பிபிசியின் இந்திய சேவைகள் மறுசீரமைப்பு

பிபிசி இந்தியா மறுசீரமைப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் க்ரிகரி
    • பதவி, பிபிசி செய்திகள்

பிபிசி தனது இந்தியச் சேவைகளை மறுசீரமைப்பு செய்கிறது.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு இணங்கும் வகையில் பிபிசியின் இந்த மறுசீரமைப்பு அமையும்.

இதன்படி, பிபிசியின் நான்கு ஊழியர்கள் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, பிபிசியின் ஆறு இந்திய மொழிச் சேவைகளைக் கொண்ட, ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்ற இந்திய நிறுவனத்தை உருவாக்குவார்கள்.

பிபிசி இந்தியாவின் ஆங்கில மொழிச் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகள் பிபிசியிடமே இருக்கும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் இருக்கும் பிபிசியின் இந்திய அலுவலகங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய விதிகளின் படி இந்தியாவைத் தளமாகக் கொண்ட டிஜிட்டல் செய்தி நிறுவனங்களில் அதிகபட்ச நேரடி அந்நிய முதலீடு 26% ஆக வரையறுக்கப்பட்டது.

அதாவது, நாட்டில் டிஜிட்டல் செய்திகளை வெளியிடும் எந்தவொரு நிறுவனமும் பெரும்பான்மையாக இந்திய குடிமக்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.

புதிய நிறுவனம்

தற்போது பிபிசியின் இந்திய மொழிகளின் தலைவராக இருக்கும் ரூபா ஜா இந்த கலெக்டிவ் நியூஸ்ரூம் நிறுவனத்திற்குத் தலைவராக இருப்பார். அவரோடு முகேஷ் ஷர்மா, சஞ்சோய் மஜூம்தர் மற்றும் சாரா ஹாசன் ஆகியோர் கலெக்டிவ் நியூஸ்ரூமின் தலைமைப் பொறுப்புகளை வகிப்பர்.

பிபிசி தமிழ், பிபிசி குஜராத்தி, பிபிசி ஹிந்தி, பிபிசி மராத்தி, பிபிசி பஞ்சாபி, மற்றும் பிபிசி தெலுங்கு ஆகிய ஆறு மொழிச் சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மற்றும் பிபிசி இந்தியா ஆங்கில யூடியூப் சேனலின் ஊழியர்கள் ஆகியோர் இந்த நிறுவனத்தில் இணைவர்.

இதுகுறித்து ரூபா ஜா கூறுகையில், "பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், பிபிசியின் இந்திய மொழிச் சேவைகள் மற்றும் தனித்துவமான தரமான வெளியீடுகள் ஆகியவை நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குச் செய்திகளைத் தெரிவிக்கும், அதேபோல மகிழ்விக்கும். இதை இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் உறுதியாக நம்பலாம்," என்றார்.

பிபிசி இந்தியா மறுசீரமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பையில் இருக்கும் பிபிசி அலுவலகத்தில் வரித்துறை ஆய்வுகள் நடத்தப்பட்டன

வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிபிசியின் தில்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பிபிசி ஆய்வுக்கு உட்பட்டுத்தப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து இங்கிலாந்தில் ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்த சில வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரியில் இவை நடந்தேறின.

அந்த நேரத்தில், இந்திய அரசாங்கம் இந்த ஆய்வுகள் சட்டபூர்வமானவை என்றும், இந்தியாவில் ஒளிபரப்பப்படாத ஆவணப்படத்திற்கும் ஆய்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியது.

இந்தியாவில் தற்போது பிபிசியின் சேவைகளில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிபிசி நியூஸ் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜொனாதன் முன்ரோ, இந்தியாவில் பிபிசியின் இருப்பு "ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது," என்று கூறினார். இது கலெக்டிவ் நியூஸ்ரூமின் உருவாக்கத்துடன் மேம்படும் என்றும் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)