You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிசேரியன் செய்த போது 4,000 பெண்களுக்கு ரகசிய கருத்தடையா? நடந்தது என்ன?
- எழுதியவர், சுனெத் பெரேரா
- பதவி, பிபிசி உலக சேவை
மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இவை அனைத்தும் இலங்கையில், இஸ்லாமியர்களை வெறுக்கும் பெளத்த மதத்தினரிடையே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள். பெரும்பான்மையாக உள்ள பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் நாட்டில் சிறுபான்மையாக உள்ள இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக இதுபோன்ற ரகசிய முயற்சி செய்யப்படுவதாக இந்தப் பொய்களின் வழியே சொல்லப்படுகிறது.
வடமேற்கு நகரமான குருணாகலைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இப்படியான ஒரு நம்ப முடியாத குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.
"நான் ஒரு இஸ்லாமியர், 4,000 பெளத்த பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்ததாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது," என்கிறார் அறுவை சிகிச்சை மருத்துவரான மொஹமத் ஷஃபி.
மருத்துவர் ஷஃபி, சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது பெளத்த பெண்களின் ஃபலோபியன் குழாய்களை (fallopian tubes) அழுத்தியதாகவும், அதனால் பெண்கள் அடுத்து குழந்தைகள் பெறுவதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஷஃபி, மே 24, 2019 அன்று பயங்கரவாத சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
"நான் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னை ஏன் இப்படி நடத்துகிறார்கள் என நினைத்தேன். என் மனைவி, குழந்தைகளுக்காக நான் உயிர் வாழவேண்டும்," என்றார் டாக்டர் ஷஃபி.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ஷஃபி, 60 நாட்கள் சிறையில் இருந்தார்.
ஜூலை 2019இல், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னரும் அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்ததால் மருத்துவப் பணியிலிருந்து கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர் மே 2023இல் இலங்கையின் சுகாதார அமைச்சகத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள்
இலங்கையின் 22 மில்லியன் மக்கள்தொகையில் 70% பேர் பெளத்தர்களாகவும், 10% இஸ்லாமியர்களாகவும், சுமார் 12% பேர் இந்துக்களாகவும், 7% பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.
மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முன், டாக்டர் ஷஃபி அனைத்து மதத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்.
ஆனால், ஏப்ரல் 21, 2019, ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், மருத்துவர் ஷஃபியின் வாழ்க்கையையே மாற்றியது.
இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்புடன் தொடர்புடைய, சுயாதீனமாகத் தீவிரவாதிகளாக மாறிய, ஒரு குழுவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், 2009இல் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போருக்கு பிறகு இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு இலங்கை முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது.
அவர்களைப் பழிவாக்கும் நோக்கத்தில் மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, ஒரு கும்பலால் இஸ்லாமியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பொய்யான குற்றச்சாட்டு
மே 23, 2019 அன்று, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ஒரு மாதத்திற்குப் பின், ‘திவயின’ என்ற வெகுஜன நாளிதழ் தனது முதற்பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், "தவ்ஹீத் ஜமாத் மருத்துவர் 4,000 சிங்கள பௌத்த தாய்மார்களுக்கு கருத்தடை செய்துள்ளார். விவரங்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறோம். மருத்துவரைக் கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு உள்ளூர் இஸ்லாமிய குழுக்களில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஒன்றாகும்.
அந்த செய்தித்தாள், தனது கூற்றுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. அதேவேளையில், டாக்டர் ஷஃபியின் அடையாளத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் டாக்டர் ஷஃபி மற்றும் அவரது இருப்பிடத்தின் படங்கள், பௌத்த பெண்களை கருத்தடை செய்ததாகச் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டுகளுடன் பேஸ்புக்கில் (Facebook) வெளிவந்தன.
"நான் பகிரங்கமாக பொதுவெளியில் இத்தகைய குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை," என அவர் பிபிசியிடம் கூறினார்.
