You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீர முத்துவேல்: சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர் - யார் இவர்?
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இன்று (ஜூலை 14, வெள்ளிக்கிழமை) மதியம் 2:35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம்3 எம்4 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது நாடு முழுதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தருணத்தில், சந்திரயான் 3-இன் திட்ட இயக்குநராக ஒரு தமிழர் பணியாற்றியிருப்பது தமிழகத்துக்கு இரட்டிப்புப் பெருமையாக அமைந்துள்ளது.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டபோது வீர முத்துவேல் என்ன பேசினார்?
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் பேசிய வீரமுத்துவேல், விண்கலம் மிக நுணுக்கமான சுற்றுவட்டப் பாதையில் சரியாக செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“நிலவுக்கு நமது பயணம் இப்போது துவங்கியுள்ளது,” என்றார்.
இஸ்ரோவின் பெங்களூரு கண்காணிப்பு மையத்திலிருந்து விண்கலத்தைக் கூர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போவதாகக் கூறினார்.
“திட்டத்தின் மிக முக்கியமான கட்டங்கள் அடுத்து வரவிருக்கின்றன. விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்,” என்றார்.
கல்வி முழுவதும் தமிழகத்தில் முடித்தவர்
வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ஆம் வகுப்பு வரை படித்தார்.
பிறகு, விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயந்திரவியலில் டிப்ளமோ முடித்தார். பிறகு, சென்னை சாய்ராம் கல்லுாரியில், பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திரவியல் பிரிவில் படித்தார்.
அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி. அரசு பொறியியல் கல்லுாரியில், முதுநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ'வில் பணிக்குச் சேர்ந்தார்.
இவற்றுக்கு இடையே, இவர் சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார்.
‘என் மகனின் உழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம்’
இந்த முக்கியமான தருணத்தில் வீர முத்துவேலின் தந்தை பழனிவேலிடம் பிபிசி தமிழ் தொலைபேசி மூலம் உரையாடியது.
தனது மகனின் விடாமுயற்சியும் திறனுமே அவர் இந்நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்றார் பழனிவேல்.
“எனது மகன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் தனது விடாமுயற்சியால் எப்போதும் முதலிடம் பெறுவார். அவரது தனித்தன்மையான செயல்பாடும் அறிவுமே அவர் இந்த நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம்,” என்றார் பழனிவேல்.
மேலும் பேசிய அவர், “என் மகனின் இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் அவரது உழைப்பு மட்டுமே," என்றும் கூறினார்.
தொடர்ந்து ‘சந்திரயான்’ திட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் தமிழர்கள்
சந்திரயான் திட்டத்திற்கு ஒரு தமிழர் தலைமை வகிப்பது இது முதல்முறை அல்ல.
சந்திரயான்-1இன் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2இன் திட்ட இயக்குநராக இருந்த வனிதா ஆகிய இருவரும் தமிழர்கள்.
இதனால் மூன்று சந்திரயான் திட்டங்களிலும் திட்ட இயக்குநர்களாக தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகித்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்