'நான் வெறும் நடமாடும் மார்பகங்கள் அல்ல... பெரும் வலியை உணர்கிறேன்'

பட மூலாதாரம், Melissa Ashcroft
- எழுதியவர், கிளேர் தாம்சன்
- பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
தனது மார்பகங்களின் அளவு காரணமாகப் பல ஆண்டுகளாக நாள்பட்ட வலியுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண், தேசிய சுகாதார சேவையில் (NHS) மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை பெறுவது முன்னெப்போதையும் விட அணுக முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.
மெலிசா ஆஷ்கிராஃப்ட், தனது 36எம் அளவு மார்பகங்கள் தனது வாழ்க்கையின் சில பகுதிகளைச் சிரமமானதாகவும், வேதனையளிப்பதாகவும், வலியுடனும் ஆக்கியுள்ளன என தெரிவித்தார். சில சமயங்களில் புதிதாக பிறந்த தனது மகளை கட்டிலில் இருந்து அவரால் தூக்க முடியவில்லை.
30 வயதான, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவரிடம், அவரது உடல் நிறை குறியீட்டெண் (BMI) சுமார் 35-ஆக இருப்பது, குறைப்பு அறுவை சிகிச்சைக்கான தேசிய சுகாதார சேவை பெறும் தகுதிக்கான அளவை விட அதிகமாக உள்ளது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பிளேயர்கோவ்ரியில் வசிக்கும் மெலிசா, தனது மார்பகங்களே சுமார் இரண்டரை ஸ்டோன் (16 கிலோ) எடையை கூட்டுவதால் தனது எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமமாக இருப்பதாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Melissa Ashcroft
"எனது தோள்களிலும் கீழ் முதுகிலும் வலி இருப்பதால் நான் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கிறது," என்று அவர் பிபிசி ரேடியோ ஸ்காட்லாந்தின் மார்னிங்ஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
"உதாரணமாக நான் ஒரு டிரெட்மில்லில் செல்லும்போது, நான் மிகவும் சங்கடமாகவும் பாலியல் ரீதியாகப் பார்க்கப்படுவது போலவும் உணர்கிறேன். மக்கள் என்னைப் பார்ப்பது போல் உணர்கிறேன், நான் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கும் போது எனக்கு அவ்வாறு பார்க்கப்படுவது தேவையில்லை."
'நான் வெறும் நடமாடும் மார்பகங்கள் அல்ல'
அதற்குப் பதிலாக, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நீச்சலைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறுகிறார். ஆனால் இன்னும் சில நேரங்களில் நீச்சலுடை அணியும் போது பாலியல் ரீதியாக தான் பார்க்கப்படுவதாக அவர் உணர்கிறார்.
"எனக்கு இந்த கவனம் தேவையில்லை," என்று அவர் கூறினார்.
"நான் வெறும் நடமாடும் மார்பகங்கள் அல்ல, எனக்கு ஒரு ஆளுமை இருக்கிறது, நான் ஒரு உண்மையான மனிதன்."
"இது எனக்கு ஒரு வேடிக்கை அல்ல, எந்தவொரு நாள்பட்ட வலியைப் போலவே, இதுவும் மிகவும் தீவிரமானது மற்றும் மிகவும் வருத்தமளிக்கிறது."
மெலிசா தனது 20 வயதில் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை குறித்துக் கேட்க முதன்முதலில் மருத்துவரை அணுகினார்.
அந்தச் சிகிச்சை எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தன்னிடம் கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மெலிசாவுக்கு இப்போது ஏழு வயது மகன் மற்றும் ஒன்பது மாத மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கர்ப்ப காலத்தில் அவரது மார்பகங்கள் இன்னும் பெரிதாகிவிட்டன.
வலியைக் குறைக்க அவர் பிசியோதெரபி போன்ற பல முயற்சிகளைச் செய்துள்ளார். ஆனால் இயல்பான வாழ்க்கையை வாழ மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை தேவை என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Melissa Ashcroft
பெண்களுக்கு மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை மறுக்கப்படுவது ஏன்?
தேசிய சுகாதார சேவையில் மார்பகக் குறைப்புக்கான சரியான அளவுகோல்கள் ஒரு நபர் வாழும் இடத்தைப் பொறுத்தது. ஆனால் மெலிசா போலவே பல பெண்களுக்கு உடல் நிறை குறியீட்டெண் மிக அதிகமாக இருந்ததால் அறுவைசிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் நிறை குறியீட்டெண் அதிகம் கொண்டவர்களுக்கு மயக்க மருந்தின் செயல்திறன் மற்றும் காயம் ஆறுதல், ரத்தக் கட்டிகள் மற்றும் தொற்றுகள் தொடர்பான அபாயங்கள் உள்ளன.
மார்பகக் குறைப்புக்குத் தகுதியுடையவர்களாக இருக்க, நோயாளிகள் பிஎம்ஐ அளவை பொதுவாக ஒரு வருடத்திற்குக் குறைந்தது 20 முதல் 27 வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சீராகிவிட்டதால், தேசிய சுகாதார சேவையின் பரிந்துரைக்குப் பிறகு தனது உடல் எடையைக் குறைக்க முடிந்தது என்று மெலிசா கூறுகிறார். ஆனால் அவரது மார்பகங்கள் மிகவும் கனமாக இருக்கும்போது அவரால் இந்தத் தகுதி அளவை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை குறிக்க உடல் நிறை குறியீட்டெண் (BMI) மிகவும் நம்பகமான வழியா என்பது குறித்து கடந்த பத்தாண்டுகளாக, ஒரு விவாதம் நடந்து வருகிறது.

சிகிச்சைக்கான காத்திருப்பு
காஸ்மெடிகேர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் செயின்ட் எல்லன்ஸ் மருத்துவமனைகளின் நிறுவனர் கில் பைர்ட், "மெலிசா இந்த தகுதியை பூர்த்திச் செய்தாலும் கூட, தேசிய சுகாதார சேவையில் அவருக்கு அறுவை சிகிச்சை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று கூறினார்.
"கோவிட் பேரிடருக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்கானோர் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள், தேசிய சுகாதார சேவை தற்போது மிகவும் தீவிரமான நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறது," என்று அவர் பிபிசி ஸ்காட்லாந்திடம் கூறினார்.
"தேசிய சுகாதார சேவை என்பது எல்லையற்ற வளம் கொண்டது அல்ல. ஆகவே இருப்பதைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவது அவசியம்."
"உடல் நிறை குறியீட்டெண் (BMI) ஒரு வரம்புக் காரணியாகும், ஏனெனில் மிகவும் தீவிரமான நோயாளிகளைப் பார்க்கும் போது, G, H அல்லது M அளவிலான மார்பக அளவு மற்றும் 30-க்கும் கீழ் பிஎம்ஐ உள்ள பெண்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்."
"மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை போன்ற செயல்முறைகளுக்கு மருத்துவ ரீதியாகப் பொருத்தமான அணுகலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம். அணுகல் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்." என ஸ்காட்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
"ஒரு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பரிந்துரை நெறிமுறை (NRP), நோயாளிகள் NRP செயல்முறைகளைப் பெறுவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவுகோல்களைப் பட்டியலிடுகிறது."
"இந்த அளவுகோல்கள் மருத்துவச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவையே தவிர, அணுகலைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக இந்த நடைமுறைகளினால் பலனடையக் கூடியவர்கள் அதைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












