You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு: கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம் - உத்தரபிரதேச அரசின் பதில் என்ன?
நாட்டின் பல மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளுக்கு எதிரான ‘புல்டோசர் நடவடிக்கை’ குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையான கருத்துகளை தெரிவித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாத் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இத்தகைய இடிப்பு நடவடிக்கை தேவைப்படும் போது அதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உருவாக்கும் என, நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், "ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?" என்று நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீதிபதி கவாய், “ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்றார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உத்தரபிரதேச அரசு என்ன பதில் அளித்தது?
மாநில அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருக்கு சொந்தமான எந்த கட்டடத்தையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.
மேலும் அவர், “கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸை நீண்ட காலத்திற்கு முன்பே அனுப்பியதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளோம்” என்றார்.
இத்தகைய கட்டட இடிப்பு நடவடிக்கை, எந்த குற்றச் செயலுடனும் தொடர்பில்லாத, சுதந்திரமான ஒன்று என்று அவர் கூறினார்.
மறுபுறம் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சி.யு. சிங் ஆகியோர், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
"உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கும்"
எந்தவொரு கட்டடத்தையும் இடிக்க சட்டங்கள் உள்ளன என்றும், ஆனால் அவை ‘அடிக்கடி மீறப்படுவதாகவும்’ உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
"நாங்கள் முழு நாட்டிற்கும் வழிகாட்டுதல்களை உருவாக்குவோம். எந்தவொரு அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்திற்கும் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று அர்த்தமல்ல" என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவாக கூறியுள்ளது.
இந்த வழக்கில் வழிகாட்டுதல்களை முடிவு செய்ய இரு தரப்பினரும் ஆலோசனைகளுடன் வருமாறு அந்த அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்தது யார்?
நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஏப்ரல் 2022 இல் டெல்லி ஜஹாங்கிர்புரியில் இத்தகைய இடிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2022-ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி தினத்தன்று ஜஹாங்கிர்புரியில் நடந்த ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தன. அதன்பிறகு அந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு விதிமீறல் கட்டுமான நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம், புல்டோசர் கொண்டு அவற்றை இடிக்கப் போவதாக கூறியிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது, ஆனால் அதிகாரிகள் புல்டோசர்களை தண்டனையாகப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்க மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனுதாரர்களில் ஒருவரான மாநிலங்களவை முன்னாள் எம்பியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான பிருந்தா காரத் ஜஹாங்கிர்புரியில் புல்டோசர் நடவடிக்கையின் போது சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.
செப்டம்பர் 2023 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சில மனுதாரர்களின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை மாநில அரசு இடிப்பது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.
வீடு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமையின் ஒரு அம்சம் என அவர் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசியல்வாதிகளும் வழக்கறிஞர்களும் சொல்வது என்ன?
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
'அநீதியின் புல்டோசரை' விட 'நீதியின் அளவு' பெரிது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான உதித் ராஜும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவராக இருந்தாலும் ‘புல்டோசர் நடவடிக்கை’ மேற்கொள்ளப்படும் என்றால் நீதிமன்றத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் என்ன தேவை என்று அவர் கூறியுள்ளார்.
“நாட்டில் சர்வாதிகாரம் உள்ளதையும் அரசியலமைப்பு இல்லாத காட்டுமிராண்டித்தனமான சகாப்தத்தையும் இத்தகைய சம்பவங்கள் நினைவூட்டுகின்றன. வீட்டை இடிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா, சிறைக்கு அனுப்புவதா அல்லது வேண்டாமா, அபராதம் விதிப்பதா, வேண்டாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என அவர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
"அரசியல்வாதிகள் அல்லது அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் முடிவுகளை எடுக்கத் தொடங்கினால், அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மற்றும் சட்ட புத்தகங்களின் தேவை என்ன?" என அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் கருத்து தெரிவித்துள்ளார்.
"சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த நடவடிக்கை குறித்து கருத்து கூறியதற்காக உச்ச நீதிமன்றம் பாராட்டப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)