You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - சிறையில் இருக்கும் பிறரின் நிலை என்ன?
- எழுதியவர், சயத் மோசிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு இந்தியர்களுக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மார்ச் 5ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ், முரளிதரன் பி.வி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
ரினாஷ் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்ததற்காகவும், முரளிதரன் இந்தியாவை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததற்காகவும் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இந்தியாவை சேர்ந்த ஷாஜாதி கான் என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மார்ச் 5ஆம் தேதியன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரினாஷ் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் அல்-அய்ன் என்ற டிராவல் ஏஜென்சியில் பணியாற்றி வந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக கடந்த பிப்ரவரி 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்தது.
எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம் இந்த இரண்டு விவகாரத்திலும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் சார்பில் கருணை மனு அனுப்பப்பட்டது. அவர்களை மன்னிக்குமாறு எமிரேட்ஸ் அரசிடம் முறையிடப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
- ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?
- இலங்கையில் தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை 'சித்திரவதை செய்து கொன்ற' தம்பதிக்கு மரண தண்டனை
- செளதி அரேபியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மரண தண்டனை - இந்தியர்கள் எத்தனை பேர்?
- கிரீஷ்மா: காதலனை கொன்ற காதலிக்கு நேரடி ஆதாரமே இல்லாதபோதும் மரண தண்டனை கிடைத்தது எப்படி?
26 பேருக்கு மரண தண்டனை: அவர்களின் நிலை என்ன?
வெளிநாடுகளில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறைகளில் தவித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
எமிரேட்ஸில் மட்டும் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை பெற்ற அனைத்து குடிமக்களுக்கும் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஷாஜாதி கான் உள்ளிட்ட மூன்று இந்தியர்களுக்கு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 26 இந்தியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.
இவர்கள் மட்டுமின்றி, 12 நபர்களுக்கு சௌதி அரேபியாவிலும், மூன்று பேருக்கு குவைத்திலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்ஸில் மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாணக்யாதாஸ் கன்சல்டன்சியில் வழக்கறிஞராக இருக்கும் அஷ்விண் சதுர்வேதி இது குறித்துப் பேசும்போது, "இங்கு, மிகவும் தீவிரமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்கின் தன்மையும் இங்கு பரிசீலிக்கப்படுகிறது. எமிரேட்ஸை பொறுத்தவரை, நீதி, மனித உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே தண்டனை வழங்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் தரவுகள்படி எமிரேட்ஸில் 3.5 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
கல்ஃப் நியூஸின் முன்னாள் ஆசிரியர் பாபி நக்வி, "எந்த மரண தண்டனையாக இருந்தாலும் அது உயர்நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படுகிறது. பிறகு தண்டனை வழங்கும் செயல்முறையின் ஓர் அங்கமாக, அந்த வழக்கு ஃபெடரல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
வழங்கப்படும் தண்டனையைக் கருத்தில் கொண்டு, ஆட்சியாளரின் ஒப்புதலுக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஒருவேளை இறந்தவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலும்," என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை பொறுத்தவரை அனைத்து சட்ட நடவடிக்கைகளும் அரபு மொழியில் உள்ளன. ஆனால், அரபு மொழி தெரியாதவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் இந்தத் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
கொலை, உளவு, இளம் பிராயத்தினரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கலகத்தின் போது தனிநபர்கள் கொல்லப்படுதல் போன்ற குற்றங்களுக்காக எமிரேட்ஸில் மரண தண்டனை வழங்கும் சட்டப் பிரிவுகள் உள்ளன.
எமிரேட்ஸில் நீதித்துறை மூன்று அடுக்குகளாகச் செயல்படுகிறது. ஒன்று கீழமை நீதிமன்றங்கள். அதன் பிறகு மேல் முறையீடு செய்வதற்கான நீதிமன்றம். இறுதியாக உச்சநீதிமன்றம். அங்குதான் ஒரு வழக்கின் இறுதி மேல்முறையீடு விசாரிக்கப்படும்.
இறுதி மேல்முறையீட்டு விசாரணையின்போது விசாரணை மற்றும் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஒரு நீதித்துறை காவலர் ஈடுபடுவார். இந்த காவலர்கள் அட்டர்ணி ஜெனரலின் நேரடிப் பார்வையின் கீழ் பணியாற்றுவார்கள். சட்டப்பிரிவு 46,47-இன் படி எமிரேட்ஸ் அரசு ஒரு குற்றவாளி எவ்வாறு கைது செய்யப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிறகு, தான் நிரபராதி என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை அளிக்க குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பிரிவு 48 உரிமை அளிக்கிறது.
கீழமை நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டு, அதை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்யும் வரை தண்டனையை நிறைவேற்ற இயலாது. அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த தண்டனைக்கு எதிராக ஃபெடரல் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
கொலை குற்றத்திற்கான மரண தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன வழி?
ஷாஜாதி கான் வழக்கில், அவருக்குத் தேவையான முறையான சட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் எமிரேட்ஸில் பணியாற்றும் சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
"அனைத்து குற்றங்களும் நியாயமான வகையில் விசாரிக்கப்படுகின்றன. வழக்கறிஞர் இன்றி ஒரு விசாரணையும் நடக்கக்கூடாது என்பதில் நீதித்துறை திட்டவட்டமாக உள்ளது. தனியாக ஒருவரை வழக்கறிஞராக நியமிக்க இயலவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்களை நீதித்துறையே ஏற்பாடு செய்து தருகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளும் குறைவான செலவில் வழங்கப்படுகின்றன," என்று அஷ்வின் சதுர்வேதி தெரிவிக்கிறார்.
