'விஜய் வாகனம் வந்தவுடன்..' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி?

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நெரிசலை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்ன நடந்தது?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனக்கிழமையன்று விஜய்யின் வாகனம் நின்ற இடத்திற்கு சரியாக எதிரில் இருக்கிறது ரேவதியின் வீடு. சனிக்கிழமையன்று இரவு நடந்த பயங்கரத்தை அவரால் இப்போதும் மறக்க முடியவில்லை.

"காலையிலிருந்தே இந்த இடத்தில் அதிக கூட்டம் இருந்தது என்றாலும் மூன்று மணிக்குப் பிறகு கூட்டம் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஏழு மணிக்கு அவர் வரும்போது, அவர் வாகனத்தின் பின்னாலும் பெரிய அளவில் கூட்டம் வந்தது. அவர் வாகனத்தை சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்துவதற்காக, அந்தப் பக்கம் இருப்பவர்களை எதிர்பக்கம் வரச்சொன்னார்கள். ஏற்கனவே எதிர் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம் இருந்தது. இந்த இரண்டு கூட்டமும் ஒன்றாகச் சேர்ந்ததும் பெரும் நெரிசலாகிவிட்டது" என்கிறார் ரேவதி.

களத்தில் நடந்தது என்ன?

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது

ரேவதி குறிப்பிடும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில்தான் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலர் பலியாயினர்.

விஜய்யின் வாகனம் நின்ற பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

"அவர் இங்கே வந்து பேச ஆரம்பிக்கும்போதே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவ்வளவு மோசமில்லை. ஆனால், அவர் பேச ஆரம்பித்ததும் அருகில் இருந்த தகர கூரையின் மீது ஏற ஆரம்பித்தார்கள்." என விவரிக்கிறார் இதனை நேரில் பார்த்த வெங்கமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ்.

மேலும் "அந்தத் தகரம் தங்கள் மீது விழுந்துவிடும் என அதற்குக் கீழே இருந்த பெண்கள் வேறு பக்கம் நகர்ந்தார்கள். அதே நேரம் தகரமும் சரிந்து விழுந்தது. இதனால், அருகில் இருந்த சந்துக்குள் ஓட ஆரம்பித்தார்கள். அப்படி ஓடியவர்களில் பலர் கால் இடறி கீழே விழ, குழப்பம் ஏற்பட்டது. பலர் விழுந்தவர்கள் மேலே ஏறியே ஓட ஆரம்பித்தார்கள். கீழே விழுந்தவர்கள் மயங்கிக்கிடக்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்" என வெங்கடேஷ் கூறினார்.


''விஜய் வாகனம் வந்தவுடன்..'' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி?

பட மூலாதாரம், tvk

4 மணிக்கு மேல் அதிகரித்த கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசிவருகிறார். அதன்படி இந்த வாரம் நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பேசுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

கரூரின் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் 12 மணியளவில் பேசுவார் எனக் கூறப்பட்டிருந்ததால் காலை முதலே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. சுமார் 4 மணிக்கு மேல் கூட்டம் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.

நாமக்கல்லில் விஜய் பேசும்போதே பிற்பகலாகியிருந்தது. அங்கு பேசி முடித்துவிட்டு அவர் கரூரை வந்தடையும்போது மாலையாகியிருந்தது. அவர் பேசத் திட்டமிட்டிருந்த வேலுச்சாமிபுரத்திற்கு ஒரு கி.மீ. தூரத்திலிருந்த பாலத்திற்கு அருகிலிருந்தே பெரிய அளவில் கூட்டம் இருந்தது. பாலத்திற்கு அருகில் மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்த விஜய், பேச வேண்டிய இடத்திற்கு வந்து சேரும்போது சுமார் ஏழு மணியாகிவிட்டது.

ஏற்கனவே விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர்

'விஜய் வாகனம் வந்தவுடன்..'' கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, 'பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை'

வாகனத்தின் லைட் அணைக்கப்பட்டது

இதற்கிடையில் விஜய்யின் வாகனத்திற்காக தொண்டர்கள் வழிவிட வேண்டியிருந்ததால், அதுவும் நெரிசலை அதிகரித்தது. அவரது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி தகரத்தைப் போட்டு மூடப்பட்டிருந்தது.

நெரிசல் அதிகரித்ததால்,கூட்டத்தினர் அந்த தகரத் தடுப்பின் மீது ஏறினர். அதனால், அந்தத் தடுப்பு கீழே விழுந்தது. அதேபோல, அருகில் இருந்த கடைகளின் முன்னால் இருந்த தகரக் கூரைகளில் நிறையப் பேர் ஏறினர். அவர்களது எடை தாங்காமல் அந்த கூரைகள் சரிந்து, அதில் நின்று கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர்.

இந்த நிகழ்வை நேரில் பார்த்த கோமதி, நெரிசலுக்கு வேறொரு காரணத்தையும் சொல்கிறார். "விஜய் கரூர் பகுதிக்குள் வரும்போது பைபாஸ் பகுதியிலிருந்தே வண்டிக்குள் விளக்கை எரியவிட்டுத்தான் வந்தார். ஆனால், போலீஸ் குடியிருப்பு அருகில் வாகனம் வந்தபோது உள்ளே எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்துவிட்டார்." என்றார்.