சமூக ஊடகங்களில் தனக்கு எதிராகப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் குறித்தும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பது குறித்தும் புகார் தெரிவிப்பதற்காக ஷஃபி, மருத்துவமனை வார்டு ஆலோசகர் மற்றும் சீனியர் ஹவுஸ் அலுவலர்களுடன், குருணாகல் கற்பிக்கும் வைத்தியசாலை இயக்குனர் சரத் வீரபண்டாராவை சந்தித்ததாகக் கூறினார்.
இருப்பினும், வைத்தியசாலையில் உள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே தன்னால் பேச முடியும் எனவும், வெளியில் உள்ள விஷயங்கள் பற்றித் தன்னால் எதுவும் கூற முடியாது எனவும் டாக்டர் வீரபண்டாரா பதிலளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, டாக்டர் ஷஃபி கைது செய்யப்பட்டார்.
“பொது இடையூறு ஏற்படாமல் இருக்க நான் வாரன்ட் இல்லாமல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.
'நச்சு ஊடகம்'
செய்தித் தொலைக்காட்சிகள் இந்தச் செய்தியை வெளியிடத் துவங்கிய பிறகு இந்த விவகாரம் மக்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது. இன்னும் பல தவறான குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
"நான் கட்டமைக்கப்பட்டேன். நான் பயங்கரவாதி என்று பகிரங்கமாக முத்திரை குத்தப்பட்டேன். நச்சுத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் என் வாழ்க்கையை அழித்துவிட்டன," என்று டாக்டர் ஷஃபி கூறினார்.
டாக்டர் ஷஃபியின் மனைவி பாத்திமா இமாரா பணிபுரிந்த மருத்துவமனைக்கு வெளியே புத்த பிக்குகள் போராட்டம் நடத்தினர்.
"எனது மனைவிக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அவர் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சினார்," என்று டாக்டர் ஷாபி கூறினார், மேலும் அவர் தனது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் கூறினார் ஷஃபி.
"எனது மூத்த மகள் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள், பள்ளிக்குச் செல்ல விரும்பினாள். ஆனால், பொதுமக்களுக்கு எங்கள் மீதிருந்த கோபத்தால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவள் மனச்சோர்வடைந்திருந்தாள். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குப் புதிய பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளும் கொழும்புக்கு குடிபெயர்ந்தனர். அப்போதிருந்து, அவரது குழந்தைகள் மூன்று பள்ளிகள் மாறியுள்ளனர்.
"எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட வேண்டியிருந்தது. மேலும் எனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் அவர்களிடம் பணமும் இல்லை," என்றார் ஷஃபி.
ஷஃபி பற்றி சுமார் 800 பெண்கள் வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில், ஜூன் 27, 2019 அன்று இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினர் டாக்டர் ஷஃபிக்கு எதிரான ரகசிய கருத்தடை நடைமுறைகள் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வாக்குமூலங்களைத்தான், மருத்துவமனை நிர்வாகம் புகார் எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், அரசு புலனாய்வு சேவை உட்பட இலங்கையில் உள்ள பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகள், ஷஃபியை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளன.
தேர்தல் பிரசாரம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் போர்க்கால பாதுகாப்புத் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதைத் தடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.
நவம்பர் 2019இல் நடைபெற்ற இந்தத் தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வு உச்சத்தை எட்டியது.
"இனவெறி என்பது ஒரு போதை. துரதிர்ஷ்டவசமாக, இனவெறிக்கு அடிமையானவர்கள் அதைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார்கள்," என்கிறார் டாக்டர் ஷஃபி.
"இலங்கை அரசியல்வாதிகள் என்னை அவதூறாகப் பேசினர். அது என்னால் கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு அதிர்ச்சியாக இருந்தது."
'கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஜெல்'
கருத்தடை என்பது இலங்கையை கைப்பற்ற இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் என்ற திட்டமிட்டப் பொய்ப் பிரசாரம் மற்ற சந்தர்ப்பங்களிலும் எழுந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில், இஸ்லாமிய உணவக உரிமையாளர் ஒருவர் பௌத்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, உணவில் கருத்தடை மாத்திரைகளை' சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பாறையில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான உணவகம், கடைகள், ஹோட்டல்கள் மீது பௌத்த கும்பல்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
டாக்டர் ஷஃபியின் கைதுக்குப் பிறகு, முக்கிய பௌத்த பிக்குவான, வரக்காகொட ஸ்ரீ ஞானரத்னா, இஸ்லாமியர்கள் மீது கல்லெறிதலை பகிரங்கமாக பொதுவெளியில் ஆதரித்தார், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் உணவகங்களைப் புறக்கணிக்குமாறு பௌத்த மதத்தினரை வலியுறுத்தினார்.
