டிஜிட்டல் டீடாக்ஸ்: போன் ஸ்கிரீனில் இருந்து விலகி இருப்பது எப்படி?
உங்கள் போன் நன்றாக இருந்து, உங்களுக்கு நேரமும் இருந்து, அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி இருக்கும்? கேட்கச் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றுகிறதா?
ஆரம்பத்தில் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது நீண்ட காலமாகத் தள்ளிப்போட்டிருந்த வேலைகளைச் செய்து முடிக்க ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். இவ்வாறு போனை பயன்படுத்தாமல் இருப்பதற்கு டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital detox) என்று பெயர்.
இதனை எப்படிச் செய்வது? இதற்கான தேவை என்ன?
போன் ஸ்கிரின்களிலிருந்து உங்களை விலக்கி யதார்த்த வாழ்க்கையுடன் தொடர்புகொள்ள வைப்பதுதான் இந்த டிஜிட்டல் டீடாக்ஸின் நோக்கம்.
டிஜிட்டல் டீடாக்ஸ் செய்ய விரும்பினால், இதற்காக வடிவமைக்கப்பட்ட சில செயலிகளில் ஒரு செயலியை மொபைலில் தரவிறக்க வேண்டியிருக்கும்.
இந்த செயலிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு உங்கள் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறது. எவ்வளவு நேரம் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
அந்த சமயத்தில் அனைத்து சமூக ஊடக செயலிகளும் செயல்படாமல் இருக்கும். அவசரக்கால தொலைப்பேசி அழைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். சில செயலிகள் எந்த சமூக ஊடகங்களை ஷட்-டவுன் செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கும்.
சில டீடாக்ஸ் செயலிகள் மொபைல் அழைப்புகளை அனுமதிக்கும். சில டீடாக்ஸ் செயலிகள் மொபைல் அழைப்புகளுக்கு நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். ஆனால், இத்தகைய செயலிகளைத் தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
டீடாக்ஸ் செய்தபின் மொபைலை பயன்படுத்த முயற்சி செய்தால், சில செயலிகள் உங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கும்.
அதாவது, நடைப்பயிற்சி செல்லலாம், பிடித்தமான உணவைச் சமைக்கலாம், குடும்பத்துடன் தேநீர் பருகி நேரம் கழிக்கலாம் அல்லது தோட்ட வேலைகள் செய்யலாம் போன்ற பல ஆலோசணைகளை வழங்கும். இது நீங்கள் தேவையில்லாமல் மொபைல் பயன்படுத்துவதைக் குறைக்க உதவும்.
மேலும், டீடாக்ஸ் செய்த அந்த நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கும். இதன் மூலம் மனமும், மூளையும் ஓய்வெடுத்து உற்சாகத்துடன் செயல்படும்.
தி இந்து ஆங்கில நாளிதழின்படி, இந்தியாவில் வயதுக்கு வந்த 86% பேரிடம் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 30% பேர் சுமார் ஆறு மணிநேரத்தை மொபைலில் கழிக்கின்றனர்.
ரெட்சீர் ஸ்டிரேட்டஜியின் (RedSeer Strategy) 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ளவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 7.3 மணிநேரம் மொபைல் அல்லது கணினி ஸ்கிரின்களை பார்க்கின்றனர்.
இது ஒருவரின் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
"நம்முடைய வீடுகளில் குடும்பத்தினருடன் இருக்கும் போது கூட நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்கிறோம்" என்கிறார் குடும்ப மனநல ஆலோசகர் ஜஸ்லீன் கில்
"மூளை சம்பந்தமான பல நோய்களுக்கு தனிமை உடன் தொடர்பு இருக்கிறது. உங்களின் துன்பங்கள் அல்லது பிரச்னைகளை யாருடனும் பகிராத போது அல்லது இந்த விஷயங்களுக்காக நீங்கள் ஏ.ஐ உதவியை நாடும்போது அது மனநல ரீதியிலான பிரச்னையாக மாறுகிறது" என ஜஸ்லீன் கூறினார்.
மேலும், பள்ளி மற்றும் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகிவரும் குழந்தைகளுக்கு இத்தகைய டிஜிட்டல் டீடாக்ஸ் மிகவும் முக்கியம் என்கிறார் ஜஸ்லீன் கில்.
"திரைகளில் இருந்து விலகி இருப்பதன் மூலம் மாணவர்களால் அதிக கவனம் செலுத்த முடியும். கால தாமதம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை இதனால் குறைக்கலாம்" என அவர் கூறினார்.
தற்போது நம்முடைய பல வேலைகள் போன் இல்லாமல் நடக்காது என்றாலும், மனித பழக்கவழக்கங்கள் மற்றும் தேவைகள் குறித்து நாம் மறந்து விடக்கூடாது ஜஸ்லீன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



