ஏஜென்சி மோசடி: கனடாவாழ் இந்தியர்கள் பலரது எதிர்காலம் கேள்விக்குரியதாகிறதா?

கனடா, விசா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வினோத் கரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கனடாவில் உள்ள பல இந்திய மாணவர்களில் பலர், போலியான கல்லூரி சேர்க்கை ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிற்குள் நுழைந்ததற்காக அரசாங்கத்தால் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.

என்ன பிரச்னை?

வெட்கத்தால், பல மாணவர்கள் வெளிப்படையாக வெளியே வருவதில்லை. ஆனால் இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவர், அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 150 முதல் 200 வரை இருக்கலாம் என்று கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய மாணவர்கள் தாங்கள் நிரபராதி என்றும், ஜலந்தரில் உள்ள குடியேற்ற ஆலோசனை நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகவும் அவர்களே இந்த ஆவணங்களை வழங்கியதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் மற்ற ஏஜென்சிகளுக்கும் இதில் தொடர்புள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, அமெரிக்காவில் உள்ள போலி பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்காக 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தீயாக பரவியது.

கனடாவில் இருந்து டிம்பிள் கே பிபிசியிடம் தொலைபேசி உரையாடலில், "என் மூளையே இருண்டு கிடக்கிறது. என்னால் முன்னோக்கி செல்லவோ அல்லது பின்நோக்கி செல்லவோ முடியாது" என்று கூறினார்.

அவர் 2017 டிசம்பரில் மாணவர் விசாவில் கனடா வந்தார். அவருக்குத் திருமணமாகி விட்டது. கணவர் இந்தியாவில் இருக்கிறார். இந்த மாணவி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவரது தந்தை ஜலந்தரில் தையல்காரராக இருக்கிறார், தாயார் இல்லத்தரசி.

அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற டிம்பிள், நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தார்.

“இரண்டு முறை பேங்க் பரீட்சை எழுதினேன். வெற்றி பெற வில்லை. சலித்துப் போய் இங்கு (கனடா) அப்ளை செய்தேன். இங்காவது ஏதாவது வழி பிறக்கும் என்று... இவ்வளவு படிச்சிருக்கேன். அதுக்கு ஏதாவது பலன் இருக்கணுமில்லையா? " என்கிறார் அவர்.

பல குடும்பங்களில் குறிப்பாக பஞ்சாபில், மேற்கத்திய நாட்டில் வசிப்பது மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக விசா மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜலந்தர் மற்றும் அது சார்ந்த கல்வி மற்றும் குடிபெயர்வுச் சேவைகளுக்கு பிரஜேஷ் மிஸ்ரா பற்றி உறவினர் ஒருவர் டிம்பிளிடம் கூறினார்.

"அப்போது அவர் மிகவும் நல்லவராக இருந்தார். அவர் எனது எல்லா ஆவணங்களையும் பார்த்தார்." என்கிறார் அவர்.

இறுதியாக நவம்பர் 2017 இல் அவருக்கு கனடா விசா கிடைத்தது.

"ஒரு கல்லூரி எனது ஆவணங்களை ஏற்றுக்கொண்டதாகவும், கல்லூரி சேர்க்கை கடிதம் வந்துவிட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார்," என்று கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கூறுகிறார்.

கனடா, விசா

பட மூலாதாரம், Getty Images

டிம்பிள் கனடாவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படிப்புக்கு விண்ணப்பித்தார். அதற்காக அவர் அப்போது ரொக்கமாக ரூ.12 லட்சம் செலுத்தினார். இதில் அவரது கல்லூரிக் கட்டணம் மற்றும் பிற செலவுகள் அடங்கும், இது கனடாவில் அவரது செலவுகளை ஈடுகட்ட அவரிடம் போதுமான பணம் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

ஆனால் கனடா வந்து இரண்டு நாட்களில் டிம்பிள் தனது கல்லூரியில் வேலைநிறுத்தம் நடப்பதாகவும், அவர் வேறு கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பழைய கல்லூரிக் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

டிம்பிள் 2019 இல் கனடாவில் தனது படிப்பை முடித்தார். அவருக்கு வேலை அனுமதிச்சீட்டும் கிடைத்தது. ஆனால் மே 2022 இல், அவர் நிரந்தர வசிப்பிடத்திற்காக விண்ணப்பித்த போது, அவர் முதலில் தேர்வு செய்த கல்லூரியின் ஏற்புக் கடிதம் போலியானது என்று பதில் வந்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அவர் இந்தியாவில் கனேடிய மாணவர் விசா மற்றும் கனடாவில் சேர்க்கை பெற்றார்.

இது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்து இன்னும் பல கேள்விகள் உள்ளன.

வெளியேற உத்தரவு

குடிவரவு அதிகாரிகளைச் சந்திக்குமாறு டிம்பிளுக்கு உத்தரவு வந்தது. பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு பிறகு "வெளியேற்ற உத்தரவு" வழங்கப்பட்டது.

அதாவது, கனடாவில் இருந்து ஒரு வருடத்திற்குள் வெளியேற்றப்படும் நிலை. ஆனால் உங்களைப் பற்றிய தவறான தகவலைக் கொடுத்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு கனடாவில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

குடியேற்ற அதிகாரிகளைச் சந்தித்த டிம்பிள், அது குறித்து, "நேர்காணலின் போது நான் மிகவும் பயந்தேன், நான் எதுவும் பேசவில்லை. நான் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவேன் என்று நினைத்தேன்," என்றார்.

