You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நெருக்கடியில் தள்ளப்படுமா?
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் கைவசம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபைச் சந்தித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
"பிரதமருடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. ஐசிசி விவகாரம் பற்றி அவரிடம் விளக்கினேன். அனைத்து வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இதனை தீர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கின்றன.
இந்தத் தொடரில் வங்கதேசம் சேர்க்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா?
மொஹ்சின் நக்வியின் கருத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோபமடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள செய்தியின்படி, இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், இந்தத் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மொஹ்சின் நக்வி பேசியதாக பாகிஸ்தான் செய்தித்தாளான டான் தெரிவிக்கிறது.
"ஐசிசி வாரிய கூட்டத்திலும் நான் இதையே தான் கூறினேன். ஒரு நாடு தனக்கு வேண்டுகிற முடிவை எடுப்பதோடு மற்ற நாடு என வருகிறபோது அதற்கு நேர்மாறாக செயல்படுவது என்கிற இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது. வங்கதேசம் ஒரு முக்கிய் பங்குதாரர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது," என அவர் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த நக்வி, "இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுக்கும். பிரதமர் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார்.
பாகிஸ்தானின் மாற்றுத் திட்டம் பற்றிய கேள்விக்கு, "முதலில் முடிவு வரட்டும். எங்களிடம் பிளான் ஏ,பி,சி மற்றும் டி உள்ளன." என்று பதிலளித்தார்.
எனினும் இந்தத் தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகினால் கணிசமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.
பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா?
பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"சர்வதேச அணிகளுடன் முத்தரப்பு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது. ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் பாகிஸ்தான் வெளியேற்றப்படலாம்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் ஆண்டு வருமானமும் இதனால் பாதிக்கப்படலாம். "பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசியின் வருவாய் பகிர்வு நிறுத்தப்படலாம்," என வாரிய அலுவலர்கள் தெரிவிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு, நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கான வருவாய் பகிர்வு முடிவு செய்யப்பட்டபோது ஐசிசியின் ஒட்டுமொத்த வருமானம் 600 மில்லியன் டாலராக இருந்தது.
2024-2027 காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 38.5% வருவாயும், இங்கிலாந்திற்கு 6.89% வருவாயும், ஆஸ்திரேலியாவிற்கு 6.25% வருவாயும் பகிர்ந்து கொடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 5.75% வருவாய் பகிர்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 34.51 மில்லியன் டாலர்.
முந்தைய சுழற்சியில் பாகிஸ்தானின் பங்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐசிசியின் வருவாய் பகிர்வு விதிமுறைகளில் தெளிவு இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாகிஸ்தான் கூறுகிறது. தற்போது உலக கோப்பையிலிருந்து விலகிக் கொண்டால் ஐசிசியில் இருந்து வழங்கப்படும் வருவாய் நிறுத்தப்படலாம். இது மேலும் நிதி நெருக்கடியை உருவாக்கக்கூடும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இல்லை என்கிறார் மூத்த விளையாட்டு செய்தியாளரும் எழுத்தாளருமான நீரு பாட்டியா.
"ஐசிசி வருவாய் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமாகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் புறக்கணித்தால் இத்தகைய பெரிய அளவிலான தொகை கிடைக்காது. அது இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவது கடினமாகிவிடும்." என்றார்.
"இன்று பாகிஸ்தான் புறக்கணித்தால் எதிர்வர இருக்கும் ஐசிசி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டில் இருந்தும் விலகும் நிலை உருவாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படுமா?
இந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்தால் ஐசிசிக்கும் இழப்பு ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 2027 வரை பாகிஸ்தானில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை முறையே பிடிவி (பாகிஸ்தான் தொலைக்காட்சி) மற்றும் மைகோவிற்கு ஐசிசி வழங்கியது.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான தொகையை ஐசிசி வெளியிடவில்லை. எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படும். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம்.
குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அது ஐசிசி வருவாயை கடுமையாகப் பாதிக்கும். பாகிஸ்தான் விளையாடினால் நிச்சயம் இந்தியா உடன் ஒரு போட்டி இருக்கும். ஐசிசிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் போட்டிகளில் அதுவும் ஒன்று.
ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமாகிறது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி தனது தி கேம் பிளான் என்கிற யூடியூப் சேனலில் பேசுகையில், "பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் சிக்கலைச் சந்திக்கும். பாகிஸ்தான் வெளியேறினால் எந்த அணி அதன் இடத்தை நிரப்பும். வேறு ஒரு அணியுடன் இந்திய அணி விளையாடினால் அந்தப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்குமா?" எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐசிசிக்கு இழப்பு ஏற்படுவது யதார்த்தமானது எனக் கூறும் நீரு பாட்டியா, "இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பிலும் இழப்பு ஏற்படும்." எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அந்த ஆபத்தான முடிவை எடுக்குமா?
இழப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தத் தொடரிலிருந்து விலகும் ஆபத்தான முடிவை பாகிஸ்தான் எடுக்குமா என்கிற கேள்வி எழுகிறது.
"வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் முழு அனுதாபங்களும் உள்ளன. ஐசிசியின் கடுமையான நடத்தையால் நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை என்கிற கேள்விக்கே இடமில்லை." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக நேஷனல் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
"ஐசிசி உறுப்பு நாடுகள் விளையாடும் ஒப்பந்தத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 2027 வரை அனைத்து ஐசிசி நிகழ்வுகளையும் கலப்பு முறையில் நடத்தும் முடிவுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நேரத்தில் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை புறக்கணிக்கும் யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வாசிக் அக்ரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"வங்கதேசம் விளையாடவில்லை என்பதற்காக பாகிஸ்தான் உலக கோப்பையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு வங்கதேசம் என்ன செய்துள்ளது? இதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் தன் மீது கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தி உலக கோப்பை வெல்ல வேண்டும்," என்றார் வாசிம் அக்ரம்.
இந்த நேரத்தில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முடிவை பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்கிறார் நீரு பாட்டியா.
"ஐசிசி தொடரில் கலந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர் கட்டணம் பெற முடியும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளுக்கு நிறைய அணிகள் வருவதில்லை. அதனால் ஐசிசி தொடர் என்பது அவர்களுக்கு மிகப் பெரிய நிகழ்வு. பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்தாலும் ஐசிசியில் அதன் நிலை பலவீனப்பட்டு போகும். ஏனென்றால் பாகிஸ்தானிற்கு ஆதரவாக எந்த உறுப்பினரும் வர மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு