You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா - பிலிப்பைன்ஸ் இடையே தொடரும் பதற்றம்- நடுக்கடலில் என்ன நடந்தது?
- எழுதியவர், டெர்பெயில் ஜோர்டான்
- பதவி, பிபிசி நியூஸ்
தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் கடலோரக் காவல்படை கப்பல்களைக் கொண்டு மோதியதாக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கப்பல் நேரடியாக, வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேசமயம், சீனக் கப்பல் மீது பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சபீனா மணல் திட்டு அருகே சனிக்கிழமை நடந்த மோதல், தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பொருளாதார மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளின் சமீபத்திய நிகழ்வாகும்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள், அதே பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தொடர்பாக குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரு நாடுகளும் கூறுவது என்ன?
சபீனா மணல் திட்டு சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் இந்த மணல் திட்டு அமைந்துள்ளது.
ஆண்டுக்கு 3 டிரில்லியன் டால மதிப்புள்ள வர்த்தகம் நடைபெறும் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து பாதையாக தென் சீனக் கடல் உள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களுடையவை என்று கூறும் பகுதிகள் அனைத்தையும் சீனா உரிமை கோருகிறது.
சபீனா மணல் திட்டில் இருந்து திரும்பிச் செல்லுமாறு பிலிப்பைன்ஸை சீனாவின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், "அனைத்து ஆத்திரமூட்டல், தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்களையும் முறியடிப்போம்" என்று சீனா கூறியுள்ளது.
சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்
"சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல், கடும் நடவடிக்கைகள் இருந்த போதிலும்", தெரேசா மக்பனுவா எனும் தங்களது கப்பலை அங்கிருந்து நகர்த்தப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் சீனக் கப்பலால் "பல முறை" தாக்கப்பட்ட பின்னர், 97 மீட்டர் (318 அடி) நீளமுள்ள தெரேசா மக்பனுவா கப்பலில் சேதம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உயரதிகாரி ஜே டாரியேலா கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்க தூதர் மேரிகே எல் கார்ல்சன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் என்று இதனை விமர்சித்தார்.
"[பிலிப்பைன்ஸ்] பொருளாதார தனியுரிமை பகுதிக்குள் (EEZ) சட்டப்பூர்வமான செயல்பாடுகளை நடத்தும் போது, தெரேசா மக்பனுவா கப்பலை வேண்டுமென்றே தாக்கியது உட்பட சர்வதேச சட்டங்களை மீறும் சீனாவின் செயல்களை அமெரிக்கா கண்டிக்கிறது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் பிலிப்பைன்ஸுடன் துணை நிற்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
மோதல்களை தணிக்க முயற்சி
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீது சீனா பலமுறை குற்றம்சாட்டி வருகிறது. கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பிலிப்பைன்ஸ் “பொறுப்பற்ற தாக்குதல்களை தூண்ட” அமெரிக்கா தைரியமளிப்பதாக கூறினார்.
இந்த சர்ச்சை தென் சீனக் கடலில் ஒரு பெரிய மோதலை ஏற்படுத்தக் கூடும் என்று இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள் கவலைப்படுகிறார்கள்.
இவ்விவகாரத்தில் ஐ.நா சபை மத்தியஸ்தம் செய்வதற்கான பிலிப்பைன்ஸின் முந்தைய முயற்சியின் போது, ஒன்பது வரிக் கோடு (தென்சீனக் கடலின் பெரும் பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு) பகுதியில் சீனாவுக்கு எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லை என ஐ.நா உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சீனா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
ஆனாலும், சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் உடனடி மோதல்களைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
கடந்த மாதம் அவ்விரு நாடுகளும் பிலிப்பைன்ஸ் இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உணவு, பொருட்கள் மற்றும் பணியாளர்களுடன் மறுசீரமைப்புப் பணிகளை அனுமதிக்க ஒப்புக்கொண்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)