இந்த உத்தரவை எதிர்த்து அவர் கனடா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வழக்கறிஞர் ஜஸ்வந்த் சிங் மங்காத் இதேபோன்ற சூழ்நிலையில் சிக்கியுள்ள பல மாணவர்களின் சார்பிலும் வழக்காடுகிறார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெரும் கட்டணத்தில் போலி சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறுகிறார். சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாக்கள் வழங்கப்பட்டன.

கனடா, விசா

பட மூலாதாரம், Getty Images

நடந்தது என்ன?

மாணவர்கள் கனடாவிற்கு வந்த பிறகு அல்லது அதற்கு சற்று முன்பு, இந்திய குடிவரவு நிறுவனம் மாணவர்களிடம் சில காரணங்களால் வேறு ஏதேனும் கல்லூரியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கூறியது.

பல மாணவர்கள் புதிய கல்லூரிகளில் படிப்பை முடித்தனர், வேலை அனுமதிக்கு விண்ணப்பித்தனர், ஆனால் அவர்கள் நிரந்தர வசிப்பிடத்திற்கு விண்ணப்பித்தபோது, அவர்களின் முந்தைய கல்லூரிகளின் சேர்க்கைக் கடிதங்கள் போலியானவை என்று கூறப்பட்டது.

டிம்பிள், "விமான நிலையங்களில் குடியேற்ற அதிகாரிகள், விசா வழங்கும் போது, ஆவணங்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடிக்கவில்லை, நாங்கள் எப்படி கண்டுபிடிப்போம் என்று எதிர்பார்க்கிறார்கள்?” என்று கேட்கிறார்.

இது தொடர்பாக நாங்கள் கல்வி மற்றும் இடப்பெயர்வுச் சேவைகள் நிறுவனம் மற்றும் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஜலந்தர் துணை ஆணையர் ஜஸ்பிரீத் சிங், பிபிசி நிருபர் பிரதீப் சர்மாவிடம், இது குறித்து தன்னிடம் யாரும் புகார் செய்யவில்லை என்றும், ஆனால் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஏஜென்சியின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி (CBSA) மின்னஞ்சலில், குறிப்பிட்ட நபர்களைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று கூறியது. ஆனால் 2022இல் அவர்களின் அதிகாரிகள் தனியார் கல்லூரி திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்குப் பணி அனுமதி பத்திரமாக $25,000 (சுமார் 21 லட்சம்) வழங்கப்படும் திட்டத்தை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்குவதே இதன் ஒரே நோக்கமாக இருந்தது.

கனடா, விசா

பட மூலாதாரம், Getty Images

தவிடுபொடியான நம்பிக்கை

இந்த விவகாரத்தால், பலரது நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் தொடர்பில் இருக்கிறார்கள்.

சமந்தீப் சிங் பஞ்சாபில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த வாழ்க்கை பெறும் கனவில் கனடாவுக்கு வந்தவர்.

“மாணவர் விசா பெற முயற்சி செய்யத் தொடங்கியபோது, நடைமுறை தெரியாததால், ஒரு முகவரைப் பணியமர்த்தினேன். இதுபோன்ற போலி ஆவணங்களும் பயன்படுத்தப்படும் என்று நான் நினைக்கவில்லை'' என்கிறார் அவர்.

அவர், கனடாவில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அதற்கு ரூ.14-15 லட்சம் கொடுத்தார். இதற்காக அவர் கடன் வாங்க வேண்டியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து அவர், "இங்குள்ள வாழ்க்கை முறை நன்றாக இருக்கிறது, ஆனால் இந்தியாவை விட இங்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும். தொலைவிலிருந்து பார்த்தால் மிகப் பெரிய ஊதியம் என்ற தோற்றம் இருக்கிறது, உண்மையில் அப்படி இல்லை. சரியான முகவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்” என்கிறார்.

"நாங்கள் ஜலந்தருக்குச் சென்றபோது, எல்லா இடங்களிலும் முகவர்கள் காணப்பட்டனர், ஆனால் அந்த ஏஜென்சிக்கு எதிராக எங்களால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது, ஏனெனில் அவர்கள் எங்கள் கோப்பைத் தயாரித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை." என்று அவர் நினைவு கூருகிறார்.

சமந்தீப் கூறுகையில், "நல்ல வாழ்க்கை முறை அமைய வேண்டும் என்பது தான் கனவு. கனவுகளுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கிருந்து திரும்பிச் செல்பவர்கள் மிகவும் கடினமாக உழைப்பார்கள். அதை இந்தியாவில் எந்த வெட்கமும் இல்லாமல் செய்தால், பலன் கிடைக்கும்,” என்கிறார்.

27 வயதான இந்தர்ஜித் தனது தவறு எதுவும் இல்லாததால் இந்தியாவிற்குத் திரும்பப் போவதில்லை என்று கூறுகிறார்.

டிரக் ஓட்டுநரான இந்தர்ஜித், "என்ன தீர்வு என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாது. இது எங்கள் தவறு அல்ல. நாங்கள் எப்படி திரும்பி வருவோம்" என்று கூறுகிறார்.

மாணவர்களை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நிபுணர்கள் கருத்து. எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் மாணவர்களும் சற்று தெளிவு பெறவேண்டும். நம்பகமான முகவர்கள் மற்றும் கல்லூரிகளைப் பற்றி அறிந்து புரிந்து கொள்வது அவசியம்.

வழக்கறிஞர் ஜஸ்வந்த் சிங் மங்கத், "இது உங்கள் பணம், உங்கள் வாழ்க்கை, உங்கள் எதிர்காலம்" என்கிறார்.

இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்தியாவில் உள்ள கனேடிய தூதரகத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. பதில் கிடைத்ததும், அதை இங்கே பகிர்கிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: