இலங்கையில் ஒரே நேரத்தில் முகாமிட்ட இந்திய, சீன போர்க் கப்பல்கள் - எதற்காக தெரியுமா?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன.

இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன?

சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை

சீனாவிற்கு சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன.

“HE FEI”, “WUZHISHAN” , “QILIANSHAN” என்ற மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று சீன போர் கப்பல்களும், இலங்கைக்கு சொந்தமான விஜயபாகு அப்போது, போர்க் கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டன.

போர்க் கப்பல்களுக்கு இடையில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு கப்பல் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. சீன போர்க் கப்பலில் வருகை தந்த அந்நாட்டு அதிகாரிகளை இலங்கையின் முக்கிய இடங்களுக்கு கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, சீன போர் கப்பல் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்த தெளிவூட்டல்களும் அந்த நாட்டு கடற்படை அதிகாரிகளினால் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சீன போர்க் கப்பல்கள் எத்தகையவை?

  • Destroyer ரகத்தைச் சேர்ந்த “HE FEI” என்ற சீனாவின் போர் கப்பலானது, 144.50 மீட்டர் நீளத்தை கொண்டது. அந்த கப்பலில் 267 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • எல்பிடி (Landing Platform Dock) எனப்படும் நீர்-நிலம் இரண்டிலும் செயல்படக் கூடிய கப்பல் ரகத்தைச் சேர்ந்த “WUZHISHAN” போர்க் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 872 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • எல்பிடி ரகத்தைச் சேர்ந்த “QILIANSHAN” போர் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 334 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • இதன்படி, இந்த மூன்று சீன கப்பல்களிலும் 1,473 கடற்படை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்திய போர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் மும்பை’ போர்க் கப்பல் கடந்த 26ம் தேதி கொழும்பு துறைமுகத்திற்கு சென்றது. கடந்த வியாழக்கிழமையன்று அந்த போர்க் கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது.

இந்திய கடற்படை போர்க் கப்பலானது, இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு போர்க்கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது.

இரண்டு நாட்டு போர்க்கப்பல்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் நட்பு ரீதியான கலந்துரையாடல்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 163 மீட்டர் நீளம் உடையது. அந்த கப்பலில் 410 இந்திய கடற்படை அதிகாரிகள் இருந்தனர்.

சீன - இந்திய அதிகாரிகள் இடையில் கலந்துரையாடல் நடந்ததா?

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே தருணத்தில் வருகை தந்த சீன மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, பிபிசி தமிழுக்கு இதனை குறிப்பிட்டார்.

''எரிபொருள், உணவு போன்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலேயே இரண்டு நாட்டு போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்தன. அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதை தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை. இந்திய மற்றும் சீன கடற்படை அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவில்லை. அவர்கள் எந்த இடத்திலும் சந்திக்கவில்லை" என அவர் கூறினார்.

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வந்தமைக்கு இந்தியா எதிர்ப்பு

சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து, சமுத்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்து, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலினால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அந்த சந்தர்ப்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனா ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை இலங்கை கடற்பரப்பில் நடத்தியிருந்தன.

மூன்று சீன கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்ததா?

சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், இலங்கைக்கு வருகை தந்த சந்தரப்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா, தற்போது சீனாவின் மூன்று போர் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிடவில்லை.

எனினும், சீனா கப்பல்கள் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து, மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிகழ்வில் அதிபர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

வல்லுநரின் கருத்து என்ன?

சீனாவிற்கு சொந்தமான போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததை சாதாரண விடயமாக பார்க்க முடியாது என சமூக பணி மற்றும் அமைதிக் கல்வித்துறையின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

''இந்தியாவிற்கு இலங்கை ஒரு நட்பு நாடு மாத்திரம் அல்ல. பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு இலங்கை ஒரு முக்கியமான நாடு. அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை இந்தியா செய்து தான் ஆக வேண்டும். அந்த அடிப்படையில் தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கைக்கு சென்றுள்ளதை பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

“பாதுகாப்பிற்காக ஒரு நாடு கப்பலொன்றை அனுப்பும்போது, இன்னுமொரு நாடும் கப்பலை அனுப்பும். இதனை வினை, எதிர்வினையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதுவொரு மோதல் போக்காக மாறுமா? இல்லையென்றால், மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுமா? என்றால், அப்படியெல்லாம் கிடையாது” என்றார்.

இரண்டு நாடுகளின் கப்பல்கள் வருவது கண்டிப்பாக தற்செயலாக நடந்ததாக இருக்காது என்றும் ஒரு கப்பல் நாடொன்றிற்குள் வரும் போது, உயர் மட்டத்தின் அனுமதியில்லாமல் உளவு கப்பல்களோ அல்லது ஆய்வு கப்பல்களோ வர முடியாது என்றும் அவர் கூறினார்.

“சீனா இந்த பிராந்தியத்தில் காலூன்ற வேண்டும் என நினைக்கின்றார்கள். அதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த நினைக்கின்றார்கள். இந்த பிராந்தியத்திற்குள் நீங்கள் வந்தால் எங்களுடைய பாதுகாப்பு கப்பல்களும் அங்கு இருக்க தான் போகின்றது என கூறுவதுதான் இதன் நோக்கம் என சொல்லப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.

வழமையான தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காகவே இந்த கப்பல்கள் இலங்கைக்குள் வந்ததாக இலங்கை கடற்படை கூறிய கருத்து தொடர்பிலும், பேராசிரியர் கிளாட்சன் சேவியர் கருத்து தெரிவித்தார்.

''ரணில் விக்ரமசிங்கவின் மிகப் பெரிய வெற்றி என்னவென்று பார்த்தால், எல்லா தரப்புகளையும் நண்பர்களாக வைத்துக்கொள்வது. அது இரானாக இருந்தாலும் சரி, யுக்ரேனாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அது பாலத்தீனமாக இருந்தாலும் சரி. அவர்களுக்குள் மாத்திரமே மோதலே தவிர, எங்களுக்குள் கிடையாது. நாங்கள் நண்பர்களாகவே இருந்து கொள்வோம் என்று சொல்லி நண்பர்களாக வைத்துக்கொள்வதே இவருடைய வழக்கம்” என்கிறார் அவர்.

மேலும், “அதே வழி முறையில் தான் இந்த விடயமும் நடக்கிறது. சீனாவிற்கும் தங்களுக்கும் நேரடி பிரச்னை இல்லை, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்னை இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. சீனாவும் வேண்டும். இந்தியாவும் வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை நடக்கின்றது. காரணம் இல்லாமல் கப்பல் வந்தது, வந்த இடத்தில் பயிற்சி அளித்தார்கள் என்றால் நம்ப முடியாது” என்கிறார் அவர்.

ஒரு பாதுகாப்பு துறையிலுள்ள கப்பல் இலங்கைக்குள் சென்று வெறும் எரிபொருள் மாத்திரம் தான் நிரப்ப வந்தோம், எரிபொருள் நிரப்பும் போது பயிற்சிகளை கொடுத்தோம் என்றால், அதை நம்ப முடியாது என தெரிவித்த அவர், எல்லாமே பிராந்திய ரீதியான நிலையை தக்க வைத்துக் கொள்வதாகவே இதனை பார்க்க வேண்டும் என கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)