எமிரேட்ஸில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், மரண தண்டனைகள் வழங்கும் வளைகுடா நாடுகளில் சௌதி அரேபியாவும் இரானும் முன்னிலை வகித்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளில் மொத்தமாக 1153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸில் சட்டங்கள் என்னதான் கடுமையானதாக இருந்தாலும், கொலைக் குற்றங்களில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு பணம் கொடுத்து மரண தண்டனையில் இருந்து பிழைத்துக் கொள்ளும் நடைமுறையும் பழக்கத்தில் உள்ளது. 'குருதிப் பணம்' எனப்படும் இந்தச் செயல்பாட்டை ஆங்கிலத்தில் 'ப்ளட் மணி' என்று அழைக்கின்றனர்.
அன்புக்கு உரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் விரும்பினால் குற்றம் சாட்டப்பட்ட தரப்பிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பை வழங்கலாம்.
இரு தரப்பிலும் ஒரு முடிவு எட்டப்படும்போது, குற்றம் சுமத்தப்பட்டவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவார். ஏமன் நாட்டில் உள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்கவும் இதே போன்றதொரு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நிமிஷா பிரியா விவகாரத்தில் நடப்பது என்ன?
நிமிஷா பிரியா விவகாரத்தில், கிட்டத்தட்ட 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 35 லட்சம்) கொடுத்து மன்னிப்புக்கான பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நிமிஷாவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் பேசியதாக, மனோரமா செய்தி ஊடகத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமனின் தலைநகரான சனாவில் 2017ஆம் ஆண்டில் இருந்து நிமிஷா சிறையில் உள்ளார். அவர் தலால் அப்துல் மஹ்தி என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக சிறை சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நிமிஷாவுக்கு வழங்கப்பட இருக்கும் தண்டனை குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும். மற்ற சட்ட வாய்ப்புகளை அவர்கள் குடும்பத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பதையும் அறிவோம். இந்திய அரசு இந்த விவகாரத்தில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.
செவிலியராகப் பயிற்சி பெற்ற நிமிஷா, கேரளாவில் இருந்து ஏமனுக்கு 2008ஆம் ஆண்டு சென்றார். அவருக்கு சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2012ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு நிமிஷாவின் கணவர் டாமி தாமஸும் அவருடன் சேர்ந்து சனாவுக்கு சென்றார். ஆனால் அவருக்கு அங்கு சரியான வேலை கிடைக்காத காரணத்தாலும், நிதிப் பிரச்னையாலும் 2014ஆம் ஆண்டு மகளுடன் கேரளாவுக்கு திரும்பிவிட்டதாக பிபிசியிடம் பேசிய டாமி தாமஸ் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு குறைவான வருவாயைத் தரும் வேலையை விட்டு நின்றுவிட்டு, சொந்தமாக ஏமனில் க்ளினிக் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். ஏமனின் சட்டப்படி, இதைச் செய்ய உள்ளூர் நபர் ஒருவர் கூட்டாளியாக இருக்க வேண்டும். அங்கே துணிக்கடை ஒன்றை நடத்தி வந்த மஹ்தி அவரின் கூட்டாளியாக இணைந்தார்.
நிமிஷா பணியாற்றிய அதே மருத்துவமனையில்தான் மஹ்தியின் மனைவிக்குப் பிரசவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு நிமிஷா இந்தியா வந்தபோது அவரோடு சேர்ந்து மஹ்தியும் கேரளாவுக்கு வந்தார்.
நிமிஷா, அவரது கணவருடன் இணைந்து ஏமனில் க்ளினிக் துவங்குவதற்குத் தேவையான பணம் ரூ.50 லட்சத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து திரட்டினார்கள். ஒரு மாதம் கழித்து, க்ளினிக் துவங்கும் கனவுடன் ஏமனுக்கு சென்றார் நிமிஷா.
ஏமனில் உள்நாட்டுப் போர் துவங்கியபோது, 4,600 இந்திய குடிமக்கள் நாடு திரும்பினார்காள். 1000 வெளிநாட்டவரையும் இந்தியா ஏமனில் இருந்து வெளியேற்றியது. ஆனால் நிமிஷா நாடு திரும்பவில்லை. 2017ஆம் ஆண்டு மஹ்தி கொலை செய்யப்பட்ட தகவலைத் தெரிந்து கொண்டார் தாமஸ். மஹ்தியின் உடல் துண்டாக்கப்பட்டு ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. நிமிஷா ஒரு மாதம் கழித்து ஏமனில், சௌதி அரேபிய எல்லையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு "மஹ்தி, நிமிஷாவின் திருமண புகைப்படங்களைத் திருடி அதில் மாற்றம் செய்துள்ளார். அதில் மஹ்தி தன்னுடைய புகைப்படத்தைச் சேர்த்து அவருக்கும் நிமிஷாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது," என்று கூறியதாக நிமிஷாவின் அம்மா பிரேமா குமாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நிமிஷாவின் விவகாரத்தில், அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்தது.
வியன்னா உடன்படிக்கை 1963இன் கீழ், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு தத்தம் நாட்டு குடிமக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க உரிமை உள்ளது. மேலும் விசாரணையின்போது அவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவிக்கிறது.
இதுபோன்ற விவகாரங்களில் நேர்மையான விசாரணை மற்றும் உயர்மட்ட சட்ட உதவி போன்றவற்றை உறுதி செய்ய தூதரகம் அரசாங்கங்களை நாடலாம்.
இந்தியாவுக்கும் எமிரேட்ஸுக்கும் இடையிலான நாடு கடத்தும் உடன்படிக்கையின்படி (Extradition Treaty), குறிப்பிட்ட சூழலில் குற்றம் சாட்டப்பட்டவரை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 21, தனிநபரின் உயிர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதை இந்தியா சர்வதேச அரங்கில் பயன்படுத்தி மனித உரிமையைப் பாதுகாக்க வாதிடலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)