பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா? சந்தேக நபரின் படம் வெளியீடு

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், CCTV

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக பெங்களூருவில் இருந்து

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவை கர்நாடக காவல்துறை வெளியிட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை கைது செய்ய 10 குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர்.

பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

அந்தப் பெண் 40 சதவீதம் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஐந்து வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு மதியம் 12:55:32 மணிக்கும், இரண்டாவது குண்டுவெடிப்பு 12:55:37 மணிக்கும் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இந்த இடத்திற்குச் சாப்பிட வருவது வழக்கம்.

பெங்களூரு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், CCTV FOOTAGE/POLICE SOURCES

இந்த வெடிவிபத்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் வாஷ்பேசின் பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான ஆணிகள், நட்டுகள், போல்ட்கள் சிதறிக் கிடந்தன.

குண்டுவெடிப்பு நடத்திய நபர் முதலில் ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசின் அருகே உள்ள மரத்தடியில் பையை வைத்துவிட்டுச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐஇடி குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தரமையா தான் முதலில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். குண்டுவெடிப்பை நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பின்போது உணவகத்தில் இருந்த ஒரு நபர், "நான் இங்கு மதிய உணவு சாப்பிட வந்தேன். ஒரு மணி இருக்கும். அப்போது எனக்கு பலத்த சத்தம் கேட்டது. வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது வெடிகுண்டு வெடித்தா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை," என்றார்.

காணொளிக் குறிப்பு,

"இந்தச் சத்தம் கேட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் சிலர் இதை சிலிண்டர் வெடிப்பு என்றும் அழைக்கிறார்கள். உள்ளே சுமார் 35-40 பேர் இருந்தனர். குண்டு வெடித்ததற்குப் பிறகு நிறைய புகை எழுந்தது," என்றார் அந்த நபர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது

இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் நாற்பது சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 45 வயது பெண்ணும் அடங்குவார்.

இந்தப் பெண் புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புரூக்ஃபீல்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை குறித்து தெரிவித்தார்.

பெங்களூரு: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு - இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குண்டுவெடிப்பு நடந்த இடத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார்.

"காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 45 வயது பெண் ஒருவர் 40 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளார். அவர் ஐசியுவில் இருக்கிறார்," என்றார்.

“அந்தப் பெண்ணின் இடது பக்கத்தில் வெட்டுக் காயங்கள் உள்ளன, அதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும். வெடி சத்தத்தால், அவரது செவிப்பறையும் வெடித்துள்ளது,” என விரிவாகக் கூறினார்.

இருப்பினும், இது மிகவும் தீவிரமான வெடிப்பாக இருந்திருந்தால், நோயாளிகள் இன்னும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று டாக்டர் பிரதீப் குமார் கூறினார்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா?

பெங்களூரு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், CCTV FOOTAGE/POLICE SOURCES

இது தொடர்பாக கர்நாடக அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சிலிண்டர் வெடி விபத்துடனும் தொடர்புப்படுத்திப் பேசப்பட்டது.

ஆனால், அந்த உணவகத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யா ராகவேந்திரா, எந்த சிலிண்டராலும் வெடிப்பு ஏற்படவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தடயவியல் ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடக டிஜிபி அலோக் மோகன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

அவர் செய்தி முகமையான பிடிஐக்கு அளித்த பேட்டியில், உணவகத்தில் நடந்த விபத்து வெடிகுண்டு வெடிப்பு என்பதை உறுதிப்படுத்தினார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு மற்றும் 2022 செப்டம்பர் 23 ஆம் தேதி ஷிவமோகாவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இந்த குண்டுவெடிப்பையும் ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

IED இல் பயன்படுத்தப்பட்ட டைமர் அந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட டைமரைப் போன்றது என்று போலீஸ் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

ஷிவமோகா குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் கோவை சிலிண்டர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளது. இந்த வெடிப்பு அக்டோபர் 2022 இல் நடந்தது.

மைசூரில் இருந்து பெங்களூரு வந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் யாரோ ஒருவரா அல்லது ஏதேனும் ஒரு கும்பல் உள்ளதா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை." என்றார்.

வெளியிடப்பட்ட சந்தேக நபரின் படங்கள் மற்றும் வீடியோக்களில், அவர் தொப்பி மற்றும் அறுவை சிகிச்சை முகமூடியை அணிந்துள்ளார். இந்த சந்தேக நபர் ஓட்டலுக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி வேகமாக ஓட்டலை நோக்கி செல்கிறார்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், CCTV

சித்தராமையா கூறுகையில், “ஒரு நபர் முகமூடி மற்றும் தொப்பி அணிந்து பேருந்தில் வந்து ரவா இட்லியை வாங்கி சாப்பிட்டு பையை வைத்திருந்தார்.

இந்த பை வாஷ்பேசின் பகுதியில் உள்ள மரத்தின் அருகே வைக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்றார்.

நவம்பர் 19, 2022 அன்று மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில், வெடிக்கும் பொருட்கள் அடங்கிய எரிந்த பிரஷர் குக்கரை கர்நாடக போலீசார் மீட்டனர். இது தவிர, ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து எரிவாயுவை எரிக்கும் இயந்திரத்தின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த குண்டுவெடிப்பில் டிரைவர் மற்றும் பயணி காயமடைந்தனர். குக்கரில் எரிந்த பேட்டரிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இது டைமர் மூலம் இயக்கப்படும் சாதனமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் மாருதி 800 ரக கார் வெடித்தது. சங்கமேஸ்வரர் கோவில் அருகே எல்பிஜி சிலிண்டர் வெடித்தது. மேலும், அந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், CCTV FOOTAGE/POLICE SOURCES

இந்த மூன்று சம்பவங்களிலும், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் ஷாரிக் என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தனஹள்ளியில் உள்ள குளத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருந்தார். இந்த மூன்று வழக்குகளையும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது.

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் ராமேஸ்வரம் கஃபே வழக்கில் மற்றொரு பொதுவான அம்சம் என்னவென்றால், டைமர் டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா என்ன சொன்னார்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா

பட மூலாதாரம், ANI

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரில் போலீஸ் அதிகாரியின் விசாரணையை மேற்கோள் காட்டி, இது ஐஇடி குண்டுவெடிப்பு என செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். யாரோ அந்தப் பையை அங்கு வைத்திருந்தனர். ஐஇடி குண்டுவெடிப்பு என்று கூறுகிறார்கள், இது தீவிரவாத தாக்குதலா இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலைத் தெரிவித்தேன். சம்பவ இடத்தில், போலீஸ் இருக்கிறார்கள்."

இந்த விவகாரத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார், என்ன வகையான குண்டுவெடிப்பு என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஇடி வெடிகுண்டுதானா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "ராமேஸ்வரம் உணவகத்தில் மதியம் ஒரு மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அது குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு. சுமார் பத்து பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.

பாஜக என்ன சொல்கிறது?

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா

பட மூலாதாரம், X/@TEJASVI_SURYA

இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான ஆர்.அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் சிலிண்டர் வெடிப்பு பற்றிய கதையை உருவாக்க முயன்றார்கள். இப்போது வியாபாரப் போட்டி என்ற கதையை உருவாக்குகிறார்கள்.

விசாரணை அமைப்புகளைத் தங்கள் வேலையைச் செய்ய காங்கிரஸ் அரசால் ஏன் அனுமதிக்க முடியவில்லை? வாக்கு வங்கியின் கட்டாயம் என்ன? விசாரணை நடத்த சுதந்திரம் வழங்க வேண்டும், பெங்களூரு மக்களுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)