பின், "கண்ணாடி ஷட்டரையும் சாத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் விஜய்யை பார்த்தால் போதும் என்றுதான் வந்திருந்தார்கள். விளக்கை அணைத்து, ஷட்டரையும் மூடிவிட்டதால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியவில்லை. இதனால், அங்கிருந்த கூட்டம் விஜய் பேசும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது." என்றார்.

மேலும் "இங்கே ஏற்கனவே கும்பல் இருந்தது. அந்த கும்பலோடு இந்த கும்பலும் சேரவே எல்லோரும் நசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்கிறார் கோமதி.

விஜய் கூட்டம்

பட மூலாதாரம், Sam Daniel/BBC

படக்குறிப்பு, விஜய் பேசவேண்டிய இடத்தில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் இருந்த நிலையில் அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களும் பரப்புரை நடந்த இடத்துக்கு வந்தனர்

யார் மீது தவறு?

விஜய் பேச ஆரம்பித்தபோது, அவர் பேசிக்கொண்டிருந்த பகுதியின் எதிர்ப்புரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த சாக்கடையின் மேல் பகுதி உடைந்து விழவும் அதன் மீது நின்று கொண்டிருந்த சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் நெரிசலை அதிகரித்தது. கீழே விழுந்தவர்கள் மீதே ஏறி பலர் ஓட ஆரம்பித்தனர்.

"இந்த இடத்தில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும்போது விஜய்யின் வாகனத்திற்கு இடமேயில்லை. அவர் போலீஸ் குடியிருப்பு அருகிலேயே பேசியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. பத்தாயிரம் பேர் இருக்கக்கூடிய இடத்தில் இடத்தில் முப்பதாயிரம் பேர் குவிந்தால் என்ன நடக்கும்?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜஸ்டின்.

அந்த இடத்தில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்து தங்கள் தரப்பைத் தெரிவிக்க தவெக சார்பில் யாரும் முன்வரவில்லை. ஆனால், சமூகவலைதளங்களில் அக்கட்சியினர் சிலர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

அதாவது, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றும் விஜய் பேசுவதற்கு கேட்ட இடம் கொடுக்கப்படவில்லையென்றும் விஜய் அந்த இடத்தை வந்தடைந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

கரூர் கூட்டத்தில் விஜய் வாகனம் வந்தவுடன் நெரிசல் ஏற்பட்ட தருணம் எது?

பட மூலாதாரம், TVK

'விஜய் கேட்ட இடத்தை ஒதுக்காதது ஏன்?

கரூரில் விஜய் தனது வாகனத்தை நிறுத்திப் பேசுவதற்கு பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி உள்பட நான்கு இடங்களை கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பகுதிகள் ஒதுக்கப்படாமல், கரூரில் இருந்து ஈரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், த.வெ.க கேட்ட பகுதிகள் ஒதுக்க முடியாதவையாக இருந்தன என்றார்.

"அவர்கள் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியைக் கேட்டார்கள். ஆனால், அந்தப் பகுதி அதிக ரிஸ்க் உள்ள பகுதியாக இருந்தது. குறிப்பாக, அந்த இடத்தின் ஒரு பகுதியில் பெட்ரோல் பங்க் இருந்தது." என்கிறார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம்.

மேலும் பேசிய அவர், "மற்றொரு பக்கம் ஆறும் பாலமும் இருந்தன. லைட் ஹவுஸ் பகுதி இல்லாவிட்டால் உழவர் சந்தை பகுதியைக் கொடுங்கள் என்றார்கள். அதுவும் மிகக் குறுகலான இடம். ஆனால், வேலுச்சாமிபுரம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்பதால் அந்த இடம் அவர்களது ஒப்புதலோடு வழங்கப்பட்டது" என்றார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு.

பட மூலாதாரம், Sam Daniel/BBC

மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

அதேபோல, இந்தக் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு வழங்க வேண்டுமோ அந்த அளவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

"ஒரு கூட்டத்தின் தன்மையைப் பொருத்து காவலர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட கூட்டம் ஒன்றால் 250 - 300 பேருக்கு ஒரு காவலர் இருப்பார். நடுத்தரமான ரிஸ்க் என்றால் 100 - 150 பேருக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவார். அதிக ரிஸ்க் உள்ள கூட்டம் என்றால் 50 பேருக்கு ஒருவர் நிறுத்தப்படுவார்கள். இந்தக் கூட்டத்திற்கு காவலர்கள், ஒரு எஸ்.பி., 3 ஏ.டி.எஸ்.பி., 4 டி.எஸ்.பி., 17 ஆய்வாளர்கள், 58 துணை ஆய்வாளர்கள் என 500 பேர் நிறுத்தப்பட்டனர்" எனத் தெரிவித்தார் டேவிட்சன் தேவாசிர்வாதம்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, மின்சார வயர்களை ஒட்டியுள்ள மரங்களில் சிலர் ஏறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர்களை காவல்துறை கீழே இறக்கிய பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் விஜய் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்பே நடந்ததாகவும் மின்வாரிய அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில் பெரும்பாலானவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.