி

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் நரேந்திர மோதி சந்திக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு 'அஹ்லான் மோடி' என்று பெயரிடப்பட்டுள்ளது. வணக்கம் மற்றும் வரவேற்பு என்பது அரபு மொழியில் அஹ்லான் என்று அழைக்கப்படுகிறது.

“பிரதமர் மோதி உரையாற்றும் மிகப்பெரிய புலம்பெயர் நிகழ்வாக இது இருக்கும்” என்று ஹிந்து நாளிதழ் கூறுகிறது. இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறும். இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வின் செய்தித் தொடர்பாளர் நிஷா சிங், தி இந்துவிடம் கூறுகையில்,” பிரதமர் மோதி கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த புலம்பெயர்ந்தோர் நிகழ்ச்சியில் 2015இல் உரையாற்றினார். அதற்குப் பிறகும், மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார். ஆனால் அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)