மற்றொரு புறம், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஆடையகங்களில் பௌத்தப் பெண்களுக்கான உள்ளாடைகளில் 'கருத்தடை ஜெல்' (sterilisation gel) போடப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது.
சமூக ஊடகங்களில் இந்த வதந்தி பரவியதால், பௌத்த பேரினவாதிகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்ததுடன், அங்கு பொருட்கள் வாங்கியவர்களையும் தாக்கினர்.
அம்பாறையில் நடைபெற்ற இந்த வன்முறைக்குப் பிறகு, பொய்க் குற்றச்சாட்டுகளில் சொல்லப்பட்டதைப் போல அங்கு கருத்தடை மாத்திரைகளோ, ஜெல்களோ புழக்கத்தில் இல்லை என்று தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு ஐ.நா தள்ளப்பட்டது.
ஊடக நெறிமுறைகள்
உள்ளூர் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் பிரசுரிக்கப்படும் இதுகுறித்த செய்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய சில குழுக்களில், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் ஒன்று. இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தனவின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் இந்தச் செய்தி குறித்து எந்த உண்மையான புலனாய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்படவில்லை.
‘கதையின் இரு பக்கங்களையும் உள்ளடக்கிய’ புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி, ஆனால் அவை வெளியிடப்படாமல் போன பல்வேறு உள்ளூர் பத்திரிக்கையாளர்களிடம் பிபிசி பேசியது.
"இது வாசகர்களை கோபப்படுத்தும் மற்றும் செய்தித்தாள் விற்பனையை பாதிக்கும்" என்று ஆசிரியர்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வெகுஜன ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மருத்துவர் ஷஃபிக்கு எதிரான வெறுப்பு பிரசாரமே, பெளத்த பிக்குகள் இஸ்லாமியர்கள் மீது கல்லெறிய அழைப்பு விடுத்ததற்கு நேரடியான காரணம். மேலும், இது முற்றிலும் எந்த அடிப்படையும் இல்லாதது என்று ஜயவர்தன கூறினார்.
"டாக்டர் ஷஃபியை பற்றி வாக்குமூலம் அளித்த பெண்களில் 168 பேர் மட்டுமே குழந்தைப்பேறுக்காக சிரமப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். மற்றவர்கள் இந்த செய்தியைப் பற்றி கேள்விப்பட்டவுடன் முன்வந்தவர்கள்.
அவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். புகார் அளித்தவர்கள் அனைவரின் பட்டியலும் எங்களிடம் உள்ளது, தோராயமாக அதை உறுதி செய்துள்ளோம். டாக்டர் ஷஃபி கைது செய்யப்பட்டப் பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவர்களில் 120 பேர் குழந்தை பெற்றுள்ளனர்,” என்று ஜயவர்தனா கூறினார்.
'குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரே வழி என் கடமையைச் செய்வதுதான்’
டாக்டர் ஷஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் மே 2023இல் குருணாகல் கற்பிக்கும் வைத்தியசாலையில் தனது பணியை மீண்டும் தொடங்கினார்.
அவரின் மூன்றாண்டு சம்பளம் சுமார் 2.7 மில்லியன் இலங்கை ரூபாயை பெற்றார். இதை அத்தியாவசிய மருந்துகள் வாங்குவதற்காக சுகாதார அமைச்சகத்திற்குத் தானமாக வழங்கினார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக, பல இலங்கை மருத்துவர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் டாக்டர் ஷஃபி, தான் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றுவதில் உறுதியாக இருந்தார்.
"எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை மீண்டும் அங்கு பணிக்குச் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள், ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரே வழி அதே மருத்துவமனைக்குச் சென்று அதே நிலையில் மீண்டும் பணியாற்றுவது தான்," என்கிறார் ஷஃபி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்