You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: வேட்பாளரின் மீசை, குழந்தையின்மை கூட தேர்தல் முடிவை தீர்மானிப்பது எப்படி?
- எழுதியவர், குமுத் ஜெயவர்தன
- பதவி, பிபிசி சிங்களம்
இலங்கையில் தேர்தல்களின் போது, குறிப்பாக ஜனாதிபஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளர்களின் தோற்றத்தைக் குறிவைத்து பல்வேறு கருத்துகள் பேசப்படுவது வழக்கம் .
இலங்கையில் ஒரு நபரின் மீசை, உருவம், ஆங்கிலப் புலமை மற்றும் சிங்களம் பேசும் திறன், உடைகள், குழந்தைகள் இருப்பது போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகள் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் விஷாக சூரியபண்டார சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் மக்கள் போராட்டத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை தேர்தலில் அத்தகைய பிம்பங்கள் எந்தளவுக்கு செல்லுபடியாகும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
"வெளிப்புற பிம்பம்" என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் அனைத்து கருத்துகள், உணர்வுகள் மற்றும் மதிப்பீடுகளைக் குறிக்கிறது.
ஆசியாவில் "இமேஜ் அரசியல்" பரவலாக இருக்கிறது. ஐரோப்பாவிலும் சில இடங்களில் இமேஜ் அரசியல் காணப்படுகிறது.
சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு `இமேஜ் அரசியல்’ குறித்து கருத்து தெரிவித்தார்.
பிரிட்டனின் பிரதமராக பதவியேற்ற பிறகு, சர் கெய்ர் ஸ்டார்மர் தனது வெற்றி உரையில், மக்கள் "மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்" என்றும், "இமேஜ் அரசியலுக்கு முடிவு கட்டுவோம்" என்றும் சபதம் செய்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை மக்கள் எடுத்த முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெரிய மீசையுடன் திடகாத்திர உடலைக் கொண்டு தனது வெளி பிம்பத்தை அதிகரிக்க பல யுக்திகளை கையாண்ட அரசியல்வாதி.
தேசிய உடை மற்றும் குராஹான் ஸ்கார்ஃப் அணிவது, இனம் மற்றும் மதம் தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஆகியவை மட்டுமின்றி 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின் முடிவும் ராஜபக்ஸவின் இமேஜ் அரசியல் வளர்ச்சியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின.
மகிந்த ராஜபக்ஸ தேசிய உடை அணியும் கிராமவாசி என்ற கருத்தும் பரப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அவரை 'பையா', `கிராம மேயர்’ என்றும் செல்லமாக அழைத்தனர்.
"ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை பண மோசடி’’ (Helping Hambantota) போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்ட போதும் அவர் கட்டமைத்த பிம்பத்தினால் இரண்டு முறை இலங்கை அதிபராக அவரால் வர முடிந்தது.
மஹிந்த ராஜபக்ஸ கட்டியெழுப்பிய பிம்பம் கோத்தபய ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவிக்கு வரச் செய்ததுடன், அதுமட்டுமல்லாமல் கோத்தபயவும் தான் ஒரு வலுவான தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தார்.
மற்றொரு புறம், ரணில் விக்கிரமசிங்கவைப் பொருத்தவரையில், இலங்கையின் பெரும்பாலான வாக்காளர்கள் மத்தியில் அவர் பற்றி உருவான பிம்பம் வித்தியாசமானது.
ரணில் விக்கிரமசிங்கவின் உடைகள், ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசுவதில் பிரச்னை, வெளித்தோற்றம், போரை காட்டிலும் பேச்சுவார்த்தையில் காட்டிய ஆர்வம் போன்ற காரணங்களால் அவர் 'துரோகி, மேற்குலக சார்புடைய ஆட்சியாளர்' என எதிர்க்கட்சிகளால் சித்தரிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு குழந்தைகள் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
அவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட அந்த பிம்பம் அவரது அரசியல் பயணத்திற்கு பாதகமாக இருந்தது.
ரணில் எதிர்கொண்ட அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் இல்லை என்றாலும் சஜித் பிரேமதாசவும் குழந்தைகள் இல்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இப்போது இமேஜ் அரசியலின் நிலைமை என்ன?
"இலங்கையில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்கள் பல ஆண்டுகளாக இமேஜ் அரசியலை பார்த்து, தலைவர்களை தேர்வு செய்து பாடம் கற்றுள்ளனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த வெளி பிம்பம் செல்லுபடியாகாது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு ஆளான பிந்தைய சூழலில், ஜனாதிபதி தேர்தலின் போது இது கண்டுக் கொள்ளப்படாது என்று தோன்றுகிறது. ”என்று பேராசிரியர் விசாக சூரியபண்டார பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஒரு நாட்டை முறையாக ஆள்வதற்கு அரசியல்வாதியின் வெளி பிம்பம் முக்கியமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய, தெளிவான செயல் திட்டம் கொண்ட, தொலைநோக்குப் பார்வை உள்ள, வெளிநாடுகளை சமாளிக்கக்கூடிய ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வெளிப்புற பிம்பம் மீதான நம்பிக்கை இப்போது குறைந்துவிட்டது," என்று பேராசிரியர் கூறினார்.
'இந்த முறை நிலைமை வேறு'
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் வெளி பிம்பம் தொடர்பான எவ்வித விமர்சனங்களும் அவமான கருத்துகளும் இடம்பெறவில்லை என அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்க தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை எடுத்துக்கொண்டால், பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் அவரை விமர்சித்துள்ளன. இந்த ஜனாதிபதி தேர்தலில் அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. முன்னர் அவரை விமர்சித்த பலர் தற்போது அவருடன் உள்ளனர். தற்போது இருவரும் பரஸ்பர உதவிகளை பெற்று வருகின்றனர். "
எனினும், ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் நெருக்கம் காட்டுவதில்லை என்பது பேராசிரியரின் கருத்து.
"ரணில் விக்கிரமசிங்க மிகவும் மதிப்புமிக்க உடைகளை அணிந்து கொண்டு தனது வாக்காளர்களை உரையாற்றுவதற்காக கூட்டங்களுக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய சூட், காலணி மற்றும் டை மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறு ஆடைகள் அணிய முடியாத நிலையில் உள்ளனர். அப்படியானால் ரணில் விக்கிரமசிங்க மீது மக்களுக்கு என்ன மாதிரியான பிம்பம் இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது." என்கிறார்.
தலைவர்களின் வெளித் தோற்றத்தை பற்றி இப்போது மக்கள் கவலைப்படுவதில்லை
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்பாளர்களின் வெளி பிம்பம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பிம்பங்களை வைத்து அரசியலை தீர்மானிக்கும் நிலை தற்போது மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்த நேரத்தில், வெளி பிம்பம் பற்றிய கவலை குறைந்துள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஒரு தெளிவான செயல் திட்டத்துடன் கூடிய தலைவரையே அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, இப்போது இந்த இமேஜ் அரசியலை பற்றிப் பேசுவது குறைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று டாக்டர் தயான் கூறினார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு குறிப்பிட்ட செயல் திட்டம் இருப்பதாக மக்கள் நம்ப வைக்கக்கூடிய வேட்பாளர் இம்முறை வெற்றி பெறுவார் எனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)